ஜெமினி என்ற மிதுனம் - வெ. சுப்ரமணியன்





மேலே நீங்கள் காணும் படங்கள் அந்த நாளில் திரு. எஸ்.எஸ். வாசன் அவர்களின் ஸ்டூடியோவின் சின்னம்.1941 முதல் பல படங்களை பல மொழிகளில் தந்த அந்த நிறுவனம் 1975 ஆம் ஆண்டில் எடுத்த “ எல்லோரும் நல்லவரே” படத்திற்குப்பின்  நொடித்துப் போனது. இன்று அதன் எச்சமாக நிற்பது ஜெமினி பார்சன் காம்பிளக்ஸ் என்ற அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் உள்ள பிரம்மாண்டமான வணிகம் மற்றும் குடியிருப்பு வளாகக் கட்டிடம் தான். ஆனால் நமது கட்டுரை அதைப்பற்றி இல்லை. ஜெமினி அதாவது மிதுனம் என்ற விண்மீன் கூட்டம் பற்றிய கட்டுரை எழுத ஆரம்பித்தால்  “காதல் மன்னன்” என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள், ஜெமினி படத்தில் நடித்த விக்ரம் இவர்களின் நினைவு வருவதை தவிர்க்க முடியாது. இரவு வானில் பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து “ஜெமினி, ஜெமினி….. ஓ போடு” என்று உற்சாகமாக பாடி மிதுன ராசியை வரவேற்கலாம்.  ஜெமினி அல்லது தமிழில் மிதுனம் என்று அழைக்கப்படும் விண்மீன் கூட்டத்தில் அடங்கிய முக்கியமான இரண்டு உடன்பிறந்த சகோதர விண்மீன்கள் காஸ்டர் (CASTOR) மற்றும் போலக்ஸ் (POLLUX).  இதன் காரணமாகவே மேலோகஇரட்டையர் (Heavenly twins) என்ற பட்டம் இவ்விரு விண்மீன்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.



இரவு வானில் இந்த மிதுனராசிக் கூட்ட  விண்மீன்களை அடையாளம் காணும் பல வழி முறைகள் கீழே தரப்பட்டுள்ளது.


நமது ராசி விண்மீன் கூட்டங்களில் உள்ள பொலிவான விண்மீன் கூட்டங்களில் மிதுனமும் ஒன்று.  எம்.எல்.ஏ க்கள் அமைச்சர்கள் போல் இல்லாமல் வருடம் முழுவதும் பல மாதங்களில் எளிதாகப் பார்க்க இயலக்கூடிய விண்மீன் கூட்டம். இந்த விண்மீன் கூட்டம் ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை மாலை நேரம் தொடங்கும் போதே வானில் ஒளிர ஆரம்பித்து விடும். இருப்பினும் ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதத்தை விட இரண்டு மணி நேரம் முன்னதாகவே மேற்கில் மறைந்து விடும்.


அதாவது வட அரைகோளத்தில் எந்த நடு அட்சத்திலிருந்து நோக்கினாலும் மிதுன ராசி காலை 5 மணிக்கு மேற்கு அடி வானத்தின் நேர் மேலாக பிப்ரவரி மாதம் காட்சியளிக்கும். அதுவே மார்ச்சில் அதிகாலை 3 மணிக்கும், ஏப்ரலில் நள்ளிரவில் 1 மணிக்கும் , மே மாதம் பின்னிரவு 11 மணிக்கும் மேற்கு அடி வானத்தின் நேர் மேலாக காட்சியளிக்கும்.
பொதுவாகவே எல்லா ஆண்டிலும் ஜனவரியும் பிப்ரவரியும் தான் மிதுன ராசிக் கூட்டத்தைக் காண மிகச் சிறந்த காலகட்டமாகும். மாலையில் ஒளிர ஆரம்பித்து இரவு 10 மணிகெல்லாம் நடுவானில் தலைக்கு மேல் பிப்ரவரியின் தொடக்கத்திலும், பிப்ரவரி இறுதியில் சுமார் இரவு 9 மணிக்கு கட்புலனாவது மட்டுமல்லாது அதிகாலை வரை வானில் இருக்கும். வட அரை கோளத்தில் எங்கே எந்த அட்சத்தில் நீங்கள் வாழ்ந்தாலும் இந்த கால அட்டவணை பொருந்தும் என்பது இன்னும் சிறப்பானது. எடுத்துக் காட்டாக நேற்றைக்கு முன் தினம் (18.02.2017)  இரவு 09. 05 மணிக்கு சென்னையில் நடுவானில் தலைக்கு மேல் மிதுன ராசி இருப்பதைக் காண முடிகிறது. படத்தில் ஜெமினி விண்மீன் கூட்டமும் காஸ்டர் மற்றும் போலக்ஸ் விண்மீன்களும் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.



