டி.என்.ஏ (DNA) - நிறைவுப்பகுதி

இது போன்ற சிக்கல்களைக் கையாள பயன்படுத்தப்படும் அணுகுமுறையில்  ஒன்று, உயிரினம் சார்ந்தோ அல்லது பாலினம், வயது சார்ந்தோ மாறுபடாத பிறழ்வு வீதத்தை ( Mutation rate) கொண்ட பிறழ்வுகள் மீது நமது கவனத்தைச் செலுத்துவது. மரபியலாளர்கள் இதனை CpG மாற்றங்கள் (CpG Transitions) என்றழைகின்றனர்.


அதாவது DNA யில் உள்ள சைட்டோசின் (Cytosin) நியூக்கிளியோடைட் தானாகவே தைமின் (Thymine) னாக மாற்றமடைவதாகும். இந்த மாற்றங்கள் உயிரணுக்கள் பிரிவதால்( Cell division) டி.என்.ஏ படி எடுக்கப்படும் போது உருவாக்கும் தவறுகள் இல்லை. எனவே இப் பிறழ்வுகளின் வீதம் உயிரினத்தின் வாழ்க்கை வரலாற்று மாறிகளை சாராது காலத்தை பொறுத்து சீரான வீதத்தில் மாற்றம் அடையும்.


CpG மாற்றங்களின் மீது கவனத்தை குவித்து ஆய்வுகள் மேற்கொண்ட மரபியலாளர்கள் மனிதன், சிம்பன்சி பிரிவு 9.3 மில்லியன் முதல் 6.5 மில்லியன் ஆண்டுகளுக்குள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கணக்கிட்டுள்ளனர். இது படிமங்களின் வாயிலாக மதிப்பிடப்பட்ட காலத்துடன் ஒத்தமைகிறது.  
மற்றொரு அணுகுமுறை பாலினம் மற்றும் பூப்பெய்தும் வயது, தலைமுறைக்கான கால அளவு போன்ற வாழ்க்கை வரலாற்றுப் பண்புக்கூறுகளின் அடிப்படையிலான மூலக்கூறு கடிகார வீதங்களுடன் இசைந்து செல்லக் கூடிய மாதிரிகளை உருவாக்குதலாகும். இந்த முறையைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் சிம்பன்சி - மனித பிரிதல் நிகழ்ந்த காலத்தை மதிப்பிட, அம்மதிப்பு CpG முறையிலும், படிம வயது கணிப்பு முறையுடனும் முரண்படாதிருந்தது. இருந்த போதிலும் முதாதையர் உயிரினங்களின் வாழ்க்கை வரலாற்றுப் பண்புக்கூறுகளைப் பற்றி எதுவும் உறுதியாகத் தெரியாத நிலையில் நிச்சயமற்ற உத்தேச மதிப்பீடுகளுக்கே வழிவகுக்கும்.



தொன்மையான படிமங்களிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட டி.என்.ஏ களைப் பகுப்பாய்வு செய்வதே பெரும்பாலும் நேரடியான தீர்வாக அமையும். நிலவியல் முறைகளில் (GEOLOGICAL METHODS)  படிம மாதிரிகளின் வயதைக் கணித்தல் சுயாதீனமாக செய்யப்படுவதால், மரபியலாளர்கள் இதனைக் குறிப்பிட்ட காலகட்டத்திற்கோ அல்லது மக்கள் கூட்டத்திற்கோ உரிய மூலக்கூறு கடிகாரத்தின் அளவீடாக உபயோகிக்கலாம்.


சமீபத்தில் இந்த நிலைப்பாடு நாம் நியாண்டர்தால் மனிதனிடமிருந்து பிரிந்த காலம் குறித்த விவாதத்தைத் தீர்த்து வைத்தது. 2016 ஆம் ஆண்டில் மரபியலாளர்களால் டி.என்.ஏ பிரித்தெடுக்கப்பட்ட படிமங்கள் 430000 ஆண்டுகள் தொன்மையானவை. இவை நியாண்டர்தால்களின் முன்னோர்கள் அவர்கள் வம்சம் ஹோமோ சேப்பியன்களிடமிருந்து பிரிந்த பின்னரான காலத்துக்குறியது. பரிணாம மரத்தின் எந்தப் பகுதியை இந்த படிமங்கள் சேர்ந்தவை என்பதை அறிந்த மரபியலாளர்கள், மனித இன பரிணாம வளர்ச்சியின் இந்தக் கால கட்டத்திற்கு மெதுவாகச் செல்லும் மூலக்கூறு கடிகாரமே ஏற்புடையது என்பதை உறுதிப்படுத்தினர். 


ஆக நாகரீக மனிதன் நியாண்டர்தால் மனிதனிடமிருந்து 765000 முதல் 555000 ஆண்டுகளுக்கு முன்பாக கிளைத்திருக்க வேண்டும் என்ற முடிவைத் தருகிறது. மூலக்கூறு கடிகாரங்களின் சிக்கல்களை மரபியலாளர்கள் களைவதன் காரணத்தால், நாம் டி.என்.ஏ யிலிருந்து நேரடியாக மனித பரிணாம வளர்ச்சி கூறித்து இன்னும் அதிகமாக அறிந்து கொள்ளத் தயார் நிலையில் இருக்க இயலுகிறது. 

  

முற்றும் .

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)