கதிரவன் - பகுதி (9)
கதிரவக் கிளரொளிகள்
தொடரும்........
கிளரொளி என்பதை திடீரென நிகழும் மிக வேகமான அதிக வலுவான
பொலிவு மாற்றம் எனலாம். கதிரவக் கிளரொளி கதிரவனின் வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காந்த
ஆற்றல் ஒரு கட்டத்தில் திடீரென்று வெளியிடப்படும் நிகழ்வாகும். இந்த நிகழ்வில் வெளிப்படும்
ஆற்றல் மின்காந்த அலைகளின் நிறமாலையில் கிட்டத்தட்ட
குறைந்த ஆற்றல் கொண்ட ரேடியோ அலைகள் முதல் அதிக ஆற்றல் கொண்ட காமாக் கதிர்கள் வரையிலான
எல்லா அலைநீளங்களையும் கொண்டிருக்கும்.
இத்தகைய நிகழ்வின் போது வெளிப்படும் ஆற்றல், எண்ணிக்கையில்
ஒரு மில்லியன் 100 மெகா டன் ஹைட்ரஜன் குண்டுகள்
ஏக காலத்தில் வெடிப்பதற்குச் சமம். படத்தில் 5 மெகா டன் ஹைட்ரஜன் குண்டு வெடித்தால்
ஏற்படும் விளைவு ஒரு ஒப்பீடாகக் காட்டப்பட்டுள்ளது.
முதல் கதிரவக் கிளரொளி 1859 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்
முதலாம் நாள் பதிவு செய்யப்பட்டது. ஒரே சமயத்தில்
ரிச்சர்ட் சி. காரிங்க்டன் (Richard
c Carrington) மற்றும் ஹோட்சன் ( Hodgson) என்ற இரு வானியல் ஆய்வாளர்கள் கதிரவப்புள்ளிகளை பற்றிய
ஆய்வின் போது வெண்நிற கதிரவக் கிளரொளியை கண்டு பதிவு செய்தனர்.
காந்த ஆற்றல் வெளியாகும் போது எலக்ட்ரான், புரோட்டான் மற்றும்
கனமான அணுக்கருக்கள் ஆகியன கதிரவனின் வளிமண்டலத்தில் முடுக்கப்பட்டும் வெப்பமடைந்தும்
இயங்கும். கதிரவக் கிளரொளியில் வினாடிக்கு 1027 எர்க் ஆற்றல் வெளியாகிறது.
ஒரு பெரிய கிளரொளியில் இதுவே சுமாராக 1032 எர்க் அளவில் அமையும். இது ஒப்பீட்டளவில் ஒரு எரிமலை
வெளியிடும் ஆற்றலைப் போல் பத்து மில்லியன் மடங்கு அதிகம் என்றாலும் கதிரவன் ஒரு நொடியில்
வெளியிடும் மொத்த ஆற்றலில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவானதே. கதிரவக் கிளரொளியில்
மூன்று நிலைகள் சொல்லப்படுகிறது.
முதல் நிலை முன்னோடி நிலை (Precursor stage) என்றழைக்கப்படுகிறது.
இந்த நிலையில் காந்த ஆற்றல் வெளிப்படுதல் தூண்டப்படுகிறது.
இந்த நிலையில் மென் எக்ஸ் கதிர்கள் வெளியாவது கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலையை தூண்டுதல் நிலை (impulsive stage)
என்று சொல்லலாம். இந்த நிலையில் புரோட்டான்களும், எலக்ட்ரான்களும் ஒரு மில்லியன் எலக்ட்ரான்
வோல்டிற்கும் (1MeV) அதிகமான ஆற்றல் பெறுமாறு முடுக்கம் அடைகின்றன. தூண்டுதலான நிலையில்
ரேடியோ அலைகள், வன் எக்ஸ் கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் உமிழப்படுகின்றன.
அடுத்த நிலை சிதைவு நிலை (decay stage)
ஆகும். இந்நிலையில் மென் எக்ஸ் கதிர்களின் படிப்படியான வளர்ச்சியும் சிதைவும் கண்டுணரப்பட்டுள்ளது.
இந்த எல்லா நிலைகளும் நீடிக்கும் காலவரையறை சில வினாடிகளிலிருந்து மணி நேரம் வரையில்
இருக்கும்.
கதிரவக்கிளரொளிகள் கதிரவனின் கரோனா (corona) ஏட்டிற்கும் அப்பால் பரவுகிறது.
கரோனா என்பது கதிரவனின் வளிமண்டலத்தின் கடைக்கோடிப் பகுதி. இப்பகுதியில் மிகக் குறைந்த
அழுத்தத்தில் வாயுக்கள் இருக்கும். இவ்வாயுக்களின் வெப்ப நிலை சில மில்லியன் கெல்வின்
ஆக இருக்கும். கிளரொளியின் உட்புறம் வெப்ப நிலை பொதுவாக 10 அல்லது 20 மில்லியன் கெல்வின்
ஆக உயரும் என்றாலும், 100 மில்லியன் கெல்வின் வரை கூட உயரலாம். மென் எக்ஸ் கதிர் படங்களில்
கரோனா படத்தில் காட்டியவாறு புலப்படும்.