காஸ்டர் மற்றும் போலக்ஸ் இரட்டை விண்மீன்களில் போலக்ஸ் அதிகப் பொலிவுடையது.  காஸ்டர் ஒரு ஆறுமுகன். அதாவது ஆறு விண்மீன்களை ஒன்றாக (6 IN 1) உள்ளடக்கிய விண்மீன்தொகுப்பு. காஸ்டர் புவிலிருந்து 48.9 ஒளி ஆண்டு தொலைவில் உள்ள மிதுன ராசியின் இரண்டாவது பொலிவான விண்மீன்.





வட அரைகோளத்தில் எந்த நடு அட்சத்திலிருந்து பார்த்தாலும் காஸ்டரும், போலக்ஸும் தலைக்கு மேல் காணப்படும் பொலிவான விண்மீன்கள் ஆகத் தோன்றும் போது சிரியஸ் (Sirius) நில நடுக் கோட்டுக்குத் தெற்கே அடிவானில் மின்னும். அதே சமயம் நில நடுக்கோட்டிற்குத் தெற்கே நடு அட்சங்க்களிலிருந்து காண சிரியஸ் தலைக்கு மேலாகவும், காஸ்டரும், போலக்ஸும் வடக்கு அடிவானிலும் காணப்படும்.

புவிலிருந்து நோக்க சூரியன் ஜூன் 21 முதல் ஜூலை 20 வரையிலான காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மிதுன ராசிக்கு முன்பாகக் கடப்பதாகத் தோன்றுகிறது.



ஜூன் மாதம் 21 தேதியிலிருந்து   மிதுன ராசியில் அடுத்த மாதம்  ஜூலை 20 வரை இருக்கும்.மிதுன ராசி விண்மீன்களை வட அரைக்கோளத்தில் வசந்த காலத்தின் பிற்பகுதியிலும், கோடையின் முற்பகுதியிலும் அதே போல தென் அரைக் கோளத்தில் இலையுதிர் காலத்தின் பிற்பகுதியிலும், குளிர் காலத்தின் தொடக்கத்திலும் காண முடியாது. இக் கால கட்டத்தில் கதிரவனின் பிரகாசமான ஒளியில் இவை கட்புலன் ஆகாமல் மறைந்து விடுகின்றன.
இனி மிதுன ராசியை வானில் எப்படி அடையாளம் கான்பது என்பது குறித்துப் பார்க்கலாம்.
ஓரியன் (Orion) விண்மீன் கூட்டத்தை அடையாளமாக க் கொண்டு மிதுன ராசி விண்மீன்களைக் காணுதல்.



வட அரைக்கோள வானத்தில் பிப்ரவரி மாதம் எளிதில் அடையாளம் காணப்படக் கூடிய விண்மீன் கூட்டம் ஓரியன். இந்த மாதத்தின் மாலைப்பொழுதுகளில் ஓரியன் தெற்கே கட்புலனாகும். ஓரியனின் இடுப்புக் கச்சு (Belt) என்றழைக்கப்படும் அருகருகே ஒரே நேர் கோட்டில் அமைந்த நடுத்தர பொலிவுள்ள விண்மீன்கள் எளிதில் கண்டுபிடிக்க கூடியது.
இந்த கச்சுக்குக் கீழாக மிகப் பொலிவான ரீகல் (Rigel) விண்மீனையும், கச்சுக்கு மேற்புறம் திருவாதிரை (Betelgeuse) விண்மீணையும் எளிதில் காண இயலும். இவ்விரு விண்மீன்களையும் கற்பனையில் ஒரு நேர் கோட்டால் இணைத்துப் பார்த்தால், அது மிதுன ராசியைத் தொட்டுச் செல்லும். இதில் கோட்டின் கிழக்கில் குறிப்பிடத்தக்க அளவில்அருகருகே அமைந்த இரு பொலிவான விண்மீன்கள் காஸ்டரும், போலக்ஸும் ஆக இருக்கும்.





