வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (14)

"எங்கே வாழ்க்கை தொடங்கும்?
அது எங்கே எவ்விதம் முடியும்?

இதுதான் வாழ்க்கை, இதுதான் பயணம் 
என்பது யாருக்கும் தெரியாது.
பாதை எல்லாம் மாறிவரும். 

பயணம் முடிந்து விடும்.
மாறுவதைத் தெரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்".


என்ற மனித வாழ்க்கைப் பயணத்திற்கான கண்ணதாசனின் இந்த வரிகள் விண்மீனுக்குப் பொருந்தாது என்பதே மெய்.
மனித வாழ்வில் மிக வினோதமானது அதன் முடிவாகும். இப்படித்தான் முடியும் என்று யாராலும் அறுதியிட்டுக் கூறவியலாதது மனித வாழ்வின் முடிவு. ஆனால் விண்மீனின் வாழ்வு எப்போது எப்படி முடியும் என்பதை வரையறுத்துக் கூற முடியும். பிறக்கும் பொழுது விண்மீனின் நிறை நமக்குத் தெரியும் பட்சத்தில் , முன்னர் குறிப்பிட்டது போல் விண்மீனின் வாழ்க்கைப் பயணப் பாதை மற்றும் அதன் முடிவை வானியலாளர்களால் ஊகித்துக் கூற இயலும்.


ஒரு விண்மீன் கதிரவனின் நிறைப் போல் 8 மடங்கு மதிப்பு நிறையைப் பிறக்கும் பொழுது பெற்றிருந்தால் , அது 10 முதல் 15ஆயிரம் மில்லியன் ஆண்டு வாழ்விற்குப்பின்னர் சிவப்பரக்கனாக (Red Giant ) மாற்றமடையும். அதன் பின்னர் வெள்ளைக் குள்ளனாக (White Dwarf ) உருமாற்றம் அடைந்து, குளிர்ந்து மங்கலாகி மறைந்து விடும். இருப்பினும் எல்லா விண்மீன்களின் வாழ்வும் இது போல் எந்த சுவாரசியம் இன்றி முடிவதில்லை. பொதுவாக பல்லாயிரக்கணக்கான விண்மீன்கள், பெரு நோவா (Super nova ) க்களாக மாற்றமடைந்து பல கோடி கதிரவன்களின் பொலிவுடன் பிரகாசித்து, பின் வெடித்து தூள்தூளாகின்றன.





வானியல் நிகழ்வுகளில் இத்தகைய பெரு நோவாக்கள் காணப்படுவது மிக அரிதானது. வானியல் நிகழ்வுகளில் இத்தகைய பெரு நோவாக்கள் காணப்படுவது மிக அரிதானது. நமது பால்வழிக்கூட்டத் திரளில் (Milky way galaxy)  1987 ஆம் ஆண்டிற்கு முன் குறிப்பிடும் படியாக நான்கு பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. 

முதலாவதாக கிபி 1006 ஆம் ஆண்டு லூபஸ் (Lupus) விண்மீன் கூட்டத்தில் கட்புலனான SN1006. 

அடுத்தது SN 1054 என்ற ரிஷப விண்மீன் கூட்டத்தில் (Taurus constellation ) கிபி 1054 ஆண்டு காணப்பட்டது. 


கிபி 1572 ஆம் ஆண்டில் காசியொப்பியா (Cassiopeia) விண்மீன் கூட்டத்தில் டைக்கோ பிராஹியால் மூன்றாவதும் (SN1572)

கிபி 1604 ஆம் ஆண்டில் கெப்ளர் (Kepler) மற்றும் கலிலீயோ (Galileo) ஆகியவர்களால் ஓஃபியாகெஸ் (Ophuhics) விண்மீன் கூட்டத்தில்  நான்காவதும் (SN1604) காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.





கிபி 1987 ஆம் ஆண்டில் நம்மிடமிருந்து 1,70,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பெரிய மெக்லானிக் மேகக் கூட்டம் (Large Magellanic cloud galaxy) என்ற விண்மீன் திரளில் கட்புலனாகும் அளவிற்கு பொலிவுடைய பெரு நோவா ஒன்றை 29 வயதேயான இயான் ஷெல்ட்டன் (Ian shelton) என்ற கனடா (Canada) நாட்டைச் சேர்ந்த இளம் வானியலாளர் சிலி (Chile) நாட்டிலுள்ள லாஸ் காம்பனாஸ் (Las Companas) வானியல் ஆய்வு மையத்திலிருந்து கண்டறிந்தார். 





இப் புதிய பெருவோவா SN1987 A , என்று பெயரிடப் பட்டுள்ளது. மேற்கண்ட நிகழ்வு வான் பொருட்களில் ஏற்படும் திடீர் மாற்றங்களை தொலை நோக்கி மற்றும் இதர கருவிகள் மூலம் காண ஒரு வாய்ப்பாக அமைந்தது.

ஏன் சில விண்மீன்கள் மிக வன்மையாக வெடித்துச் சிதற வேண்டும்?எது இத்தகைய திடீர் வானியல் மாற்றத்தை தூண்டுகிறது? போன்ற வினாக்களுக்கு பன்நெடுங்காலமாக வானவியலாளர்கள் விண்மீன்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கருத்தாய்வுகளின் அடிப்படையில் இரு மாதிரிகளை வெற்றிகரமாக உருவாக்கினர். அவற்றை முதல் வகை (Type 1) என்றும் இரண்டாம் வகை   (Type 2) என்றும் பிரிக்கின்றனர். முதல் வகை பெரு நோவாவானது முதலிலொரு இரட்டை விண்மீன் தொகுப்பில் (Double Star System ) வெள்ளைக் குள்ளனாக இருக்கும். ஆனால் இரண்டாம் வகை பெரு நோவா அளவில் பெரிய விண்மீன் ஒன்றின் இறப்பை கட்டியம் கூறுவதாகும்.

புவியிலிருந்து நோக்க இவ்விருவகையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரித் தெரிந்தாலும் அவற்றிலிருந்து பெறப்படும் நிறமாலை வரிகள் வேறுபாட்டைத் தெரிவிகின்றன. முதல் வகை பெரு நோவாவிற்கு ஹைட்ரஜன் கூடு (Hydrogen Shell) எதுவும் கிடையாது என்பதால் அதன் நிறமாலையில் ஹைட்ரஜன் வரிகள் இருப்பதில்லை. அதே சமயம் இரண்டாம் வகை பெரு நோவாவின் நிறமாலை வரிகளை நோக்கும் கால் அதில் ஹைட்ரஜன் வரிகளைக் காண முடிகிறது. முதல் வகை பெரு நோவாக்கள், இரண்டாம் வகையை விட அதிகப் பொலிவுடன் விளங்குகின்றன. மேலும் முதல் வகை பெரு நோவாக்கள் எச்சங்கள் எதுவும் இருப்பதில்லை ஆனால் இரண்டாம் வகை சிறிய எச்சங்களை விட்டுச் செல்லுகிறது.


தொடரும்.....

Comments

Post a Comment

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)