வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (12)
இந்த அத்தியாயத்தில் பொலிவு மாறு விண்மீன்கள் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்.
மாற்றம் என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாதது. அது போலவே விண்மீன்களின் வாழ்விலும் மாற்றங்களைத் தவிர்க்க இயலாது. கதிரவனை
ஒத்த விண்மீன் அல்லது அதை விடச் சற்று அளவில் பெரிய விண்மீன் தனது எரிபொருள் இருப்பு
குறைந்ததும், தனது வடிவில் பல மடங்கு பெரியதாக சிவப்பு அரக்கனாக மாற்றமடைகிறது. இறுதியில்
வெள்ளைக் குள்ளனாக புவியின் அளவுக்கு வடிவத்தில் குறைந்து, மிக அடர்த்தியான பொருளாக
மாற்றமடைந்து பின் மறைகிறது.
இக் கால கட்டங்களில் விண்மீனின்
பொலிவு முதலில் உயர்ந்தும் பின் குறைந்தும் மாற்றமடைகிறது. ஆனால் பொலிவில் ஏற்படும்
இம் மாற்றங்கள் விண்மீனின் பிறப்பின் பொழுது அது அமையும் நிறையைப் பொருத்து பல மில்லியன்
அல்லது பல ஆயிரம் மில்லியன் ஆண்டு கால அளவிலேயே ஏற்படுகிறது. ஆனால் சில விண்மீன்கள்
தனது பொலிவில் சிறிய கால அளவுகளிலேயே மாற்றமடையும் என்று முன்னரே சொல்லியிருந்தோம்.
பொலிவில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் சில மணி, சில நாள் அல்லது சில மாதங்களில் கூட
நிகழ்வதையும் அறிவோம். இத்தகைய பொலிவு மாறு விண்மீன்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளதை
வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
GIF animation courtesy : https://physics.unm.edu
விண்மீன்களை சிறிது காலம் உற்று
நோக்கி ஆய்வு செய்தால் அவைகள் பொலிவில் மாறுபடுகின்றவா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள
இயலும்.சில,முன்னர் குறிப்பிட்டது போல சில மணி நேரங்களிலேயே பொலிவு மாற்றமடையுமென்றால்
அதனை ஒரு நாளிரவிலேயே ஆய்ந்து அறிந்து கொள்ள முடியும். சில விண்மீன்கள் பொலிவு மாற
எடுத்துக் கொள்ளும் காலம் நாட்கணக்கில் அல்லது மாதக் கணக்கில் இருக்குமானால் அதனைப்
பல இரவுகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வதன் வாயிலாகவே அறிய முடியும். விண்மீன்கள் ஏன்
பொலிவில் மாறுபடுகின்றன? இந்த கேள்விக்கான விடை எளிதாக ஒற்றை வரியில் பகரக் கூடியது
இல்லை. விண்மீன்களின் பொலிவு மாற்றம் அதன் தன்மையைச் சார்ந்தது. பொலிவு மாறும் விண்மீன்கள்
என்றதும் உடனே நம் நினைவுக்கு வருவது செஃப்பயிட்(Cepheid) வகை விண்மீன்களாகும்.
இவ்வகை விண்மீன்களின் பொலிவு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடிப்
பின் குறையும் என்றறிவோம். வானியலாளர்கள் விண்மீனில் நடக்கும் தீராத வாழ்க்கைப் போராட்டத்தின்
விளைவே இது என்கின்றனர்.அதாவது முன்னர் கூறியது போல எப்போதும் விண்மீனின் வாழ்வு என்பதே
அணுக்கரு வினையால் ஏற்படும் பெரும் வெப்பமும் , ஈர்ப்பு விசையின் காரணமாக ஏற்படும்
அழுத்தமும் ஒன்றை ஒன்று சமன் செய்யப் போராடுவதே ஆகும்.
