உத்திரட்டாதி என்ற ஆல்பா ஆண்டிரமெடா (α - Andromeda) மற்றும் காமா பெகாசஸ் (γ - Pegasus)

உத்திரட்டாதி விண்மீன் கூட்டத்தில் அடங்கிய விண்மீன்கள் இரண்டு. அவையாவன (1) காமா பெகாஸி மற்றும் (2) ஆல்பா ஆண்டிரமெடா . 

ஆண்டிரமெடா விண்மீன் கூட்டம்(Andromeda constellation) வடக்கு வானில் பெகாசஸ் பெரும் சதுரத்திற்கும்( Great Square of Pegasus), காசியோப்பியாவின் டபிள்யூ(Cassiopeia’s W)  வானவியல் காட்சி(asterism) களுக்கிடையில் அமைந்துள்ளது.


பெர்சியஸின் மனைவியான இளவரசி ஆண்டிரோமெடாவின் பெயர் சூட்டப்பட்டுள்ள விண்மீன் கூட்டம் இதுவாகும். இதனை சங்கிலியால் கட்டப்பட்ட பெண், பெரூஸா(Perusa) அல்லது சிபியஸ்(Cepheis), அதாவது பெர்சியஸின் மனைவி அல்லது செஃபியஸின்(Chpheus) மகள் என்றும் சொல்வார்கள். தாலமியால் கிபி. இரண்டாம் நூற்றாண்டில் அட்டவணைப் படுத்தப் பட்டது.

படம் (1) பெகாசஸ் விண்மீன் கூட்டம். 

காமா பெகாசஸ் விண்மீன் - உத்திரட்டாதி



படம் (2) ஆண்டிரமெடா விண்மீன் கூட்டம்

ஆல்பா ஆண்டிரமெடா விண்மீன் - உத்திரட்டாதி




Image courtesy : http://www.constellation-guide.com


இரண்டாம் நூற்றாண்டில் தாலமி(Ptolemy) யால் அட்டவணைப் படுத்தப் பட்டது. பெகாசஸ் வடக்கு வான் அரைக் கோளத்தில் நான்காவது கால் பகுதியில் (NQ4) காணப்படும் பெரிய விண்மீன் கூட்டங்களில் ஒன்று. வானில் காணப்படும் 1121 சதுர பாகை பரப்பளவுடைய  ஏழாவது பெரிய விண்மீன் கூட்டம். வட அரைக் கோளத்தில் அக்டோபர் மாதத்தில் +90o முதல் -60o வரையிலான அட்சங்களில் காண இயலும். இதன் அருகில் உள்ள பிற விண்மீன் கூட்டங்கள் ஆண்டிரமெடா(Anderomeda), அக்வேரியஸ்(Aquarius), டெல்பினஸ்(Delphinus), ஈக்கூலியஸ்(Equuleus), கைனஸ்(Cygnus) லா கார்டா (La Carta), பிசஸ்(Pisces), வல்பெக்யூலா(Vulpecula) ஆகியன. பெகாசஸ் விண்மீன் கூட்டமும் ஆண்டிரமெடா, ஆரிகா, காசியோப்பியா, சீப்பஸ், சீட்டஸ், லா கார்ட்டா, பெர்சியஸ் மற்றும் டிரையாங்குலம் ஆகிய விண்மீன் கூட்டங்கள் அடங்கிய பெர்சியஸ்(Perseus)  விண்மீன் குடும்பத்தைச் சேர்ந்தது.


ஆண்டிரமெடா இரவு வானில் காணப்படும் பத்தொன்பதாவது பெரிய விண்மீன் கூட்டமாகும். இது 722 சதுர பாகை பரப்பளவு கொண்டது. இது வடக்கு வான் கோளத்தின் முதல் கால் பகுதியில் அமைந்துள்ளது. இதனை +90o முதல் -40o வரையிலான அட்சங்களில் காண இயலும். இதன் அருகாமையில் உள்ள பிற விண்மீன் கூட்டங்கள் காஸியோப்பியா (Cassiopeia), லா செர்ட்டா( La certa),பெகாசஸ்( Pegasus),  பெர்சியஸ்(Perseus), பிஸ்சஸ்( Pisces) மற்றும் டிரையாங்குலம்(Triangulum) ஆகியனவாகும்.

ஆண்டிரமெடா விண்மீன் கூட்டத்தில்காணப்படும் ஆழ் வான் பொருட்கள் (Deep sky objects) மெஸ்ஸியர் 31 என்ற ஆண்டிரமெடா விண்மீன் திரள் (Andromeda Galaxy) , மெஸ்ஸியர்32 மற்றும் மெஸ்ஸியர்110 ஆகியன. இந்த விண்மீன் கூட்டத்தில் காணப்படும் விண்மீன்களில் ஏழு விண்மீன்களுக்கு கோள்கள் உள்ளது. டஅதில் உள்ள மிகவும் பொலிவான விண்மீன் ஆல்ஃப்பிரட்ஸ்(Alpheratz). ஆண்டிரொமெடிட்ஸ் என்ற நவம்பர் மாத நடுப்பகுதியில் ஏற்படும்  விண்கற்கள் பொழிவு, இந்த விண்மீன் கூட்டத்திலிருந்து வெளிப்படுவதாகத் தோன்றுகிறது. ஆண்டிரமெடா விண்மீன் கூட்டம் பெர்சியஸ்(Perseus) குடும்பதைச் சேர்ந்ததாகும்.   

