கதிரவன் - பகுதி (6)

துருவ விண்ணொளிகள் அழைக்கப்படும் அரோரா போரியலீஸ் மற்றும் அரோரா ஆஸ்டிரலீஸ் (aurora borealis and aurora australis) என்பவை வானில் காண்போரின் கண்ணையும் கருத்தையும் வசீகரிக்கும் ஒரு திகைப்பூட்டும் பல வண்ண இயற்கை மின்னியல் அதிசய நிகழ்வாகும் (Natural electrical phenomenon). பொதுவாக வானின் உயர் அட்சங்களிலும் குறிப்பாக ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் வட்டப் பகுதிகளிலும் கட்புலனாகும் கண்கவர் வானியல் காட்சியாகும்.
 ஆர்டிக் வட்டப் பகுதியில் இது வட துருவ விண்ணொளி (aurora borealis) என்றும் அண்டார்டிக் பகுதியில் தென் துருவ விண்ணொளி (aurora australis) என்றும் அழைக்கப்படுகிறது. வட ஒளிகள் (northern lights) என்று ஆர்டிக் பகுதியிலும், தென் ஒளிகள் (southern lights) என்று அண்டார்டிக் பகுதியிலும் இக் காட்சிகள் அழைக்கப்படுகின்றன.
அரோரா (Aurora) என்பது ரோமானியர்களின் வைகறை பெண் தெய்வத்தின் பெயராகும். அரோரா என்ற பெயர் பொதுவாக காலத்தால் அருணோதயம், விடியல், அதிகாலை என்றும் பொருள் கொள்ளலாம் என்றாலும் திசையில் கிழக்கையும் கீழ்த்திசை நாடுகளின் மக்களையும் குறிப்பதாகவும் கருதலாம்.

ஆவிட் (Ovid) என அறியப்படும் பப்ளியஸ் ஆவிடஸ் நாசோ (Publius Ovidius Naso) மார்ச் 20, கிமு 43 – கிபி 17 வரையிலான அகஸ்டஸ் சீசர் காலத்தில் வாழ்ந்த ஒரு ரோமானியக் கவிஞர் ஆவார். 

இவர் காதல், கைவிடப்பட்ட பெண்கள்தொன்மம் சார்ந்த உருமாற்றங்கள் போன்ற விடயங்கள் குறித்து எழுதியுள்ளார். மரபு வழியாக  வேர்ஜில்ஹோராஸ்  ஆகியோருடன், இலத்தீன்இலக்கியத்தின் பெரும் புலவர்களுள் ஒருவராக ஆவிட் கருதப்படுகிறார். பிந்திய பழங்காலத்திலும், மத்திய காலத்திலும், இவரது கவிதைகளைப் போல எழுதும் வழக்கம் பெருமளவில் நிலவியதுடன், இக்கவிதைகள், ஐரோப்பியக் கலையிலும், இலக்கியத்திலும் பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கக்கூடிய தாக்கத்தை உண்டாக்கியிருந்தன. இவரின் உருமாற்றங்கள் (Metamorphoses) என்ற கவிதையில் அரோராவை
“என்றும் இளமையாக இருக்கும் அரோராதான் முதலில் கண் விழிப்பவள். கதிரவனுக்கு முன்பாகவே  தனது ரதத்தில் ஏறி அந்த நாளுக்கான ஒளியை கொண்டு வருபவள். அழகிய ஊதா நிற சால்வை பின்புறம் பறக்க , ரோஜா மலர்களை வழி நெடுக தூவியபடி பயணிப்பவள்” என்று வர்ணிக்கிறார். 




 Image courtesy:  https://www.britannica.com/topic/Eos-Greek-and-Roman-mythology

அரோராவை குறிப்பிட்ட எந்த ஒரு ரோமானிய புராணங்களுடனும் தொடர்புடையதாகக் கருத இயலாது. இலத்தீன் மொழியில் தங்கத்தை ஆரம் (Aurum) என்று அழைப்பதால்  பொலிவான என்ற பொருளில் தொடர்புபடுத்தவும் வாய்ப்புள்ளது.

கிரேக்க புராணப்படி டைட்டன்ஸ் ஹைப்பரியனுக்கும் (Titans Hyperion) தியா (Theia) விற்கும் பிறந்தவள் ஈயோஸ் பெண்தெய்வம். அதிகாலைக்கு தெய்வமான ஈயாஸிற்கு இரு உடன்பிறந்தவர்கள். ஹீலியோஸ் (Helios) என்றழைக்கப்படும் கதிரவன் ஆகிய ஆண் கடவுள் மற்றும் செலீன் (Selene) என்றழைக்கப்படும் நிலவு ஆகிய பெண்கடவுள். ஈயோஸின் கணவர் அந்திப் பொழுது (Dusk) என்ற அஸ்ட்ராயஸ் ( Astraeus).  இந்த தம்பதியினருக்கு எண்ணிலடங்காத மழலைச் செல்வங்கள். ஈயோசும், அஸ்ட்ராயசும் இணையும்  அந்திக் கருக்கல் மற்றும் வைகறை மெல்லொளி (Twilight) யின் போது உருவாகும் அனைத்தையும் இம் மழலைச் செல்வங்கள்  குறிக்கின்றன. இக் குழந்தைகளில் நான்கு வகைக் காற்றுகள் (Animoi) ஈயோஸ்ஃபோரஸ் (Eosphorus) என்றழைக்கப்படும் காலை விண்மீன் (Morning Star) மற்றும் அஸ்ட்ரா பிளானெட்டா (Astra Planeta) என்ற அலையும் விண்மீன்களும் கோள்களும் குறிப்பிடத்தக்கவை. 

ரோசா நிற விரல்களும்,  பூக்களால் நெய்யப்பட்ட இளஞ்சிவப்பு நிற மேலங்கியும், தலையில் பெரிய வெண் நிற இறகுகளால் ஆன தலையணி (Tiara) யும் ஈயோஸ் அணிந்திருப்பாள்  என்று வர்ணிக்கப்படுகிறாள்.




மற்றொரு கதைப்படி ஆர்ஸ் (Ares) கடவுளின் மனைவி ஈயோஸ். இதனால் பொறாமை கொண்ட அஃப்ரோடைட் (Aphrodite) அவளை தீராத காம இச்சையுடன் அலையுமாறு சாபமிட்டாள். இதன் காரணமாக செஃப்பாலஸ் (Cephalus), திட்டோனஸ் (Tithonus), ஓரியன் (Orion)முதலிய பல இளைஞர்களை ஆள்கடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அவளுக்கு மெம்னான் (Memnon),இமதியான்(Emathion) என்ற இரு மகன்கள் என்றும் அவர்களில் மெம்னான் டிரோஜன் போரில் டிரோஜனின் பக்கத்தில் போர் செய்து மடிந்தான் என்றும் சொல்லப்படுகிறது. ஈயோசை அரோரா என்றும் அழைப்பது உண்டு.  
கிரேக்க ஈயோஸ்  பெண் கடவுளின் (Eos godess) பண்புகளுடன் பெரும்பாலும் அரோராவின்  குணாதிசயங்கள் ஒத்திருப்பதைக் காண முடிகிறது.

வேறு சிலர் அவளை ஈயோஸைப் போல பெரிய வெண்ணிற இறக்கைகள்  கொண்டவள் என்றும், நால்வகை காற்றுகள் மற்றும் காலை விண்மீனின் (Morning Star) அன்னை என்றும் குறிப்பிடுகின்றனர். அரோரா என்ற பெயரின் புராண பின்புலத்தைப் பார்த்தோம். 


தொடரும்......

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)