எனவே இந்தப் போராட்டத்தின் விளைவாக
விண்மீன் சுருங்கி விரிவடைவதால் விண்மீனின் பொலிவு மாற்றமடைகிறது. எப்படி ஒரு அழுத்த
சமையல் கலனில் (Pressure Cooker) வெப்பத்தின் விளைவாக நீராவி விரிவடைதால் கலன் வெடித்துச்
சிதறாமல் இருப்பதற்காக அதிகப்படியான நீராவி அவ்வப்போது வெளியேற்றப்பட்டு கலன் சமனிலையில்
அமைகிறதோ அது போல செபியிட்களின் வெளிப்புற ஏடுகள் வெப்பம் மற்றும் கதிர் வீச்சைக் கவரும்
தன்மை கொண்டு விளங்குவதால், விண்மீனின் உள்ளே உருவாகும் வெப்பம் மற்றும் கதிர் வீச்சு
ஆகியவற்றை கவர்ந்து விரிவடைகின்றன.இதனால் விண்மீன்கள் பொலிவாகத் தெரிகின்றன.வெளிப்புற
ஏடுகளிலிருந்து வெப்பம் எளிதில் வெளியேற முடியுமாதலால் விண்மீனின் புற ஏடு குளிர்ச்சியடைந்து
குலையத்துவங்கும். எனவே உட்புற அழுத்தம் அதிகரிப்பதால் விண்மீன் சுருங்கத்துவங்கும்.
இதனால் விண்மீன் பொலிவை இழந்து தோன்றும். சில நாட்களில் இச் சுற்று மாறி மாறி நடந்து
கொண்டே இருப்பதால் செஃப்பயிட் விண்மீன்கள் பொலிவில் மாறிக் கொண்டே இருக்கின்றன.
செபியிட்களின் பொலிவு மாற்றச் சுற்றுக் காலமானது அவற்றின் மெய்யான பொலிவு(Absolute
Brightness) மதிப்பைச் சார்ந்தமையும்.அதாவது மிகப் பொலிவான செபியிட் விண்மீனின் பொலிவு
மாற்றச் சுற்றுக்கான கால அளவு அதிகமாகவும், பொலிவு குறைந்த செபியிட் விண்மீனின் பொலிவு
மாற்றச் சுற்றுக்கான கால அளவு குறைவாகவும் இருக்கும். இத் தொடர்பு மூலம் பேரண்டத்தொலைவுகளை
அளவிடும் ஒரு சிறப்பான அளவு கோல் (Cosmic yardstick) உருவாக்கம் செய்யப்பட்டதென்பதை
நாம் அறிவோம். நமது பால்வழிக் கூட்டத்தில் (Milkyway) 700க்கும் அதிகமான செஃப்பியிட்கள்
இருப்பதாக அறியப்பட்டுள்ளது.துருவ விண்மீன் என்றழைக்கப்படும் (Polaris) போலரிஸ் விண்மீனும்
ஒரு செபியிட்தான்.ஆனால் அதன் பொலிவு மாற்றத்தின் அளவு மிகக்குறைவாக இருப்பதால் எளிதில்
மாற்றம் கட்புலனாவதில்லை.
இதன் மெய்யான பொலிவு மதிப்பு எண் 3 முதல் 9 வரை சுமார் 330 நாட்கள் கால இடைவெளியில் மாற்றம் பெறுகிறது. செபியிட்கள் மற்றும் மிர்ரா ஆகிய இரு வகையான பொலிவு மாறும் விண்மீன்களும் முதன்மைத் தொடரிலிருந்தே உருவாகியிருக்க வேண்டும் என்றும் ,அவற்றின் ஹைட்ரஜன் இருப்பு குறைந்ததும், அளவில் பெரிய விண்மீன்கள், நிலைத்தன்மையை இழந்து செபியிட்கள் போன்று பொலிவு மாற்றத்துடன் தோன்றுகின்றன. அவற்றில் சில சிவப்பரக்கர்களாக மாற்றமடைந்த பின்னாலும் மிர்ரா விண்மீன் போல மெதுவாகத் தொடர்ந்து நீண்ட,சீரற்ற கால இடைவெளியுடன் துடிக்கின்றன என்று வானியலாளர்கள் கருதுகின்றனர்.
வளரும்....
Comments
Post a Comment