அடுத்த முறையில் பெரும் கலப்பை அல்லது பெரிய அகப்பை (Big dipper) என்பது எப்போதும் வடக்கு வானில் சுட்டப்படும். இது ஒரு வானியல் காட்சி மட்டுமே இது விண்மீன் கூட்டம் இல்லை. அகப்பை மாதிரியான ஒரு விண்மீன்களின் அமைப்பு அவ்வளவுதான். இதில் அகப்பைப் பகுதியின் மெக்ரஸ் (Megrez) மற்றும் மெராக் (Merak) ஆகிய விண்மீன்களை இணைத்து நேர்கோடு ஒன்றை அதன் கைப்பிடிக்கு எதிராக வரைந்தால் அதன் திசை காஸ்டர் மற்றும் போலக்ஸை சுட்டுவதாக அமையும். 

கடைசியாக சந்திரனின் நிலையைக் கொண்டு மிதுன ராசி விண்மீன்களை அறிதல் சற்றே எளிதானது. சந்திரன் ஒவ்வொரு மாதமும் 12 இராசி விண்மீன் கூட்டங்களையும் ஒரு முறை முழுமையாக சுற்றி வந்து விடுகிறது. அவ்வாறு சுற்றி வரும் போது சில நாட்கள் மிதுன ராசியைக் கடந்து செல்லும்.  வான வரைபடத்தை ப் பார்த்தால் அதில் குறுக்காக ஒரு வளைந்த தொடர்ச்சியற்ற (Doted line)  வரையப்பட்டிருக்கும். இது சூரியனின் தோற்ற இயக்கப்பாதையைக் குறிப்பதாகும். சூரியன் ஒரு ஆண்டில் மிதுன ராசியைக் கிழக்காகக் கடக்க ஒரு மாத காலத்தையும், அதுவே சந்திரன் கிழக்காக ஒரு மாதத்தில் கடக்க சில நாட்களையும் எடுத்துக் கொள்கிறது. சந்திரன் இயக்கம் கதிரவனின் தோற்ற இயக்கப்பாதையின் முன் பின்னாக 5o வரையில் வேறுபடலாம் என்பதால் சந்திரன் மிதுனத்தின் காஸ்டர் மற்றும் போலக்ஸுக்கு தெற்காக பயணிக்கும். 

விண்ணுலக இரட்டையர்களான காஸ்டர் மற்றும் போலக்ஸ் தொடர்புடைய புராணக்கதைகள் மிகவும் மிக்கியமானவை. காரணம் இரு மாறுபட்ட எதிரெதிரான குணாதிசயங்களை அவை குறிப்பிடுவதாகக் கொள்ள இடமுள்ளது. இந்துக்களின் நம்பிக்கையில் பிரேதலோகம், பித்ரு லோகம் போல் கிரேக்கர்களின் நம்பிக்கைப்படி விண்ணுலகில் அழியும் மற்றும் சாகாவரம் பெற்ற அழியா உயிர்களின் சந்திக்கும் இடமொன்று இருப்பதாகக் கருதப்படுகிறது. அங்கு மூதாதையரும் சந்ததியினரும் ஒன்றாக வசிப்பதாக சொல்லப்படுகிறது. கிரேக்க புராணங்களில் காஸ்டர் , போலக்ஸ் இருவரும் வாழ்வின் இருமை நிலைகளை காட்டுவதாகக் கொள்ளலாம். காஸ்டரும் போலக்ஸும் ஜீயஸிற்கும் (Zeus), லெடா ( Leda) விற்கும் பிறந்த குழந்தைகள். இவர்களில் காஸ்டர் அழியும் பிறப்பும் போலக்ஸ் அழியா பிறப்பும் வாய்க்கப் பெற்றவர்கள். இவர்கள் இருவரும் மனதால் ஒன்றுபட்டு நின்றாலும் சூழ்நிலையால் பிரிந்து இருந்தனர். ஒரு போரில் காஸ்டர் கொல்லப்பட, போலக்ஸ் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்ந்தான். அவன் தன் தந்தை ஜீயஸிடம் அழிவற்ற வாழ்வு வேண்டாம் விண்ணுலகில் தன் சகோதரனுடன் இருக்க விரும்புவதாகக் கூறி வரம் பெற்று இணைந்தான். இவர்களின் கதை சகோதர பாசத்திற்கு சான்றாக விளங்குகிறது.

இத்தகைய விண்மீன்களை இன்று இரவு காண முயற்சி செய்யலாமா? இரவில் 10  மணி அளவில் வானில்  இவற்றைக் காண அதிகம் சிரமப்பட்டு விழித்திருக்க அவசியமில்லையே? 

***************************************************************************************

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)