வசீகரிக்கும் வானமும் வசப்படும் - பகுதி (4)

"தங்களது நாட்டை முற்றாக அழிக்க சீட்டஸ் அனுப்பிவைக்கப்பட்ட செய்தியை அறிந்த செஃப்பியஸும், காஸியோப்பியாவும் மனக்கலக்கம் அடைந்தனர். என்ன செய்வது என்றறியாமல் திகைத்தனர். பொதுவாக நமக்கு மனக்கலக்கமும், குழப்பமும் வரும் போது கோவில்களுக்கு குழப்பம் தீர்ந்து மனநிம்மதி வேண்டி கோவிலுக்கு செல்வதில்லையா, அது போல அந்தக் காலத்தில் ஆப்பிரிக்க நாடான லிபியாவில் (Libiya), நுபியா(Nubia) மற்றும் எகிப்தில்(Egypt)  வணங்கப்பட்ட தெய்வம், அம்மோன் அல்லது அமுன் (Ammon or Amun). மாசிடோனியாவின் அரசன் மகா அலெக்ஸாண்டர் இந்த தெய்வத்தின் சந்நதியில் தேவ ஆரூடம் (Oracle) கேட்பதற்காகவே சுற்று வழியில் வந்ததால் புகழ் பெற்றது.  இந்த அம்மோன் கோவில் பண்டைய எகிப்து நாட்டின் தலை நகரான மெம்ஃப்பிஸ் (MEMPHIS) க்கு 500 கிமீ மேற்கில்  சிவா பாலைவனச் சோலை (SIWA OASIS) என்ற இடத்தில் அமைந்துள்ளது.

படம்: Oracle of Ammon, Egypt.



Picture courtesy : tripadvisor.com

இந்த அம்மோன் கோவிலில் ஆரூடம் கேட்ட செஃப்பியஸ் மற்றும் காஸியோப்பியா இருவருக்கும், சொல்லப்பட்ட தீர்வு ஆண்டிரமெடாவை சீட்டஸுக்கு பலியிடுட்டு அழிவிலிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றலாம் என்பதுதான்”.
குமரேஷ் குறுக்கிட்டு,” தாத்தா, அம்மோன் கடவுள், ஆரூடம் என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் சொல்லுங்க” என்றான்.
“அதை அப்புறம் தனியாகச் சொல்கிறேன். இப்போது கதைக்கு அது அவ்வளவு அவசியமில்லை” என்றார் குமாரசாமி.
“ ஆரூடம் என்பது நம்ம ஊரில் அம்மன் கோவிலில் பூசாரிகள் சாமியாடியபடி செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் குறி சொல்வார்கள் இல்லையா, அது போன்றது. பண்டைக்காலத்தில் இதுபோல் எகிப்திலும் குறி சொல்வது இருந்திருக்கிறது” என்றார்.






By Original CIA - This file was created by hand-editing as a simple map of Egypt, adding towns as referenced in articles, so the locations of towns are approximate. Source: hand-edited file using en:MS Paint., Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=7765232

“அம்மோன் கடவுள் கோவில் இப்போதும் இருக்கிறதா தாத்தா” என்றாள் குட்டிப்பெண் காவ்யா. “ஆமாம், காவ்யா, சிவா பாலைவனச் சோலை (Siwa oasis) கெய்ரோவிலிருந்து சுமார் 560 கிமீ தொலைவில் லிபியா - எகிப்து எல்லைக்கு அருகில் லிபியாவின் எல்லைக்கு சுமார் 50 கிமீ கிழக்கே உள்ளது.
இது 23000 மக்கள் தொகை கொண்ட 80 கிமீ நீளமும் 20 கிமீ அகலமும் கொண்ட  நிலப்பரப்பு. இதில்தான் அம்மோன் கோவிலின் இடிபாடுகள் இன்றும் காணப்படுகின்றன. அந்தப் படங்களை உங்களுக்குக் காட்டுகிறேன்” என்று பதில் தந்தார் குமாரசாமி.


படம் : Oracle of Ammon



Picture courtesy : megalithic.co.uk



Picture courtesy : touregypt.net

பள்ளி மைதானத்தை அடையும் போது மணி மாலை 7.00. சூரியன் மறைந்த பின் மேற்கில் தொடுவானதிற்கருகே வெள்ளி (Venus) அப்படியே  தென் கிழக்காக வந்தால் சனி(Saturn) இன்னும் சற்று கிழக்காக, தென் கிழக்காக நகர செவ்வாய் (Mars) மேலும் வளைவான பாதையில் வட கிழக்காக நன்றாக நகர நெப்டியூன் (Neptune) என்று கோள்களைக் அவர் குழந்தைகளை அழைத்துக் காட்ட,
சுகன்யா, “தாத்தா, இந்த வளைந்த பாதையில் அப்படி அடையாளம் காண்பது சிரமமாக உள்ளது” என்றாள்.




