புதிரான எப்சிலன் ஆரிகே (Epsilon Aurigae) விண்மீன் - வெ.சுப்ரமணியன்.
விண்ணில்
காணும் புதிரான பல விண்மீன்களில் எப்சிலன் ஆரிகே (Epsilon Aurigae) யும் ஒன்று. பொதுவாக
நம் எதிர்பார்ப்புக்கு பொருந்தி வராத செயல்பாடு கொண்ட இது ஒரு கிரகண இருமை விண்மீன்
(eclipsing binary star). இதன் பொலிவு மாற்றங்களான ஒளிர்தலும் மங்குதலும் சற்றே வினோதமானது.
இதுவே பல தலைமுறைகளாக தொலைவாக உள்ள இந்த விண்மீனில் என்ன நடக்கிறது என்பது குறித்து
பல்வேறு ஊகங்களுக்குக் காரணமாக இருந்தது. இன்று முதல் ஒரு வார காலத்திற்கு அதாவது
24.03.2017 முதல் 30.03.2017 வரையிலான ஏழு நாட்களும் புற உதவி எதுவுமின்றி வெறும் கண்களாலேயே
இருள் கவியத் தொடங்கியதும் தலைக்கு மேலாக வானில் கேப்பெல்லா(Capella) விண்மீனைக் காணமுடியும். இதுதான்
ஆரிகே என்ற தேரோட்டி (Charioteer) விண்மீன் கூட்டத்தின் மிகப் பொலிவான விண்மீன். இதற்கு
அருகில் முக்கியத்துவம் வாய்ந்த முக்கோண வடிவத்தில் சிறு பிள்ளைகள் (The Kids) என்றழைக்கப்படும்
மூன்று சிறிய விண்மீன்களைக் காணலாம். இம் மூன்றில் உச்சியில் ஒளிர்வதே எப்சிலன் ஆரிகே
விண்மீன்.
அரபி
மொழியில் இந்த விண்மீன் அல்மாஸ் (Almaaz) அதாவது ஆட்டுக்கிடா (he-goat) என்று பொருள்படும் பெயரால் அழைக்கப்படுகிறது.
கேப்பெல்லா விண்மீன் எப்சிலான் ஆரிகேயை விட அதிகம் பொலிவாகத் தோன்றக் காரணம்
அது நமக்கு அருகில் இருப்பதுதான் தான். கேப்பெல்லா நம்மிடமிருந்து 42 ஒளி ஆண்டுகள்
தொலைவில்தான் இருக்கிறது. மாறாக எப்சிலான் ஆரிகே, அதைப் போல சுமார் 50 மடங்கு தொலைவில்
அதாவது 2000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு 27 ஆண்டு கால இடைவெளிகளில் எப்சிலான் ஆரிகே தோராயமாக இரண்டு ஆண்டுகள்,
அதாவது 640 முதல் 730 நாட்கள் காலத்திற்கு மங்கலாகிறது. கடைசியாக 2009 – 2011 ஆண்டு
கால கட்டத்தில் மங்கலாகத் தெரிந்த இந்த விண்மீன் அதற்கு முன்னர் 1982 – 1984 கால கட்டத்தில்
மங்கலாகத் தோன்றியதாக பதிவாகியுள்ளது.
எப்சிலன் ஆரிகே ஒரு கிரகண இருமை விண்மீன் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தோம்.
இரண்டு விண்மீன்களில் பொலிவு குறைந்த வின்மீன் வழக்கமாக பொலிவு மிக்க விண்மீனை கிரகணித்து
மறைக்கும். ஆய்வுகள் பொலிவு குறைந்த விண்மீனைச் சுற்றி ஒரு பெரிய தூசு வட்டு (disk
of dust) இருப்பதாகச் சுட்டுகின்றன. இந்த வினோதமான விண்மீனில் என்ன நடக்கிறதென்பதை
டேவிட் டார்லிங் தன் வலைதளம் The Worlds of David Darling இல் நன்கு விவரித்துள்ளார்.
(http://www.daviddarling.info/encyclopedia/E/Epsilon_Aurigae.html)
இந்த இருமை விண்மீன்களில் பொலிவான விண்மீன் ஒரு F வகை மஞ்சள் நிற மீ அரக்க
(supergiant) விண்மீனாகும். இதன் விட்டம் புவிக்கும், சூரியனுக்கும் இடைபட்ட தூரமான
1AU (1 வானியல் அலகு) அளவுடையது. அதாவது 150 மில்லியன் கிலோமீட்டர்கள். நமது கதிரவனின்
விட்டம் 1.3914 மில்லியன் கிலோமீட்டர்தான். கதிரவனுடன் ஒப்பீட்டளவில் இத்தனை பெரியதாக
வடிவமுடையதாக இருப்பினும், ஒவ்வொரு 27 ஆண்டு கால இடைவெளியில் 2 ஆண்டுகாலம் எதோ ஒன்றால்
மறைக்கப்பட்டு மங்கிப் போகிறதெனில் உண்மையிலேயே
இரண்டு பொருள்களின் வடிவங்களின் ஒப்பீட்டில், அந்த மறைக்கும் பொருள் மாபெரும் விகிதாச்சாரத்தைப்
பெற்றிருக்க இருக்க வேண்டும்.
தற்போது நிலவும் கருத்துப்படி இந்த மர்மமான பொலிவு குறைந்த கூட்டாளி
விண்மீனின் முனைக்கு அருகில் சுற்றிலும் மறைக்கும் கனமான தூசு வளையம் ஒன்று
இருக்க வேண்டும். நாம் காணும் மீ அரக்க விண்மீன் இதிலிருந்து சுமார் 30 வானியல் அலகு
தொலைவில் அமைந்தும், கூட்டாளித் துணை விண்மீனைச் சுற்றியுள்ள தூசு வளையம் சுமார்
20 வானியல் தொலைவு விட்டமுடையதாகவும் இருக்க வேண்டும்.
இந்த வளையத்தின் நடுவில் ஒருவகையான இடைவெளி இருக்க வேண்டும். காரணம் கிரகணத்தின்
மத்திம காலத்தில் எப்சிலன் ஆரிகே சிறிதளவு பொலிவு பெறுகிறது. தூசு வளையத்தின் நடுவில்
என்ன உள்ளது என்பது குறித்து பெரிய அளவில் எந்தக் கருத்தும் இதுவரை முன் வைக்கப்படவில்லை
என்றபோதும், இரு கருத்தியல் மாதிரிகளில்(Theoretical model), இப் பகுதியில் சுமார்
நான்கு கதிரவ நிறை(Solar mass) கொண்ட பொருள்
இருக்கலாம் என்றும் , பிறிதொன்றில் சுமார் பதினைந்து கதிரவ நிறை கொண்ட பொருளும் இருக்கலாம்
என்றும் கணித்துள்ளன.
இது கடுமையாக வெளிப்பாயும் காற்றால் ஒரு விண்மீன் உருவாக்கிய வட்டாகவோ அல்லது
நெருக்கமான சுற்றுப்பாதையில் இயங்கும் இரு B வகை விண்மீன்களாகவோ இருக்கலாம்.
தேரோட்டி எனப்படும் ஆரிகே விண்மீன் கூட்டத்தின் எப்சிலன் ஆரிகே விண்மீன் தொடர்பான
புதிரை விளக்க பல முரணான கொள்கைகள் போட்டியில் களத்தில் இன்றளவும் உள்ளன.
கட்டுரை மூலம்: http://earthsky.org/tonight/epsilon-aurigas-distant-and-mysterious-star?
Comments
Post a Comment