நாளை (19.02.2017) நமதே - கேட்டை விண்மீன் பற்றிய பதிவு.

நீங்கள் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் கொண்டவரா? இல்லை என்றால் இந்தப்பதிவு உங்களை நாளை விடியலில் அல்லது விடியலுக்கு சற்று முன் அலாரம் வைத்து எழுந்திருக்கச் செய்தால் அது என்னுடைய கட்டுரைக்கு 100/100 மதிப்பெண் நீங்கள் வழங்கியுள்ளதாகப் என்று பொருள்.
அப்படியானால் வரும் 19.02.2017 அதாவது நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு மொட்டை மாடியிலிருந்தோ அல்லது நடைப்பயிற்சி செய்யும் மைதானத்திலிருந்தோ கிழக்கிலிருந்து தென் கிழக்காக வானத்தை வேடிக்கை பாருங்கள். “சார், why this kolaveri ?வாரம் பூரா உழைச்சிட்டு ஞாயிறு அன்றுதான் கொஞ்சம் 10 மணிவரைக்கும் தூங்குவோம். அன்னிக்கும் இப்படி எழுந்திருக்கச் சொல்லி கஷ்டப்படுத்துகிறது கொஞ்சமும் நியாயமே இல்லை” என்னும் உங்கள் மைண்ட்வாய்ஸ் கேட்கிறது.

அந்தக் காலத்தில் எங்க ஊர் கல்லிடைகுறிச்சியில் ஒருவர் லாட்டரிச் சீட்டுக்களை தெருவில் விற்றுக் கொண்டு வருவார். அவர் நாடி வரும் அதிர்ஷ்டத்தை தவறவிடாதீர்கள் என்று கூவிக்கூவி விற்பனை செய்வார். கிட்டத்தட்ட நானும் அப்படி உங்களை அழைகிறேன். தேய்பிறை நிலவுக்கு அருகே கேட்டை விண்மீன்னை (Anteres) காணும் வாய்ப்பை தவற விடாதீர்கள். சற்று நிதானமாகப் பார்த்தால் கண்டிப்பாக உங்களால் கேட்டை விண்மீனைத் தவற விடவே முடியாது. விடியலுக்கு முந்திய ஒரு மணி நேரத்திற்கு முன்னர் மற்றும் விடியலில் கிழக்கு முதல் தென் கிழக்கு வானில் காண முடியும். உங்கள் இராசி விருச்சிக ராசியா? இது உங்கள் ராசி விண்மீன் கூட்டதைக் காண இது ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.



ஸ்கார்பியஸ் (Scorpius) விண்மீன் கூட்டத்தில் அமைந்த மிகப் பொலிவான விண்மீன் கேட்டை. நமது வட அரைக் கோளத்தில் கேட்டை (Antares) கோடைகால விண்மீனாக கருதப்படுகிறது. கோடை மாதங்களில் இந்த விண்மீன் மாலை நேர வானில் கட்புலனாகிறது. அக்டோபர் மாதம் சூரியன் மறந்தபின் சிறிய கால அளவுக்கு காட்சி அளிக்கிறது. பின்னர் சூரியனைத் தொடர்ந்து அடிவானின் கீழே சென்று மறைகிறது.  நவம்பரில் இரவு வானத்தில் முற்றிலுமாக மறைந்து விடுகிறது.


எல்லா ஆண்டுகளிலும் கேட்டை விண்மீன் சூரியனுடன் இணைந்தபடியே டிசம்பர் 1 ஆம் தேதி வாக்கில் காணப்படும். அதாவது புவியிலிருந்து பார்க்கும் பார்வைப்புள்ளியில் சூரியனுக்கு  நேர் பின்னால் இருப்பதாகத் தோர்றமளிக்கும்.  ஆகவே இரண்டும் ஏக காலத்தில் உதயமாகி மறைவதும் நடக்கும்.  இதன் காரணமாக நவம்பர் மாதம் முழுவதும் மற்றும் டிசம்பர் தொடக்கத்திலும் கதிரவனின் ஒளி வெள்ளத்தில் கேட்டை விண்மீன் காணாமல் போவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இருப்பினும்  ஜனவரி நடுவில் ஆரம்பித்து கேட்டை விண்மீன் மெல்லமெல்ல  சூரியனுக்கு மேற்காக நகர ஆரம்பித்தது மாதிரி தோன்ற ஆரம்பிக்கும். இதன் காரணமாகவே அருணோதயத்திற்கு சற்றே முன்னதாக தென் கிழக்கு அடிவானில் தோற்றமளிக்கும். உண்மையில் நடப்பது என்னவென்றால் பூமி தன் சுற்றுப்பாதையில் நல்ல தொலைவுக்கு நகர்ந்து விட்டபடியால் நமது விண்மீன் கேட்டை கதிரவனுக்கு நேர் பின்புறம் இல்லாமல் ஒரு பக்கமாக நகர்ந்து விட்டது போல் காட்சிப்படுகிறது.



நம் இந்தியாவில் சிவராத்திரிக்குப் பின்னர் பனி சிவ சிவா என்று பறந்தோடிவிடும் என்பார்கள். அது மாதிரி விருச்சிக ராசி (ஸ்கார்பியஸ் – Scorpius) விண்மீன் கூட்டம் மற்றும் கேட்டை விண்மீன் வானில் கட்புலனாதல் என்பது குளிர்காலம் முடிவுக்கு வருவதை சுட்டும் ஒரு முக்கிய நிகழ்வு. 



குறிப்பாக விருச்சிகத்தின் கொடுக்குப்(Stinger)பகுதியில் உள்ள ஷாஉலா (Shaula) மற்றும் லிசாத் (Lesath) விண்மீன்கள் கட்புலனாவது இதனை உறுதிப்படுத்தும்.  எனவே நாளை விடிவதற்கு முன், விடியலில் சந்திரன், கேட்டை மற்றும் சனி ஆகியவற்றை காண நாம் ஏன் முயலக் கூடாது? 

நாளை கண்டுகளித்து முகநூலில் பதிவிட அன்புடன் அழைகிறேன்..

Comments

  1. wonderful info
    adoring ..
    hats off
    wonderful words in Tamil
    (my input tools give me trouble kindly forgive me for that ..)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)