வசீகரிக்கும் வானமும் வசப்படும் - பகுதி (2)

ஆண்டிரமெடா, காஸியோப்பியா,செஃப்பியஸ் பெர்சியஸ், பெகாசஸ், சீட்டஸ் ஆகிய ஆறு நட்சத்திரக் கூட்டங்களின் கதை.

நேற்றிலிருந்தே குப்புசாமிக்கு இருப்புக் கொள்ளவில்லை. மகன் தேவநாதனின் குழந்தைகள் குமரேஷ், காவ்யா இருவரும் கான்பூரிலிருந்து நாளைக்கு 
சேரன்மகாதேவிக்கு வரப்போகிறார்கள். இந்த மாதம் முழுவதும் தங்களுடன் கழிக்கப் போகிறார்கள் என்ற நினைப்பே அதற்குக் காரணம். அப்புறம் அடுத்த நாள் மகள் தர்ஷணா வயிற்றுப் பேரன் ராகுலும், பேத்தி சுகன்யாயும் வேறு சென்னையிலிருந்து வரப் போகிறார்கள். ஆக இன்னும் ஒரு மாதம் வீடு கலகல என்றிருக்கும். பக்கத்து வீடு, எதிர் வீடு என்று எல்லாரிடமும் சொல்லியாகி விட்டது. பாட்டி ராஜத்திற்கு தின்பண்டங்கள் செய்வதிலேயே கடந்த வாரத்தில் பாதி நாள் கழிந்து விட்டது.

பெரிய கிராமத்து எட்டுப்பத்தி வீடு, அதற்குப் பின்னால் நூற்றம்பது அடியில் தென்னந்தோப்பு. தோப்பு முடியும் இடத்தில் வாய்க்கால் படித்துறை. அதைத்தாண்டி பச்சைப் பசேல் என்று வயல் வெளி அதன் பின் தாமிரபரணி.

 எப்படியும் எட்டரை மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் வந்தாலும் ஜானகிராம் ஹோட்டலில் டிபன் சாப்பிடாமல் தேவநாதன் வரமாட்டான். அப்படி இப்படி என்று பத்து மணியாகிவிடும். கார் டிரைவர் வேலுவை எட்டு மணிக்கே ஸ்டேஷனுக்கு அனுப்பி காத்திருக்க சொல்லியிருந்தார். மணி பத்து ஆகி விட்டது. போனில் எங்கு வருகிறார்கள் என்று விசாரித்தார். பத்தமடை தாண்டி விட்டதாக தேவநாதன் சொல்ல மனதில் இனம் புரியாத சந்தோஷம். நேற்று நெல்லைக்கு போய் கேரம் போர்ட், பாட்மிண்டன் ராக்கெட், செஸ் இப்படி எல்லாம் இரண்டு செட்  பொருள்கள் வாங்கி வந்தாயிற்று. வீட்டுத்திண்ணையில் செய்தித் தாளை பக்கம் புரட்டுவதும், தெருவில் கண்ணோட்டம் இடுவதும் ஆக பொழுது நகர்ந்து கொண்டிருந்தது.

மணி பத்தேகால் வண்டி வந்து விட்டது. குழந்தைகளுடன் தேவநாதனும், மருமகள் ஆனந்தியும் வீட்டில் நுழையும் போதே, “அப்பா, என்ன குளிர்ச்சியாக இருக்கிறது. காற்று அப்படி பிய்த்துக் கொண்டு போகிறது” என்றதும் சிரித்துக் கொண்டே “ ஆமாம், ஆமாம்” என்றார். குழந்தைகள் இரண்டிற்கும் புதிய சூழல். தாத்தா, பாட்டியை நாலைந்து வருடங்களுக்குப் பின் பார்ப்பதால் கொஞ்சம் ஒட்டிக் கொள்ள பயமாகவும் , தயக்கமாகவும் இருந்தது. குளியலுக்கு தாத்தாவோடு ஆற்றுக்கு குளிக்கப் போன குழந்தைகளை அப்புறம் தாத்தாவிடமிருந்து பிரிக்க முடியவில்லை. அம்மா, அப்பாவை சுத்தமாக மறந்தே விட்டனர்.