கிரேக்க புராணங்களில், எதியோப்பிய அரசர்களாக இரண்டு சிபியஸ்(Cepheus) கள் அறியப்படுகின்றனர். அதில் ஒருவர் தாத்தா மற்றவர் பெயரன். இதில் நன்கு அறியப்பட்டவர் சிபியஸ் ஏஜ்னார் (Cepheus Agenor) யின் மகனும் மற்றொரு சிபியஸின் பெயரனும் ஆவார். இவரது மனைவி காஸியோப்பியா.

இந்த அரச தம்பதிக்கு ஆண்டிரமெடா என்ற பெயர் கொண்ட ஒரு அழகான மகள் இருந்தாள். காஸியோப்பியா தானும் தன் மகளும்தான் மிக அழகானவர்கள். கடல் கடவுள் யூலியாளையும் அவளது மகள்களான நெரீத்களையும்(Nereids) விடத் தாங்கள் இருவருமே மிக அழகானவர்கள் என்று இறுமாப்புடனும், தலைக்கனத்துடனும் பெருமையடித்துக் கொண்டிருந்தனர்.

 இச் செயல் கடற் கடவுள் போஸிடானுக்கு மிகுந்த கோபமூட்டியது. எனவே எதியோப்பியாவை வெள்ளத்தில் மூழ்கடிக்கடித்தும், கடற்கரைப் பகுதிகளில் சீட்டஸ்(Cetus) என்ற கொடிய கடல் விலங்கை அனுப்பி பெருத்த அழிவையும் ஏற்படுத்த எண்ணம் கொண்டது. காஸியோப்பியாவும் அரசன் சிபியஸ் இருவரும் அம்மான் (Oracle of Ammon) கோவிலில் அருள் வாக்கு குறி கேட்டனர்.

Picture Courtesy : www.touregypt.net

படம் : குறி கேட்கும் அம்மான் கோவில் (எகிப்து)




 அப்போது பொஸிடானை சமாதானப் படுத்த இருக்கும் ஒரே வழியாக இளவரசி ஆண்டிரமெடாவை கடற் கரையில் ஒரு பாறையில் சங்கிலியால் பிணைத்து வைத்து ஸிட்டஸ் விலங்குக்கு பலியாகத்தர ஆரூட அறிவுரை அவர்களுக்குக் கிடைத்தது. மெடுஸாவை கொன்று அவளது தலையுடன் தன் நாட்டிர்கு வரும் வழியில் சங்கிலியால் பாறையில் பிணைக்கப்பட்டிருந்த ஆண்டிரமெடாவை கண்ட பெர்சியஸ், அவளிடம் அதற்கான காரணத்தை விசாரித்தறிந்தான்.

Picture Courtesy : http://the-toast.net

படம் : ஆண்டிரமெடாவை பெர்சியஸ் காப்பாற்றும் காட்சி



இதற்கிடையில் சீட்டஸ் விலங்கு ஆண்டிரமெடாவை நோக்கி வர , பெர்சியஸ் தன் கையில் உள்ள மெடுஸாவின் தலையை அதைப் பார்த்துக் காட்டி சீட்டஸை கல்லாகச் சமையச் செய்து ஆண்டிரமெடாவைக் காப்பாறினான். பெர்சியஸ் மட்டும் வராமல் இருந்திருந்தால் ஆண்டிரமெடாவை கடல் விலங்கு கொன்றிருந்திருக்கும்.  
சிபியஸிடம் அனுமதி பெற்று ஆண்டிரமெடாவை பெர்சியஸ் மணந்து கொண்டு புகழ் பெற்ற ஸ்பார்டன்(Spartan) அரசனான டைன்டேரஸின் (Tyndareus) தந்தையான கார்கோபோன்டி(Corgophonte) உள்ளிட்ட ஆறு குழந்தைகளைப் பெற்றனர். பெர்சியஸ் தான் பெர்சியர்களின் அதாவது பாரசீகர்களின் (Persians) முன்னோர் ஆவான். இளவரசி ஆண்டிரமெடாவின் தியாக சிந்தனையை நினைவு கூரும் வகையில் அவளது பெயரிட்ட விண்மீன் கூட்டதை கணவன் பெர்சியஸின் பெயரிட்ட விண்மீன் கூட்டத்திற்கும் , தாய் காஸியோப்பியாவின் பெயரிட்ட விண்மீன் கூட்டத்திற்கும் இடையில் அத்தீனா பெண் தெய்வம்( Athena goddess) நிலை  பெறச் செய்தது.


