வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (17)

நமது கதிரவன் ஒரு நடுத்தர நிறையுள்ள விண்மீன். கதிரவனும்,கதிரவக் குடும்பமும் சுமார் 5000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாயு மற்றும் தூசுக் கூட்டத்திலிருந்து தோன்றியது. வாயு, தூசிக் கூட்டத்தில் ஹைட்ரஜனும் ஹீலியமும் இருந்திருக்குமானால், புவியில் கண்டிப்பாக கனமான தனிமங்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை. புவியில் இத்தகைய தனிமங்கள் கிடைப்பதால் நமது கதிரவன் முதலாம் தலைமுறை விண்மீன் ஆக இருக்க முடியாது. அது இரண்டாம் தலைமுறை விண்மீனாக அதாவது ஒரு விண்மீனின் இறப்பின் பொழுது வெடித்துப் பரவிய கனமான தனிமங்கள் செறிந்த வாயுக்கூட்டத்திலிருந்து உருவானதாக இருக்க வேண்டும். புவியில் காணப்படும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் தவிர மற்ற பிற கனமான தனிமங்கள் எல்லாமே பல கோடி ஆண்டுகளுக்கு முன் இறந்த ஏதோ ஒரு விண்மீனிலிருந்தே உண்டாகியிருக்க வேண்டும்.



அப்படி ஒரு விண்மீனின் கண்கவர் காட்சியான இறப்பு மட்டும் நிகழாமல் இருந்திருந்தால் நம் புவி, அதில் காணப்படும் தனிமங்கள், தாவரங்கள், மனிதர்களாகிய நாம் , பிற உயிரினங்கள் மற்றும் கதிரவக் குடும்பத்தின் மற்ற கோள்கள் இவை எதுவுமே தோன்றியிருக்காது. ஒரு பெரு நோவா வெடிப்பிற்குப் பின்னரே கதிரவன் தோன்றியிருக்க வேண்டும் என்பதை எப்படி உறுதியாகக் கூற முடியும்? இதற்கு விடையளிக்கும் விதத்தில் கிடக்கும் ஆதாரம் விண்வீழ் கற்கள் (Meteorites ) ஆகும்.


இவை எப்பொழுதாவது விண்வெளிலிருந்து விழும் பாறைகளை ஒத்த பொருட்களாகும். இவைகள் கதிரவனும் மற்ற கோள்களும் உருவான பின்னர் மிச்சமிருந்த சிறுசிறு துண்டுகள் எனக் கருதப்படுகின்றன. பெரும்பாலான விண்வீழ் கற்கள் தூசியின் அளவிலேயே இருக்கும். மேலும் இவை புவியின் வளிமண்டலத்தில் நுழையும் பொழுது ஏற்படும் உராய்வின் காரணமாக புவியை அடையும் முன்பாகவே முழுவதுமாக எரிந்து விடும். இரவு வானில் இத்தகைய பொருள் விழும் பொழுது ஒளிக்கீற்றாகத் தெரியும். எனவே இவற்றை எரிமீன்கள் (Meteors or Shooting Stars ) என்கிறோம்.

எப்பொழுதாவது ஒரு முறை சற்றே அளவில் பெரிய விண்வீழ் கல்லானது விழும் பொழுது முழுமையாக எரிவதற்கு முன்பாகவே புவியில் விழும். இப்படிக் கிடைத்த விண்வீழ் கற்கள்தான் கதிரவனின் முன்னோர் குறித்த இரகசியங்களை அறிந்து கொள்ள ஒரு சிறிய தடயமாக விளங்குகின்றன. நமீபியாவில் உள்ள அறுபது டன் நிறையுடன் 2.7 மீட்டர் நீளமுள்ள ஹோபா விண்வீழ்கல் தான் இதுவரை அறியப்பட்ட பெரிய விண்வீழ்கல்லாகும்.


ஐசோடோப் என்பவை ஒரு தனிமத்தின் அணுக்கருகளில் ஒரே எண்ணிக்கையிலான புரோட்டான்களையும், மாறுபட்ட எண்ணிக்கையிலமைந்த நியுட்ரான்களையும் கொண்டவை. எனவே ஐசோடோப்புகள் ஒரே அணு எண்ணையும், வேறுபட்ட அணு நிறையையும் கொண்ட தனிமத்தின்அணுக்களாகும். எடுத்துக்காட்டாக அயோடின் ஐசோடோப் காட்டப்பட்டுள்ளது.



ஒரு தனிமத்தின் எல்லா ஐசோடோப்புகளும் நிலையானவை அல்ல. சில கதிரியக்கச் சிதைவடையும்.அவ்வாறு சிதைவடைந்து வேறு ஒரு புதிய தனிமமாக மாற்றமடையும்.அலுமினியம் - 26 என்ற அலுமினியத்தின் ஐசோடோப் கதிரியக்கச் சிதைவடைந்து மக்னீசியம் - 26 ஆக மாற்றமடையும்.




இந்த மக்னீசியம் - 26 ஐசோடோப்பை அலுமினியம் - 26 லிருந்து மட்டுமே கதிரியக்கச் சிதைவு மூலம் பெற முடியும். புவியில் கிடைக்கப் பெற்ற விண்வீழ் கற்களில் காணப்படும் மக்னீசியம் - 26, கதிரவன் மற்றும் இதர கோள்கள் உருவாகக் காரணமான வாயுக் கூட்டத்தில் அலுமினியம் - 26 இருந்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. 


ஆச்சரியப்படத்தக்க வகையில் 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் நாள் இரவு 1.05 மணிக்கு  மெக்ஸிகோ  (Mexico ) நாட்டில் சிவாவா மாநிலத்தில் விழுந்த மிகப் பெரிய விண்வீழ்கல்லின் உடைந்த துண்டுகளின் மொத்த நிறை சுமார் இரண்டு டன்னாக இருந்தது. ஆலண்ட் விண்வீழ் கற்கள் என்றழைக்கப்படும் இத் துண்டுக் கற்களிலிருந்து கிடைத்த ஐசோடோப் (Isotope) களிலிருந்தே பல மிக முக்கியமான தடயங்கள் பெறப்பட்டன. 



மேலும் ஆலண்ட்( Allende meteorite) விண்வீழ் கல்லில் காணப்படும் பிற ஐசோடோப்புகள் , வாயு - தூசுக் கூட்டம் உருக்குலைவடைந்து கதிரவன் மற்றும் கோள்கள் உருப்பெற்ற 5000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே அதிகக் கனமான தனிமங்கள் இவற்றில் இருந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

மேற்கண்ட கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ,கிட்டத்தட்ட 5100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்ஒரு பெருநோவா வெடித்துச் சிதறும் பொழுது ஏற்பட்ட அதிர்வுகளால் தூண்டப்பட்டது கதிரவனின் பிறப்பு.இது கதிரவனின் பிறப்பிற்கு சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்றிருக்க வேண்டும் என்றும் வானவியலாளர்களால் நம்பப்படுகிறது. முன்னர் கூறப்பட்ட பெருநோவா வாயுக் கூட்டத்தை உருக்குலைக்க முடுக்கியது மட்டுமின்றி நாமெல்லாம் உருவாக்கப்படக் காரணமான அனைத்து தனிமப் பொருட்களையுமளித்தது என்பது மறுக்கப்படவியலாத பேருண்மையாகும்.


முற்றும்.

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)