கதிரவன் - பகுதி (8)

வட விண்ணொளிகளைக் காணச் சிறந்த இடங்களில் முக்கியமானவை அலாஸ்கா மற்றும் வட கனடா பகுதிகள். இருப்பினும் இத்தகைய பரந்து விரிந்திருக்கும் திறந்த வெளிப்பகுதிகளுக்குச் சென்று வருவது அத்தனை எளிதானதாக இல்லை. நார்வே, சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இதர சாத்கமான இடங்கள். கதிரவக் கிளரொளிகள் (Solar flares) அதிகமாக அமையும் காலங்களில் இந்த இடங்களிலிருந்து மிகவும் தெற்கே அமைந்த ஸ்காட்லாந்தின் மேல் பகுதியிலும், வடஇங்கிலாந்திலும் கூட கட்புலனாகும்.   மிகமிக அரிதான நிகழ்வுகளில் இன்னும் தெற்கில் வட விண்ணொளிகளைக் காணப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. வட விண்ணொளிகளை முதன் முதலாக 1791 இல் அமெரிகாவின் புதிய இங்கிலாந்துப் பகுதியில் குடியேறிய ஐரோப்பியர்கள் கண்டனர். 1891 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “புதிய இங்கிலாந்தின் சரித்திரப்புயல்கள்” (Historical Storms of New England) என்ற நூலில் சிட்னி பெர்லெ (Sidney Perley) ஈது பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் 1719 ஆம் ஆண்டின் மே மாதம் 15 ஆம் நாள் மிக அழகான மற்றும் பொலிவான அரோராவை வானில் கண்டதாகவும், இது இங்கிலாந்தில் வட விண்ணொளி கட்புலனான நிகழ்வுக்கு மூன்று ஆண்டுகள் பின்னர் நடந்தது என்றும், அதன் பின்னர் மீண்டும் அந்த ஆண்டிலேயே டிசம்பர் மாதம் வானில் அரோரா கட்புலனானது என்றும் குறிப்பிட்டுள்ளார். எப்படி இந்தியாவில் வால் நட்சத்திரங்கள் தோன்றுவதை இனி நிகழப் போகும் விபரீத நிகழ்வுகளின் முன்னறிவிப்பு என்ற மூட நம்பிக்கை உள்ளதோ அதே போல விண்ணொளிகள் தோன்றுவதை கண்ட  மக்கள்   அதனை அழிவிற்கான நிகழ்வாகக் கருதி பீதி அடையாவிட்டாலும் கூட, நெருப்பால் அழியப் போகும் உலகத்தின் கடைசி தினங்களை மற்றும் இனி வரவிருக்கும் அபாயங்களின் முன்னறிப்பாகவும் கருதினர்.
வட விண்ணொளிகள் எப்போதுமே இருந்தாலும், குளிர் காலம் (Winter) பொதுவாக விண்ணொளிகளைக் காணச் சிறந்த பருவமாக இருப்பதன் காரணம் அதிகம் மாசுபடாத தெளிவான வானம் இக்காலத்தில் அமைவதே. செப்டம்பர், அக்டோபர், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் வட விண்ணொளிகளைக் காண ஏதுவான மாதங்களாகும். கதிரவப்புள்ளிகளின் செயல்பாடு மிக அதிகமாக அமையும் நாளிலிருந்து இரு தினங்களுக்குப் பின்னர் இவ்வொளிகள் மிகமிகப் பொலிவாகவும், அதிக வீச்சுடன் அமையும்.  NASA (National Aeronautics and Space Administration), NOAA (National Oceanic and Atmospheric Administration) போன்ற அமைப்புகளும் கதிரவச் செயல்பாடுகளைக் கண்காணித்து வருவதுடன் அது சம்பந்தமான எச்சரிக்கை அறிக்கைகளையும் வெளியிடுகின்றன.
 சில சமயம் கதிரவச் செயல்பாடுகள் மீ உயர் அளவில் அமையும் போது மிக வலிமையான மற்றும் உக்கிரமான கதிரவக் காற்று ஏற்படக் காரணமாக அமைகிறது. இந்த உக்கிரமான கதிரவக் காற்றானது புவியின் காந்தப்புலத்துடன் இடைச் செயல் வினை புரியும் போது புவி காந்தப் புயல் ஏற்படும். இதனால் விண்ணொளி காட்சிப்படும் துருவப் பகுதியைத் தாண்டியும் குறைந்த அட்சப் பகுதிகளிலும் விரிவடைகிறது. மிக அரிதான நிகழ்வாக நில நடுக்கோட்டிற்கு அருகில் கூட விண்ணொளிகள் கட்புலனானது உண்டு. எடுத்துக்காட்டாக 1909 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிக வலிமையான புவிகாந்தப்புயல் காரணமாக விண்ணொளிகள் சிங்கப்பூரில் கட்புலனான நிகழ்வைக் குறிப்பிடலாம்.