ஆல்ஃப்பிரட்ஸ்(Alpheratz) என்ற ஆல்பா அண்டிரமெடா (α - Andromeda)
ஆல்ஃப்பிரட்ஸ் தான் ஆண்டிரமெடா வின்மீன் கூட்டத்தில் காணப்படும் மிகப் பொலிவான விண்மீன். சில சமயம் இதை சிர்ராஹ்(sirrah) என்றும் அழைக்கப்படுகிறது. புவிலிருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது ஒரு இரட்டை விண்மீன். ஆல்ஃப்பிரட்ஸின் தோற்றப் பொலிவெண் +2.06 மதிப்புடையது. அதி வெப்பமான நீலநிற B8 வகை துணை அரக்க விண்மீன்.
இந்த இரட்டை விண்மீன்களில் பொலிவான விண்மீன் சற்றே அதிக அளவில் பாதரசம், மாங்கனீஸ் மற்றும் பிற வேதிப்பொருட்களின் வித்தியாசமான கூட்டமைப்பைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 3.6 மடங்கு சூரியனின் நிறை கொண்ட இதன்  மேற்பரப்பு வெப்ப நிலை 13,800 கெல்வின் ஆக அமைந்துள்ளது. சூரியனை விட 200 மடங்கு பொலிவான இந்த ஆல்ஃப்பிரட்ஸ் விண்மீன்தான் இதுகாறும் அறியப்பட்ட பாதரச-மாங்கனீஸ் விண்மீனாகும். கூட்டாளி விண்மீனும்  சூரியனைக் காட்டிலும்  அதிக நிறையும்,10 மடங்கு பொலிவும் கொண்டது. இவ்விரு விண்மீன்களும் ஒன்றை ஒன்று 96.7 நாட்களில் சுற்றி வருகின்றன.
ஆல்ஃப்பிரட்ஸ் (Alpheratz) ஒரு காலத்தில் பெகாசஸ் விண்மீன் கூட்டத்தைச் சேர்ந்ததாக கருதப்பட்டது. அதன் காரணமாக டெல்டா பெகாஸி(δ - Pegasi) என்ற மற்றொரு பெயராலும் குறிப்பிடப்பட்டது. (Pegasus constellation). ஆல்ஃப்பிரட்ஸ் மற்றும் சிர்ராஹ்  ஆகிய இரு பெயர்களுமே அரபி மொழியில் இருந்தே பெறப்பட்டவை. அரபியில் சுரத் அல் ஃபராஸ் என்றால் குதிரையின் வயிறுப்பகுதி என்று பொருள்படும். அரேபிய வானவியல் அறிஞர்கள் இதனை அல் ராஸ் மாராஹ் அல் முசல்சலாஹ் (al ras mar’ah al musalsalah) என்றுமழைத்தனர். சங்கிலியால் கட்டப்பட்ட பெண்ணின் தலை என்பதே இதன் பொருள். 
அல்ஜெனிப் (Algenib) என்ற காமா பெகாஸி (γ Pegasi)
அல்ஜெனிப் (Algenib) ஒரு B2 IV வகை துணை அரக்க விண்மீன். தோற்றப்பொலிவு எண் + 2.98  கொண்ட இந்த விண்மீன் சுமார் 390 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.பெரிய பெகாசஸ் சதுரத்தின் கீழ் இடது கைப் பக்க மூலையை இவ் விண்மீன் குறிக்கிறது.
காமா பெகாஸி விண்மீன் பீட்டா செஃப்பி வகை பொலிவு மாறும் விண்மீன் ஆகும். இதன் பொலிவு மாற்றம் விண்மீனின் தளத்தின் துடிப்போடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. விண்மீனின் ஆரத் துடிப்பின் காலம் 0.15175 நாட்கள். இக் கால இடைவெளியில் பொலிவு +2.78 to +2.89 வரை மாற்றமடைகிறது.
அல்ஜெனிப்(Algenib) சூரியனைக் காட்டிலும் 5மடங்கு ஆரத்தையும், ஒன்பது மடங்கு நிறையையும் மற்றும் 5840 மடங்கு பொலிவையும் கொண்டுள்ள விண்மீன். 

ஆல்ஃப்பிரட்ஸ்  பெரிய பெகாசஸ் சதுரத்தின் வடகிழக்கு வின்மீனாகும். பெரிய பெகாசஸ் சதுரத்தின் மற்ற மூன்று விண்மீன்கள் ஆல்பா பெகாசி என்ற மார்கப்(Markab) பீட்டா பெகாசி என்ற ஸ்கீட் (Scheat) மற்றும் காமா பெகாசி என்ற அல்ஜெனிப் (Algenib) விண்மீன்களாகும். ஆல்ஃப்பிரட்ஸ் விண்மீன் பெகாசஸ் (Pegasus) குதிரையிலேறி பெர்சியஸ் (Perseus) ஆண்டிரமெடா (Andromeda) வை காப்பாற்றிய புராண நிகழ்வை தொடர்பு படுத்துகிறது.


Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)