வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (4)

1838 இல் ஜெர்மனியைச் சேர்ந்த வானவியலாளர் F W பெஸல் ( 1784 - 1846 ) ஒரு புதுமையான சோதனை முயற்சியை மேற்கொண்டார். 


அவர் விண்மீன்களின் இடமாற்றத்தை ( PARALLAX) சரியாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரு இரவுகளில் பதிவு செய்தார். அதாவது புவியின் சுற்றுப் பாதையில் எதிரெதிராக அமைந்த இரு இடங்களிலிருந்து விண்மீன்களின் இடமாற்றத்தைப் பதிவு செய்தார்.இத்தொலைவு சுமார் 300,000,000 கிலோமீட்டர்களாகும்.

பெஸல் முதலில் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட விண்மீன்கள் வெகு தொலைவில் இருந்ததால், இடமாறு தோற்றக் கோணம் அளவிடும் படியாக இல்லை. 61 சிக்னி (61 CYGNI) என்ற விண்மீனை ஆய்வு செய்தபோது இடமாறு தோற்றக் கோணம் அளவிடக்கூடியதாக இருந்தது. அளவிடப்பட்ட இடமாறு தோற்றக் கோணம் 0.03 நொடிகளே. அதாவது
1பாகை (DEGREE) = 60 நிமிடம் (MINUTE)
1நிமிடம் (
MINUTE) = 60 நொடி (SECOND).
எனவே ஒருநொடி என்பது ஒரு பாகையின் மதிப்பில்1/ 3600 பகுதியாகும்.
1 SECOND = 1/3600 
of 1 DEGREE.






ஆகவே 0.03 நொடி என்பது மிகக் குறைவான மதிப்பு என்றாலும் அளவிடக் கூடியதாக இருந்தது. புவியின் சுற்றுப் பாதையின் விட்டம் மற்றும் அளவிடப்பட்ட இடமாறு தோற்றக் கோணம் இவற்றைக் கொண்டு பெஸல், விண்மீன் 61 கயினி சுமார் 103 மில்லியன் மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளதென்று மதிப்பிட்டார். அதாவது நமது கதிரவன் புவியிலிருந்து அமையும் தொலைவைப் போல் 690,000 மடங்கு தூரம் தொலைவில் உள்ளது. முன்பு குறிப்பிட்டது போல 103 மில்லியன் மில்லியன் கிலோமீட்டர் என்பது குழப்பத்தை அதிகரிக்கும். இது சென்னையிலிருந்து காஷ்மீர் உள்ள தொலைவை மில்லி மீட்டரில் சொல்வது போன்றதாகும். எளிதாக அண்டத்தொலைவுகளை குறிப்பிட வேறு வகையான அளவுகோல் உருவாக்கப்பட வேண்டும். ஒளியின் திசை வேகம் மிகப் பெரும் மதிப்புடையது. ஒளி ஒரு வினாடிக்கு 300,000 கிலோமீட்டர் தூரம் செல்லும். இந்தக் கணக்கில் பார்த்தால் ஒளி ஒரு ஆண்டுக்கு 9.461 டிரில்லியன் கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கும். வானியலாளர்கள் இத் தொலைவை ஒளி ஆண்டு என்றழைக்கின்றனர்.

 இப் புதிய அளவு கோலின் படி 61 சிக்னி விண்மீன் கிட்டத்தட்ட 11 ஒளி ஆண்டுத் தொலைவில் உள்ளது.

'பார்செக்'(PARSEC)

பொதுவாக விண்மீன்களுக்கும் புவிக்கும் இடைப்பட்ட தூரத்தை ஒளி ஆண்டுகளில் கூறினாலும் கூட வானியலாளர்கள், 'பார்செக்'(PARSEC) என்ற மேலும் ஒரு வசதியான அளவு கோலைப் பயன்படுத்துகின்றனர். பாரலாக்ஸ்-செகண்ட்(Parallax-Second) என்பதன் சுருக்கமே பார்செக்(Parsec).இந்தத் தொலைவானது கதிரவனைச் சுற்றி புவி இயங்கும் சுற்றுப் பாதையின் ஆரம், 1வினாடி அளவுள்ள வட்டக் கோணப் பகுதியைத் தாங்கும் அல்லது ஏற்படுத்தும் தூரமாகும்.




இதன் படி 4" பாரலாக்ஸ் கோணத்தை ஏற்படுத்தும் விண்மீனின் தொலைவு 0.25 பார்செக்.
மாறாக 0.25" பாரலாக்ஸ் கோணத்தை ஏற்படுத்தும் விண்மீனின் தொலைவு 4 பார்செக். இவ்விரண்டையும் ஒப்பிடும் போது 1 பார்செக் = 3.256 ஒளி ஆண்டுகள் என நிருபிக்கலாம்.
ஒரு வானியல் அலகு(1AU) என்பது புவிக்கும், கதிரவனுக்கும் இடைப்பட்ட சராசரித் தொலைவாகும்.1AU = 1.496x108 கிலோமீட்டர். 
(தோராயமாக 150 x106 கிலோமீட்டர்).



மேலும் அதிகமான தூரங்களைக் குறிப்பிட கிலோபார்செக்(kpc) போன்ற அலகுகள் பயன்படுத்தப் படுகின்றன. இடமாறு தோற்றக் கோண முறையை நமது விண்மீன் கூட்டமான பால்வழிக் கூட்டத்திற்குள் பயன் படுத்தும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை.ஆனால் 500 ஒளி ஆண்டுகளுக்கு மேலான தொலைவுகளை அளவிடும் போது இடமாறு தோற்றக் கோணம் மிகவும் சிறியதாக துல்லியமாக அளவிட முடியாததாக அமைகிறது. இருப்பினும் கூட வானவியலாளர்கள் எப்போதும் இது போன்ற தருணங்களில், கண்டுபிடிப்புகளைப் புதிய கோணத்தில் பயன்படுத்தி எளிதில் தீர்க்கவியலாத பிரச்சனைகளையும் தீர்த்து விடுகின்றனர்.

தொடரும்......


Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)