வசீகரிக்கும் வானமும் வசப்படும் - பகுதி (3)

குழந்தைகள் காலையில் எழுந்தலிருந்தே, “தாத்தா எப்போது வானவியல் தொலைநோக்கி செய்வோம்” என்று ஆரம்பித்து விட்டனர். காலையில் தினப்படி கடமைகளை முடித்த பின்னர் பத்து மணிக்கு  செய்யலாம். கடைகள் பத்து மணிக்கு மேல்தான் திறக்கும் என்று சொல்லி விட்டார். பசங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். இருந்தாலும் மறைத்துக் கொண்டு குளித்து, சிற்றுண்டி சாப்பிட்டு கடைக்கு போக தயாராக இருந்தனர்.
மணி பத்தானது. குப்புசாமி குழந்தைகளுடன் நெல்லைக்கு தொலைநோக்கி செய்ய தேவையான பொருட்கள் வாங்க காரில் புறப்பட்டார். வேலு காரைச் செலுத்த பின் இருக்கையில் அமர்ந்து போகும் வழியில் உள்ள முக்கியமான இடங்களை சுட்டிக்காட்டிய வண்ணம் வந்தவரை, ராகுலும், சுகன்யாவும் , “தாத்தா கதையை தொடருங்க, இரவு நட்சத்திரம் பார்க்க வேண்டும் என்பதால் கதை சொல்ல முடியாதே” என்றனர். அதுவும் சரிதான் என்று நேற்று இரவு விட்ட இடத்திலிருந்து தொடர ஆரம்பித்தார். ஆனால் முன்னிருக்கையில்  அமர்ந்திருந்த குமரேஷ் தனக்கு சரியாக காதில் விழவில்லை என்று சொன்னதால் , சரி, இரவில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

முதலில் ஒரு ஆய்வுக்கூடத்திற்குத் தேவையான பொருட்களை விற்கும் கடைக்கு அவர்களை கூட்டிச் சென்றவர் அங்கு 100 செ.மீ குவியதூரமுள்ள 5 செ.மீ விட்டமுள்ள ஒரு தட்டைக் குவி லென்ஸ் ஒன்றையும் 2.5 செமீ குவியதூரமுள்ள தடித்த 5 செ.மீ விட்டமுள்ள சிறிய குவிலென்ஸையும் வாங்கிக் கொண்டார். பின்னர் பக்கத்தில் இருந்த எழுதுபொருள் விற்பனைக் கடையில் 3 இஞ்ச் விட்டமுள்ள 43 இஞ்ச் நீள கனத்த காகித அட்டைக்குழாயையும் வாங்கிக் கொண்டார். 



ஆவணங்களை மடிக்காமல் சுருட்டி குழாய்களில் வைத்து தபாலில் அனுப்ப இந்த குழாய்கள் கிடைக்கின்றன.இதை அஞ்சல் காகிதக் குழாய்கள்( Postal paper tubes) என்று கேட்டால் கிடைக்கும். இதற்கு மூடியும் உண்டு.  அதன் பின்னர்  கருப்பு  கனத்த தாள், பெவிக்கால், கத்திரி, கூரான கத்தி எல்லாம் வாங்கினார். கண்கள் விரிய இதையெல்லாம் பார்த்த குழந்தைகள் வேறு பொருள் எதுவும் வாங்க ஆர்வம் காட்டவில்லை. 





குழந்தைகளுக்கு நிறைய சந்தேகங்கள். தாத்தாவோ சாயங்காலம் மூன்று மணிக்கு எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைப்பதாக சொல்லியிருந்தார். முதலில் குழந்தைகளுக்கு குலென்ஸின் குவியதூரம் என்பதை விளக்க தொலைவான பொருட்களின் தலை கீழ் பிம்பத்தை வெண்திரையில் எற்படுத்தி 100 செமீ மற்றும் 2.5 செமீ குவியத்தொலைவு லென்ஸ்களின் தோராயமான குவியத்தொலைவை தையல் கடைகளில் பன்படுத்தப்படும் இஞ்ச் நாடாவினால் அளந்து காட்டினார்.






அடுத்ததாக வானியல் தொலைநோக்கியின் தத்துவத்தை எளிய படத்தால் விளக்கினார். 

இப்போது குழாயில் பொருத்தப்பட வேண்டிய லென்சுகளுக்கு இடையில் தூரம் 102.5 செமீ க்குள் அமைய வேண்டும். காரணம் இரு லென்சுகளின் குவியத்தொலைவுகளின் கூடுதல் (100+2.5) 102.5 செமீ என்பதால்.

குழாயின் அடிப்புறத்தை அரத்தால் (Hacksaw) 5” அளவுக்கு பிசிறில்லாமல் வெட்டி எடுத்து விட வேண்டும். அதனால் குழாய் நமது தேவையான நீளமான 96.52 செமீ (38”) ஆக மாறிவிடும். மூடியை திறப்பது போல் சிறிது சிறிதாக சுற்றுவதால் நீளத்தை 96.52 செமீ யிலிருந்து அதிக பட்சமாக 110 செமீ வரை அதிகரிக்க முடியும்.  இவ்வாறு செய்வதன் காரணம் குவிலென்சுகளின் குவியத்தொலைவு கொஞ்சம் கூடக் குறையதான் இருக்கும். இருபுறமும் இருக்கும் 3”(7.62 செமீ) உலோக மூடியை 4.8 செமீ விட்டத்திற்கு நடுவில் வட்டமாக வெட்டி அதில் லென்ஸ்களைப் (5.00 செமீ விட்டம்) பொருத்தலாம். இதற்காக சிறிய உலோக துண்டுகளை வெட்டி வட்டமாக வெட்டப்பட்ட பகுதியின் நாற்புறமும் படத்தில் காட்டியுள்ளபடி  பற்றவைக்கலாம். அதை உள்ளூர் தகர கடையில் செய்து தருவார்கள்.


வெட்டப்பட்ட பகுதியின் திறந்த பகுதியில் உலோக தகட்டில் பொருத்திய 100 செமீ குலென்சையும், மூடிப்பகுதி உலோக மூடியில் பொருத்தப்பட்ட 2.5 செமீ குவி லென்சையும் கருப்பு அட்டைதாள் கொண்டு நன்றாக  ஒட்டிவிட வேண்டும். 


இப்போது தொலை நோக்கியின் உருப்பெருக்கம் (M) மேற் சொன்ன வாய்ப்பாட்டின் வழியாக கணக்கிட்டால் 44 மடங்கு என்று கிடைக்கும். இப்போது நமது எளிய தொலைநோக்கி தயாராகி விட்டது. தயாரித்த தொலை நோக்கி மூலம் முதலில் கருக்கல் நேரத்தில்  சூரியன் மறைந்த உடன்  தெரியும் கோள்களைப் பார்க்கக் குழந்தைகளை  பள்ளிக்கூடத்தின் பரந்த மைதானத்திற்கு கூட்டிச் சென்றார்.
முக்கியமாக சூரியனை வானியல் தொலைநோக்கியால் பார்க்கக் கூடாது அது கண்களைப் பாதித்து விடும் என்பதை முக்கியமாக குறிப்பிட்டுச் சொன்னார்.

தொடரும்.......


  

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)