வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (8)

பன் நெடுங்காலமாக மனிதன் விண்மீன்கள் நிலையானவையாக இருப்பதைப் பார்த்து வந்ததால், அவை தொடக்கமும் , முடியும் அற்றவை என்றே கருதினான்.வானியலாளர்கள் கூட , பல நூற்றாண்டு காலங்களாக இத்தகைய கருத்தையே கொண்டிருந்தனர்.ஆனால் எப்போது விண்மீன்கள் ஒளிப் புள்ளிகள் இல்லை என்பதும் உண்மையில் அவைகள் அனைத்தும் மிகப் பெரிய நெருப்பாய் பற்றி எரிந்தபடி ஒளிரும் வெப்பமான வாயுக் கோளங்கள் என்பதும் தெரிய வந்ததும் மேற் சொன்ன கருத்து பிழையானதென முடிவானது. ஏனெனில் விண்மீன்கள் வெப்பமான ஒளிரும் கோளங்கள் என்பது உண்மையானால் அவை எதையோ எரித்தே ஆற்றலை வெளித்தருகின்றன.அப்படி எதையோ எரித்து ஆற்றலைத் தரும் பட்சத்தில், எப்போது எரியத் தொடங்கியது?அதாவது எரியத் தொடங்கியதுதான் அதன் தொடக்கம் என்றாகிறது.அதே போல் எரி பொருள் முற்றிலுமாக எரிந்து தீர்ந்த பின்பு, எப்படி விறகு அடுப்பில் எரிந்து சாம்பல் மிஞ்சுகிறதோ அது போல விண்மீனில் என்ன மிஞ்சும்?எரி பொருள் முற்றிலுமாக எரிந்து தீர்ந்த நிலையை விண்மீன்களின் முடிவு என்று கூறலாமா?

நெடு நாட்களாகவே விண்மீன் எப்படி ஒளி தருகிறது என்பதை புரிந்து கொள்ள பூமியில் அவன் அறிந்த முறைகளில் வெப்பத்தையும்,ஒளியையும் பெறக் கூடிய வழிமுறைகளின் அடிப்படையில் சிந்தித்தான்.மரக் கட்டை, கரி (Coal) இவற்றை எரித்து ஆற்றலை மனிதன் பெற்றான். எனவே விண்மீன்களிலும் கரி எரிக்கப் படுவதாகக் கொண்டான். இன்று இது போன்ற கருத்து நகைப்புக்குரியதானாலும் அன்று அணு ஆற்றலைப் பற்றி அறியாத நிலையில் இக் கருத்தை எளிதாகத் தவறு என்று தள்ளிவிட முடியாது என்பதே உண்மை.

இருப்பினும் விண்மீண்களில் கரியை எரிப்பதால் ஒளியும், வெப்பமும் உருவாகிறது என்ற கருத்து அறிவிற்கு ஒவ்வாதது என்பதை எளிதில் சுட்டிக் காட்ட முடியும். புவியைப் போல் 330,000 மடங்கு நிறையுள்ள கதிரவன் முழுவதுமாக கரி மற்றும் ஆக்ஸிஜனால் நிரப்பப்பட்டு இருந்தால் கூட, இப்போது எரிந்து கொண்டிருக்கும் வீதத்திலேயே எரிந்தால் சுமார் 1500 முதல் 2000ஆண்டுகளுக்கே ஓளி வீச முடியும். அதாவது இந்த கணக்குப்படி பார்த்தால் நமது கதிரவன் இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் , இயேசு கிருத்துவின் காலத்தில் தான் உருவாகியிருக்க வேண்டும். அது உண்மையில்லை என்பது நாம் அறிந்ததே. கதிரவனில் ஆற்றல் உருவாகும் விதத்தை 1854 ஆம் ஆண்டில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஹெல்மோட்ஸ் (Helmholtz) என்பவர் விளக்க முற்பட்டார்.


