வானம் எனக்கொரு போதிமரம் அத்தியாயம் - (11)

வெளிப்புற ஏடுகள் விரிந்து கொண்டே போவதால் விண்மீன், சிவப்பு அரக்கனாக மாற்றமடைந்து கொண்டிருக்கும் பொழுது கூட அதன் சிறிய உட்புறமானது தொடர்ந்து சுருக்கமடையும். அவ்வாறு சுருங்குவதன் காரணமாக உட்புற அடர்த்தி அதிகரித்து, சாதாரணமாக 1000 மடங்கு சராசரி விண்மீனின் உட்புற அடர்த்திக்குச் சமமாக உயரும். இதன் காரணமாக மையத்தில் வெப்ப நிலை 100 மில்லியன் கெல்வின் அளவிற்கு உயர்வதால் ஒரு புதிய அணுக்கரு வினை நிகழத் தொடங்குகிறது. மூன்று ஹீலியம் அணுக்கருக்கள் இணைவு வினையில் ஈடுபட்டு கார்பன் அணுக்கரு உருவாகத் தொடங்கும். விண்மீன் மீண்டும் ஆற்றலை உருவாக்கம் செய்து நிலைத்தன்மையைத் தற்காலிகமாகப் பெறும்.




இதற்குப் பின்னர் நடக்கவிருப்பது அனைத்தும் விண்மீனின் மொத்த நிறையினை சார்ந்தது. நமது கதிரவனைப் போன்ற விண்மீனைக் கருதினால் பெரியதாக ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. ஹீலியத்தின் அணுக்கரு வினை காரணமாக உருவாகும் கடும் அழுத்தம் சிவப்பரக்கனின் வெளிபுற உறையை முற்றிலுமாக ஊதித்தள்ளி விடுகிறது. எனவே மிச்சமிருப்பது கிட்டத்தட்ட புவியின் அளவிலான வெறும் மையப்பகுதி மட்டுமே. இப் பகுதி மிக வெப்பமாகவும் அதே சமயம் அளவில் சிறியதாகவும் இருப்பதால் விண்மீனின் இந்த மிச்சத்தை வெள்ளைக் குள்ளன் (WHITE DWARF) என்றழைக்கலாம். பொதுவாக வெள்ளைக் குள்ளர் நிலையிலிருக்கும் விண்மீன்கள் கட்புலனாவதில்லை. 19ஆம் நூற்றாண்டின் பாதி வரை இவை அறியப்பட்டிருக்கவில்லை. பொலிவுமிக்க சிரியஸ் (Sirius) விண்மீனைப் பற்றிய ஆய்வுகளின் பொழுது தற்செயலாகவே கண்டறியப் பட்டன.



1844ஆம் ஆண்டில் F.W. பெஸல் சிரியஸை புகைப் படங்கள் எடுத்துத்த பொழுது, அதன் இயக்கத்தில் தடுமாற்றம் (WOBBLING) இருப்பது போலத் தோன்றியது. பெஸல் இதற்கு விளக்கமளிக்கும் பொழுது சிரியசுடன் கட்புலனாகாத, கருமையான ஒரு பெரிய துணை விண்மீன் இருந்து அவை இரண்டும் தட்டாமாலை சுற்றி விளையாடுவது போல இயங்க வேண்டும் எனக் கருதினார். இறுதியாக இந்த விண்மீன் சிரியஸ் B கண்டுபிடிக்கப் பட்ட போது அது சாதாரணமான விண்மீனைப் போல் இல்லை என்பது அறியப்பட்டது. சிரியஸ் B யானது பொலிவாக இல்லாவிட்டாலும் கூட வெள்ளையாக இருந்ததும் அதன் வலிமையான ஈர்ப்புவிசையின் காரணமாக சிரியஸ் A க்கூட நகர்த்த இயலும் என்பதும் தெரிய வந்தது.



சிரியஸ் பற்றிய புதிருக்கு, இந்தியாவைச் சேர்ந்த திரு. சுப்ரமணியன் சந்திரசேகர் தனது 19ஆம் அகவையில் 1930 ஆம் ஆண்டில் மிகச் சரியானதோர் தீர்வைத் தந்தார்.




 ஒரு விண்மீன் தனது அணு எரிபொருளனைத்தும் முற்றிலுமாகத் தீர்ந்த பின் புதிய தொரு பொருளாக வடிவெடுக்கிறது என்றும் அவ்வாறு மாற்றமடையும் பொழுது அதன் அடர்த்தி கற்பனைக்கெட்டாத அளவு, அதாவது ஒரு தீப் பெட்டி அளவிலான பொருள் சுமார் 12 டன் நிறை உடையதாக இருக்கும் என்று தனது கணக்கீடுகள் மூலம் கண்டறிந்தார். 

வெள்ளைக் குள்ளன்  நிலையிலுள்ள விண்மீன்கள் எல்லாம் இந்தப் பொருளாலேயே ஆக்கப்பட்டதாக இருப்பதால்தான் சிரியஸ் B போன்ற புவியின் அளவை ஒத்த விண்மீனால் அதை விடப் பெரிய அதன் துணையை இழுத்துத் தள்ள இயலுகிறது. மேலும் வெள்ளைக் குள்ள விண்மீனின் நிறை கதிரவனின் நிறையை விட 1.4 மடங்குக்கு மேலாக இருப்பின் அவ்விண்மீன் கண்டிப்பாக நிலைத்தன்மை யுடன் இருக்காது என்றும் கணக்கிட்டுக் கூறினார். இந்த மாறு நிலை நிறையை (Critical Mass) சந்திரசேகர் எல்லை (Chanadrasekhar Limit) என்றழைக்கிறோம்.


வெள்ளைக் குள்ளன் நிலையை அடைந்த விண்மீன், சில மில்லியன் ஆண்டுகாலம் அமைதியாக வாழ்ந்த பின்னர் ஒளியை வெளியிடுவது நின்று விடும்.ஆகவே நமக்கு கட்புலனாவது இல்லை.கதிரவனைப்போல 8 மடங்கு நிறை வரையில் நிறை கொண்ட விண்மீன்கள், வெள்ளைக் குள்ளன் நிலையுடன் தமது வாழ்வை முடித்துக் கொள்ளும் என்று வானியலாளர்கள் நம்புகின்றனர். இத்தகைய விண்மீன் முற்றிலும் கார்பனால் (கரி) ஆக்கப்பட்டிருப்பதால் 'வானில் உள்ள வைரம் போல்' என்ற சொற்றொடருக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் எனலாம்.

வளரும்.........

Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)