Picture Courtesy : www.astroviewer.com
“ஆமாம் . இரவு சந்திரன் 10 மணிக்கு மேல்தான் இந்த மாதம் கிழக்கே உதிக்கும். அப்போது சந்திரனைக் கணக்கு வைத்து கோள்களையும், விண்மீன் கூட்டங்களையும்  எளிதில் கண்டறிய முடியும்” என்றார்.
“சரி தாத்தா, உங்களால் மட்டும் எப்படி கண்டுபிடிக்க முடிகிறது”? என்றான் ராகுல்.
“ எந்த ஒரு குறிப்பிட்ட கணத்திலும் Astroviewer என்ற தளத்தில் இந்தியாவில், ஏன் உலகில்  எந்தப் பெரிய நகரத்தின் மேலும் வானம் எப்படி இருக்கும் என்பதைக் காண முடியும். அதை அடிப்படையாக வைத்துக் கொண்டே நான் கோள்களையும், விண்மீன் கூட்டங்களையும் அடையாளம் காணுகிறேன். கொஞ்ச நாளில் பழக்கமானதும் எளிதாகிவிடும்” என்றார்.
“உதாரணமாக நாம் இப்போது எடுத்துக் கொண்டுள்ள ஆறு விண்மீன் கூட்டங்களை 20.09.2016 இரவு 10.30 மணிக்கு சந்திரனை வைத்து கிழக்கு , வட கிழக்கு வானில் சென்னை மாநகரத்தின் மேல் எங்கு இருக்கும் என்ற நிலையைக் காடும் படத்தைப் பாருங்கள். அதில் இந்த ஆறு விண்மீன் கூட்டங்களை பச்சை அறுகோண எல்லையிட்டு காட்டியிருக்கிறேன்” என்றவரிடமிருந்து குழந்தைகள் ஆர்வமாக படத்தை வாங்கிப் பார்த்தன.



 Picture Courtesy : www.astroviewer.com

“அப்போ இன்று சந்திரன் 10.30க்கு கிழக்கே சென்னையில் தானே தெரியும். நமக்கு எப்படி சேரன்மகாதேவியில் தெரியும்”? என்றாள் குட்டி காவ்யா.
“ நல்ல கேள்வி காவ்யா, சென்னையும் நம்ம சேரன்மகாதேவியும் வானியலைப் பொருத்தவரை கிட்டத்தட்ட ஒன்று போலத்தான். பெரிய அளவில் வேறுபாடு வராது. ( சென்னை -13.50 N, 80.160 E), (சேரன்மகாதேவி - 8.680 E, 77.50 N) . மேலும் அந்த தளத்தில் இந்திய நகரங்களில்  தமிழ் நாட்டில் தற்போது சென்னை மட்டுமே காணப்படுவதால் வேறு வழி இல்லை. சென்னயின் அட்சம், சேரன்மகாதேவி அட்சம் இரண்டும் சில பாகைகள் மட்டுமே வேறுபட்டுள்ளது என்பதால் பிரச்சனை வராது” என்று பதிலளித்தார்.
“தொடர்ந்து ஒரு வாரம் நாம் குறிப்பிட  ஒரு திசையில் பார்த்து நம்மை தயார்படுத்திக் கொள்ள முடியும் என்பதே சரி,” என்றார் குமாரசாமி.

“சரி மணி எட்டு ஆகப் போகிறது. இரவு சாப்பட்டை முடித்துவிட்டு வருவோம் . அப்போது கதையை திரும்ப ஆரம்பிக்கலாம்” என்றார்.

"சரி, தாத்தா". என்றாள் சுட்டிப்பெண் காவ்யா.
“செஃப்பியஸ்,காஸியோபியா,ஆண்டிரமெடா, சீட்டஸ் இவர்கள் பற்றிய கதையில் பெர்சியஸ் மற்றும் பெகாசஸ் எவ்வாறு நுழைந்தனர்” என்றாள் சுகன்யா.

“அதுவா, அது ஒரு பெரிய கதை. அதை அடுத்தது சொல்லப் போகிறேன். ஆரூடம் கேட்டு வந்த பின் ஆண்டிரமெடாவை கடற்கரையில் ஒரு பாறையில் சங்கிலியால் பிணைத்து கட்டி வைத்தனர். சீட்டஸ் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் ஆண்டிரமெடா மரணபயத்தில் தன்னை யாராவது காப்பாற்ற வர மாட்டார்களா என்று ஏக்கத்துடன் பார்த்தபடி இருந்தாள்.”  என்ற குமாரசாமி மீதம் உள்ள கதை நாளைக்கு, இப்போது நாம் அந்த ஆறு விண்மீன் கூட்டங்களைப் பார்க்கப் போகலாம் என்றார்.


தொடரும்......



Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)