(Helmholtz 1881 - 1894)

அவர் ஈர்ப்பு விசையின் காரணமாக ஏற்படும் குறுக்கத்தின் ( Gravitational Contraction) விளைவாகவே ஆற்றல் உருவாகிறது என்று கூறினார்.அதாவது கதிரவனின் மையப் பகுதியை நோக்கி பொருள்கள் (Matter) தொடர்ச்சியாக விழும் போது ஆற்றல் உருவாவதாகக் குறிப்பிட்டார். எவ்வாறு ஈர்ப்பின் காரணமாகத் தானாகவே கீழே விழும் பாறைத்துண்டு ஒன்று ஆற்றலைப் பெறுகிறதோ அது போலவே கதிரவப் பொருளும் கதிரவனின் மையத்தை நோக்கி விழும்போது ஆற்றலைப் பெற்று , அதனைப் பின்னர் வெப்பமாக வெளியிடும். ஹெல்மோட்ஸின் மேற்கூறப்பட்ட கருத்தும் தவறு என்று அறியப்பட்டது.ஹெல்மோட்ஸின் கருத்தால் ஈர்க்கப்பட்டு



(Lord Kelvin 1824 - 1907)

ஆங்கிலேய இயற்பியலாளர் லார்ட் கெல்வின் (1824 - 1907) சில கணக்கீடுகள் மூலம் கதிரவனின் வயது 50 மில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிட்டுக் கூறினார். இது மிகப் பெரிய சிக்கல்களை அறிவியல் உலகில் ஏற்படுத்தியது. அதாவது புவியியலாளர்களும், உயிரியலாளர்களும் புவிப் பாறை ஏடுகளுக்கிடையே கிடைத்த படிமங்களிலிருந்து(Fossils), புவி 50 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மையுடையது என்று நிரூபித்திருந்தனர். கதிரவன் தோன்றுவதற்கு முன்பாகவே புவியும் அதில் உயிரினங்களும் எப்படித் தோன்றியிருக்க இயலும்? எனவே கெல்வினின் கணக்கீட்டில் ஏதோ தவறு ஏற்பட்டிருக்கலாம் அல்லது ஹெல்மோட்ஸின் அடிப்படையான கருதுகோளில் பிழை இருக்க வேண்டும். எது எப்படி ஆனாலும் இயற்பியலாளர்கள் கதிரவன் குறித்த ஆய்வுகளை விடுவதாக இல்லை.




(Albert Einstein 1879 - 1955)


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த இயற்பியலாளார் ஆல்பிரட் ஐன்ஸ்டீனின் (1879 – 1955) நிறை - ஆற்றல் சமன்பாடு ,முன்னர் குறிப்பிட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அவர் நிறையை ஆற்றலாகவும் ஆற்றலை நிறையாகவும் மாற்ற முடியும் என்றார். அவர் பொருள் என்பதே ஒரு வகை யில் மிகவும் அடர்த்தியான ஆற்றலின் வடிவமே என்றும் பொருளிலிருந்து ஆற்றல் E = mc2 என்ற வாய்ப்பாட்டின் படி வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டார். இதில் E என்பது ஆற்றலையும் c என்பது ஒளியின் திசை வேகத்தையும் குறிக்கும். ஒளியின் திசை வேகம் வினாடிக்கு 300,000,000 மீட்டர் என்று முன்னரே குறிப்பிட்டிருந்ததை நினைவில் கொண்டால் c2 என்பது மிக மிகப் பெரியது என்பதை உணர இயலும். எனவே சிறிய நிறை கூட மிகப் பெரிய அளவிலான ஆற்றலை வெளித்தரும். எளிய கணக்கீட்டின் மூலம் ஒரே ஒரு கிராம் நிறை முழுவதுமாக ஆற்றலாக மாற்றப் பட்டால் 21500 மில்லியன் கிலோ கலோரி ஆற்றல் வெளியிடப்படும் எனக் காட்டலாம். இதற்கிடையில் இயற்பியலில் சோதனைகள் மூலம் அறிவியலாளர்கள் அணுக்கரு பற்றிய பல புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாக , இதுவரையில் அறியப்பட்டிருந்த எல்லா வகையான ஆற்றல்களையும் விடப் பெரிய ஆற்றல் மூலமாக அணுக்கரு ஆற்றல் அமையும் என்று எடுத்துக் கூறினர்.



