இன்றைய (06.03.2017) இரவு வானம்.

 இன்று, நாளை அதாவது 06/03/2017 மற்றும் 07/03/2107 ஆகிய இரண்டு தினங்களும் நிலவு ஏழு பொலிவான விண்மீன்களுக்கு நடுவில் வானில் இருப்பதைக் காணலாம். இந்த ஏழு விண்மீன்களை ஒரு வட்டத்தில் அமைந்திருப்பதாகக் கற்பனையாகக் கருதி “ குளிர் கால வட்டம்” ( Winter Circle) என்ற பெயரிட்டழைக்கிறோம். வட அரைகோளத்தில் இருக்கும் நமக்கு பொழுது சாயும் வேளையில் தெற்கு வானில் பெரும் பகுதியை இந்த குளிர் கால வட்டம் நிரப்பி விடும். உலகின் பிற இடங்களில், அப்பகுதிகளில் குளிர் காலமாக இல்லாவிட்டாலும் கூட நிலவு இந்த விண்மீன்களுக்கு நடுவில் கோபியர் சூழ்ந்த கண்ணனைப் போல் காட்சியளிக்கும். தெற்கு அரைக்கோளத்தில், மித வெப்ப அட்சங்களில் இந்த குளிர்கால வட்டம் நாம் வட அரை கோளத்திலிருந்து காண்பதற்கு நேர் தலை கீழாக சிரியஸ் விண்மீன் (Sirius) மேலாகவும் கபெல்லா விண்மீன் (Capella) கீழாகவும் கட்புலனாகும். 





மாலை இன்னும் இருட்ட இருட்ட உலகக் கோளத்தின் வட அரைகோளத்தில் நாம் குறிப்பிடும் குளிர்கால வட்டத்தில் அமைந்த பொலிவான விண்மீன்கள் வானின் குறுக்காக வடக்கு நோக்கி மணிக்கு 15 டிகிரி கோணம் என்ற அளவில் நகரத்தொடங்கும்.  குளிர்கால வட்டம் என்பதை சிலர் “ குளிர்கால அறுகோணம்” (Winter Hexagon) என்றழைப்பர்.இது அங்கீகரிக்கப்பட்ட 88 விண்மீன் கூட்டங்களில் (constellation) ஒன்றல்ல. இது எளிதாக அடையாளம் காணக் கூடிய  ஒரு வானியல் தோற்றம் (asterism) மட்டுமே.
நாம் பயன்படுத்தும் வான் பொருள் வரைபடங்களில் குளிர்கால வட்டம் ஒருபடித்தான வட்டமாக இராது. இது தென் மேற்கு குளிர்கால வட்டப் பகுதியில் நிலை கொண்ட சற்றே பெரியதான ஓரியன் விண்மீன் கூட்டத்தை (Orion constellation) குள்ளமாகக் குறுக்கிக் காட்டும்.




குளிர்கால வட்டத்தை எப்படி அடையாளம் காண்பது என்பதைக் காண்போம். மாலை அந்திக்கருக்கலில் மேல் நோக்கிப் பார்க்க மத்திய அட்சங்களில் பொலிவான காபெல்லா (Capella) வின்மீனைக் காணலாம்.இந்த விண்மீன் குளிர்கால வட்ட விண்மீன்கள் வானியல் தோற்றத்தின் மேல்பக்கத்தை அல்லது வடக்கு முனையைச் சுட்டுவதாக அமையும். இருள் அதிகரிக்க அதிகரிக்க ஓரியன் விண்மீன் கூட்டம் மேற்கு வானில் மெள்ள தெரியத் தொடங்கும். ஓரியனின் இடுப்புக் கச்சிலிருந்து (Belt) கீழ் நோக்கி ஒரு கோடு கற்பனையாக வரிவோம். அது இரவின் மிகப் பொலிவான சிரியஸ் விண்மீனை (Sirius) அடையும். இது குளிர்கால வட்ட விண்மீன்கள் வானியல் தோற்றத்தின் அடிப்பக்கத்தை அல்லது தெற்கு முனையைச் சுட்டுவதாக அமையும்.

தற்போது சென்னையில் என் வீட்டின் மாடியிலிருந்து இந்த ஏழு விண்மீன்களையும் தெளிவாக காண முடிகிறது.



கட்டுரை மூலம் : EarthSky.org.

Comments

Post a Comment

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)