வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (16)

                                                தூசுத்துகளிலிருந்து தூசுத்துகளுக்கு


பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கீதையில் கூறியபடி மண்ணில் பிறந்த எல்லாம் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும். திரும்பத்திரும்ப பிறப்பு பின்னர் மரணம் மீண்டும் பிறப்பு மறுபடியும் மரணம் என்பது மனிதனுக்குப்பொருந்துமோ இல்லையோ கண்டிப்பாக விண்மீன்களுக்குப் பொருந்தும். விண்மீகள் அதிகமான ஹைட்ரஜனும்,சிறிதளவு ஹீலியம் கொண்ட வாயுக் கூட்டத்திலிருந்து வாழ்வைத் தொடங்கி, வயது முதிரமுதிர பல புதுப்புதுத் தனிமங்களை பெற்றெடுத்து இறுதியில் இறந்து போகின்றன. இறப்பிற்குப் பின்னர் மீண்டும் புதியதாய்ப் பிறக்கின்றன.


ஒவ்வொரு விண்மீனும் அண்டத்தின் சமையற்கலனாக செயல்படுகிறது. விண்மீன்கள் அனைத்துமே வாயுக் கூட்டத்திலிருந்து, அதிலும் குறிப்பாக அதிகமான ஹைரஜன் மற்றும் குறைந்த அளவிலான ஹீலியம் வாயுக்கள் அடங்கிய கூட்டத்திலிருந்து உருவாகின்றன என்பதை நாம் அறிவோம். ஹைட்ரஜனை சமையல் செய்து பல புதிய வேதியல் தனிமங்களைத் தரும் விண்மீன்சட்டியில் சமைக்கப்படும் தனிமங்களுக்கான சமையற் குறிப்பையும் வானவியலாளர்கள் தந்துள்ளனர். இந்த சமையற்குறிப்புகளிலேயே மிக எளிதானது ஹைட்ரஜன் ஹீலியமாக கறி சமைக்கப்படுவதுதான். விண்மீன் அதன் பிறப்பிற்குப் பின்னர் தொடர்ந்து உயிர்வாழத் தேவையான ஆற்றலை வழங்குவது இந்த வினைதான். இந்த வினை இரு முறைகளில் நடைபெறலாம். விண்மீனின் வெப்ப நிலை 10 மில்லியன் கெல்வின் அளவில் இருக்கும் பொழுது ஹைட்ரஜன் அணுக்கருக்கள் நேரடியாக இணைந்து ஹீலியமாக மாறும். ஹைட்ரஜன் அணுக்கரு என்பது புரோட்டான் ஆகையால் இவ்வினை புரோட்டான் - புரோட்டான்  சுற்று (Proton – Proton  Cycle) என்றழைக்கப்படுகிறது.

இங்கே அடுத்தடுத்து நான்கு புரோட்டான்கள் ஒன்றோடொன்று இணைந்து ஒரு ஹீலியம் அணுக்கருவை உருவாக்கும். 

20 மில்லியன் கெல்வினுக்குச் சற்று அதிகமான வெப்ப நிலையில் ஹீலியம் அணுக்கருக்கள் வேறுவகையில் உருவாக்கப்படுகின்றன. இதனைக் கார்பன் - நைட்ரஜன் சுற்று (Carbon – Nitrogen Cycle ) என்கிறோம். வைஸாக்கர் மற்றும் ஹான்ஸ் பெத்தே ஆகியோரால் கண்டறியப்பட்ட இந்த வினையில் கார்பன் அணு வினை ஊக்கியாக மட்டும் செயல்பட்டு தொடர்ச்சியாக வினைகளை நிகழ வைத்து ஹைட்ரஜன் அணுக்கருவை ஹீலியம் அணுக்கருவாக மாற்றமடையச் செய்கிறது. இறுதியில் முதலில் வினை தொடங்கக் காரணமாக இருந்த கார்பன் அணுக்கரு பயன்படுத்தப்படாமல் பிரிந்துவிடுவதால் ஹைட்ரஜன் அணுக்கருக்கள் இணைவடைந்து ஹீலியம் அணுக்கரு உருவாக்கம் பெறுகிறது.





விண்மீனின் மையப் பகுதியின் வெப்ப நிலை 200 மில்லியன் கெல்வின் ஆக உயர்ந்ததும் ஹீலியம் அணுக்கருக்கள் ஒன்றோடொன்று இணைய ஆரம்பிக்கின்றன. ஹீலிய அணுக்கருவை ஆல்பாத்துகள் என்றழைப்பதாலேயே இந்த இணைவு வினையை ஆல்பா மும்மடி வினை (Triple Alpha Process) என்கிறோம்.





கார்பன் அணுக்கரு மேலும் மேலும் ஆல்பாத்துகளுடன் இணைந்து ஆக்ஸிஜன், நியான், மக்னீசியம், சிலிக்கன், சல்பர் என்று படிப்படியாக உருவாக்கம் பெற்று இறுதியாக இரும்பு அணுக்கரு ஏற்படுகிறது. 




இப்பொழுது விண்மீனின் மையப் பகுதியின் வெப்ப நிலை 1000 மில்லியன் கெல்வின் அளவில் இருக்கும். விண்மீன் சமையல் கலத்தில் இவை சமைக்கப்பட மில்லியன் ஆண்டுகள் பிடிக்கும். யுரேனியம் முதலான கனமான தனிமங்கள் உருவாக்கம் பெறுவதற்கும் விண்வெளியில் சிதறிப் பரவுவதற்கும் ஒரு விண்மீனின் கண்ணைக்கவரும் இறப்பே காரணமாக அமைகிறது.



ஒருகால் விண்மீன் வெடித்துச் சிதறாமல் இருந்திருக்குமானால் சமைக்கப்பட்ட இந்த கனமான தனிமங்கள், புதிய விண்மீன்கள் பிறப்பெடுக்கும் அண்டத்தூசுடன் (Cosmic Dust) கலவாமல் இருந்திருக்கும்.


தொடரும்......

Comments

  1. தேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=pNxwUFvzUkU

    ReplyDelete
  2. Facebook-ல் தேவையில்லாத விளம்பரங்களை வராமல் தடுப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=w_3MUp-bkjM

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)