வானவியல் இயற்பியலாளர்களோ விண்மீன்கள் நமது கதிரவனை போன்ற உயர் வெப்ப நிலையில் உள்ள வாயுக் கோளங்களே என்றும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தால் ஆன இவை ஈர்ப்பு விசையின் காரணமாகவே நிலை நிறுத்தப்பட்டுள்ளன என்றனர். ஈர்ப்பு விசைகள் நிறையுடன் அதிகரிக்குமாதலால் அதிகமான நிறையுடைய விண்மீனின் ஈர்ப்பு விசையும் அதிகமிருக்கும் .ஆகவே விண்மீன் உருக்குலைய(Collapse) வேண்டும். இத்தகைய நிலையில் விண்மீனின் நிலைப்பாட்டை விளக்க ஒரு ஒப்பீட்டைக் கூறலாம்.




ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் வீரர் ஒருவரைக் கருதுவோம். அவர் புவியின் ஈர்ப்பு விசைக்கு எதிராக பளுவைத் தனது தலைக்கு மேல் இரு கைகளாலும் உயர்த்தும் போது, புவியின் கீழ் நோக்கிய விசையை எதிர்க்கும் வகையில் அதற்குச் சமமான ஆனால் எதிரான விசையை அளிப்பதன் மூலம் நிலைப்பாட்டைப் பெற்று குலைவைத் தவிர்க்கிறார். இந்த ஒப்பீட்டில் பளு தூக்கும் வீரருக்கு அவர் உடலில் உள்ள வேதியாற்றல், தசைகளுக்குத் தரப் பட்டு குலைவு தவிர்க்கப் படுகிறது. அது போலவே விண்மீன் ஏதோ ஒரு வகையில் ஆற்றலைப் பெற்று பேரதிகமான ஈர்ப்பு விசையை எதிர் கொள்ளுகிறது என்று கருத முடியும்.





Arthur Stanley Eddington 1882 - 1944)

1926 இல் ஆர்தர் ஸ்டான்லி எடிங்க்டன்(1882 - 1944) என்ற அறிவியலாளர் கதிரவன் மற்றும் பிற விண்மீன்கள், தமது மையத்தை நோக்கிச் செயல் படும் அதிக அளவிலான அழுத்தத்தை எதிர்த்தும், உருக்குலையாமல் நிலைபாட்டுடன் அமைந்தும் தொடர்ந்து ஆற்றலை வெளித்தர வேண்டுமானால் விண்மீன்களின் மையம் மிக அதிக அளவிலான சுமார் 15 மில்லியன் கெல்வின் வெப்ப நிலையில் அமைய வேண்டுமென்றும், அவற்றில் கண்டிப்பாக அணுக்கரு வினை நடைபெற வேண்டும் என்றார்.மேலும் அத்தகைய வெப்ப நிலை அணுக்கரு இணைவு (Nuclear Fussion) வினை நடைபெற்றால் மட்டுமே சாத்தியமாகும் என்றார். விண்மீன்களில் அதிக அளவு ஹைட்ரஜனும் ,ஹீலியமும் இருப்பதால் ஹைட்ரஜன் அணுக்கள், இணைவின் மூலம் ஹீலியம் அணுக்களாக மாறக்கூடும் என்ற கருத்தைத் தெரிவித்தார். எட்டிங்க்டன் சரியான பாதையில் பயணித்திருந்தும் கூட, ஹைட்ரஜன் எப்படி ஹீலியமாக மாறுகிறது என்ற புதிரை விடுவிக்க முடியவில்லை.

Comments

Post a Comment

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)