விண்ணொளிகளை அவற்றின் நிறங்கள், வடிவம், அமைப்பு, பொலிவு மற்று ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் பல வகைகளாகப் பிரிக்கலாம். இருப்பினும் இவ்வாறெல்லாம் பிரித்து வகைப்படுத்து முன்னர் மிக முக்கியமான இரு பெரும் பிரிவுகளைக் காண்போம். அவை
(1) பரவலான விண்ணொளிகள் (Diffuse aurora)
(2) தனித்த விண்ணொளிகள் (Discrete aurora) ஆகும்.
தனித்த விண்ணொளிகள் என்பவை எளிதில் காட்சிப்படக் கூடியவை ஆகவும், தெளிவான எல்லைகளை ஓரளவிற்குப் பெற்றிருக்கும் விண்ணொளிகள். பரந்த விண்ணொளிகள் என்பவை சற்று மங்கலான, அதிகப் பரப்பில் பரவி இருக்கும் விண்ணொளிகள் ஆகும். இந்த பரவலான விண்ணொளிகளை 
(அ) துடிக்கும் விண்ணொளிகள் (pulsating aurora) என்றும் 

(ஆ) ஹைட்ரஜன் வில் விண்ணொளிகள் (hydrogen arc aurora)  என்றும் மேலும் இரண்டு உட் பிரிவுகளாகப் பகுக்கலாம். 

இதில் துடிக்கும் விண்ணொளிகள் 1/10 வினாடி முதல் 20 நொடி வரையிலான கால அளவுகளில் பொலிவில் மாற்றமடைகிறது. இரண்டாவது உட் பிரிவு விண்ணொளிகள் சீரான அகன்ற கற்றையான ஒளிக் கதிர்கள். இவை புவியின் வளி மண்டலத்தில் வெளிப்புற வான் அலன் கதிர்வீச்சுப் பட்டை (Van Allen radiation belt) யிலிருந்து எலக்ட்ரான்களும் புரோட்டான்களும் தொடர்ந்து விழுவதால் ஏற்படுகிறது. விண்ணொளிகளைப் பற்றிப் பேசும் பலரும் பொதுவாக தனித்த விண்ணொளிகளையே குறிப்பிடுகின்றனர்.

விண்ணொளிகளை அவற்றின் நிறங்களின் அடிப்படையில் வகைப்படுத்தலாம். எனினும் இந்த வகையான வகைப்படுத்தலில்  சிறிது கவனம் அவசியமாகிறது. ஏனெனில் நிறம் என்பது பொலிவுடன் தொடர்புடையது . அதிகம் காட்சிப்படும் விண்ணொளி வகைகளின் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.




விண்ணொளிகள் பல வடிவங்களில் கட்புலனாகிறது.
சில அடிப்படையான வடிவங்களும் அவற்றின் பெயர்களும் விளக்கமும் படங்க்களும் தரப்பட்டுள்ளன.
1. வில் (Arc) : அடிப்புற ஓரங்கள் மென்மையாக அமைந்த சிறிது வளைந்த வில் போன்ற ஒளிப் பகுதி
2. ஒட்டு (Patch) : தொடர்ச்சியான ஆனால் ஒழுங்கற்ற கீழ்ப்புற ஓரங்களுடன் வளைந்தும் மடிந்தும்  இருக்கும் பகுதி
  3. பட்டை (Band) : மேகம் ஒத்த ஒளிரும் தனித்த சிறிய பகுதி
 4. கதிர் (Ray) : ஒரு ஒளிரும் கீற்று அல்லது தண்டு போன்ற பகுதி

5. முகத்திரை (veil) : சீரான ஒளிர்வு கொண்ட அதிகப் பரப்பளவுள்ள பகுதி 

தொடரும்.....

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)