இதில் குறிப்பிட வேண்டியது கரோனா முழுவதும்
ஒரே மாதியான பொலிவுடன் இல்லை. மேலும் கதிரவனின் நடுக்கோட்டுப்பகுதியில் பொலிவு செறிந்த
சுழல் வளையங்கள் போன்ற அமைப்புகளையும் காண
இயலுகிறது. இந்த பொலிவான சுழல் வளைய அமைப்புகள் இயக்கப் பகுதிகள் (Active regions)
எனப்படும் வலிமையான காந்தப்புலப் பரப்புகளை இணைக்கின்றன. கதிரவப்புள்ளிகளும் இந்த இயக்கப்பகுதியில்தான்
அமையப்பெற்றுள்ளன. கதிரவக் கிளரொளிகளும் இப்பகுதியில்தான் நிகழ்கின்றன.
கதிரவக் கிளரொளிகளின் அதிர்வெண் கதிரவனின் பதினோரு ஆண்டு சுற்றுடன் ஒருங்கே அமைகிறது. கதிரவச் சுற்று சிறுமமாக இருக்கும்
போது இயக்கப்பகுதிகள் சிறியதாகவும், காண்பதற்கு அரிதாகவும் இருக்கும். குறைந்த எண்ணிக்கையிலான
கிளரொளிகளே காணப்படுகின்றன. கதிரவனின் சுற்று பெருமத்தை அடையும் போது இது படிப்படியாக
அதிகரிக்கும்.
கதிரவனை உற்றுப்
பார்ப்பதன் மூலம் எந்த ஒரு மனிதனாலும் கதிரவக் கிளரொளியைக் காண இயலாது. வெறும் கண்ணால்
கதிரவனை நேரடியாகப் பார்ப்பது கண்களைப் பாதிக்கும்.
கிளரொளிகளை
ஒளிக் கோளத்தின் உமிழ்வின் பொலிவின் பின்னணியில் காண்பது மிகவும் கடினமான செயல். ஆனால்
இதற்கான அறிவியல் கருவிகள் மூலம் வெளியாகும் கதிர் வீச்சின் தன்மையை கண்டுணர முடியும்.
புவியில் நிறுவப்பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் கதிரவக் கிளரொளியில் காணப்படும் ரேடியோ
மற்றும் கண்ணுறு ஒளிக்கூறுகளை ஆய்வு செய்ய இயலும். ஆனால் புவியின் வளிமண்டலத்தை உயர்
ஆற்றல் கொண்ட உமிழ்வுகளான எக்ஸ் கதிர் மற்றும் காமா கதிர்கள் புவியின் வளிமண்டலத்தை
ஊடுருவ இயலாது என்பதால் இவற்றை ஆராய விண்வெளியில் நிறுவப்பட்ட தொலைநோக்கிகள் அவசியமாகிறது.
கதிரவக் கிளரொளியின் போது வெளியாகும்
எக்ஸ் கதிர் மற்றும் புற ஊதாக் கதிர்கள், அதிக நேரம் நிலைத்திருக்கும் கதிர்வீச்சுப்புயல்களை
புவியின்வளி மண்டலத்தின் மிக உயர்ந்த பகுதியான அயனி மண்டலத்தில் (ionosphere) ஏற்படுத்தி
உலகில் ரேடியோ தகவல் தொடர்பில் முழு இருட்டடிப்பு நிகழ்வதைத் தூண்டுகிறது. ஒவ்வொரு
கிளரொளியும் மிக அதிகமான ஆற்றல் கொண்ட துகள்களை புவியின் காந்தக் கோளத்தில் வெளிவிடுகிறது.
இந்த அதிக ஆற்றல் கொண்ட துகள்கள் விண்வெளி வீரர்களுக்கும், விண்வேளி ஓடங்களுக்கும்
பெருத்த சேதத்தை உண்டு செய்யக் கூடியவை. 2005 ஆம் ஆண்டில் ஜனவரி 20 ஆம் நாள் ஏற்பட்ட
கிளரொளியில்தான் நேரடியாக இதுவரை அளவிடப்பட்டதிலேயே மிக அடர்த்தியான புரோட்டான் கதிர்வீச்சு
உணரப்பட்டது. இக் கதிர் வீச்சின் துகள்கள் ஒளியின் திசைவேகத்தில் மூன்றில் ஒருபங்கு
திசை வேகத்தில் வெளியாகி 15 நிமிடத்தில் புவியை வந்தடைந்தன. ஒரு தலைமுறையில் ஒருமுறை
ஏற்படும் பெரிய கதிரவ வெடிப்பு ஏற்படுத்தும் விண்வெளிப்புயல், புவிக் கோளத்தில் மின்சாரம்
மற்றும் தகவல் தொடர்பை மிகவும் கடுமையாக பாதிக்கும். இப் புயல்கள் எப்போது ஏற்படும்
என்பதை முன்னறிவிப்பது என்பது மிகவும் சிக்கலான ஒன்று. சில கதிரவப்புள்ளிகள் மற்றும்
இயக்கப்பகுதிகளின் தன்மைகளை கதிரவப்புயல்களுடன்
தொடர்புபடுத்த முடியும். ஆகவே கதிரவப்புள்ளிகளின் செயல்பாடு வகைப்பாட்டின் அடிப்படையில்
24 அல்லது 48 மணி நேர கால அவகாசத்தில் ஏற்படவுள்ள கதிரவப்புயலுக்கான நிகழ்தகவை (
Probablity) வேண்டுமானால் குறிப்பிட முடியும்.
தொடரும்........
Comments
Post a Comment