அன்று இரவு பயணக் களைப்பில், குழந்தைகள் சாப்பிட்ட மறு நிமிடமே  சில்லென்ற கொல்லம் செங்கல் ஓடு பதித்த தரையில் உறங்கிப் போயினர். மறுநாள் காலை மகள் தர்ஷணா, மாப்பிள்ளை தினேஷ் இருவருடன் குழந்தைகள் ராகுல், சுகன்யா இருவரும் வந்து சேர்ந்தனர்.
குப்புசாமி நால்வரையும் கூட்டிக்கொண்டு தாமிரபரணிக்கு கூட்டிக் கொண்டு வந்தார். வரும் வழியில் கண்ணில் பட்டவர்கள் எல்லோரிடமும் பேரன் பேத்திகளை அறிமுகப்படுத்தினார். நீச்சல் கற்றுக் கொடுத்து குளித்து கரையேற மணி மதியம் பனிரெண்டானது.
பொதுவாக குப்புசாமிக்கு மதியம் சாப்பிட்டபின் ஒரு மணி நேரம் தூங்குவது வழக்கம். அது இரண்டாம் நாளாக காணாமல் போய் விட்டது. நாளை மறுநாள் மகன், மருமகள்,மகள் எல்லோரும் கிளம்பி விடுவார்கள். குழந்தைகளை அடுத்த மாதம் மீண்டும் வந்து கூட்டிச் செல்ல வருவார்கள். அதுவரை குழந்தைகள் பாட்டி, தாத்தாவுடன்.
மதியம் மூன்று மணியிருக்கும் கேரம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை  காவ்யாவிடமிருந்து அழுகைச் சத்தம் வர என்னவென்று விசாரித்தார். அப்போது காவ்யா, “ராகுல் அண்ணாவும், சுகன்யா அக்காவும் என்னை கேலி பண்ணி அழ விடுறாங்க தாத்தா” என்றாள். அவளை சமாதானப்படுத்தி ராகுலையும், சுகன்யாவையும் அழைத்து, “பிறரை கேலி பண்ணிய ஆண்டிரமெடாவின் கதை உனக்குத் தெரியுமா” என்றார்.
கதை என்றதும் நான்கு பேரும் தாத்தா குப்புசாமியை சுழ்ந்து கொண்டு, “தெரியாது தாத்தா, சொல்லுங்கள்” என்று கோஷ்டி கானம் பாடினர்.
“சரி. சொல்கிறேன். ஆனால் இரவு தூங்கப் போகுமுன் சொல்கிறேன். இப்போது சண்டை போடாமல் விளையாடுங்கள். சண்டை போட்டு கேலி பண்ணக் கூடாது. ஒருவரைக் கேலி செய்தவர்கள் வேறு ஒருவரால் கெலி செய்யப்படுவார். அப்போது மனம் வருந்தப் படும்” என்றார்.
தினமும் இரவில் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் தாத்தாவிடம் கதை கேட்கும் ஆவலில் இரவு ஏழு மணிக்கே சாப்பிட்டு விட்டன. பாட்டி ராஜம் பெரிய பாத்திரத்தில் சாதம் பிசைந்து மாங்காய் ஊறுகாயும், கீரைக் குழம்பும் தொட்டுக்கொள்ள சின்ன தட்டில் வைத்து அவர்களை வட்டமாக உட்காரச் சொல்லி கையில் கொடுக்க எந்த பிரச்சனையும் இல்லாமல் சாப்பாடு இறங்கியது. மகள் ஆனந்தியும்,மருமகள் தர்ஷணாவும் வாய்க்கு வாய் “பர்க்கர், புலவு, பீட்சா,  இல்லாமல் சாப்பிட அடம் பண்ணும் இந்தப் பசங்கள் இங்கே எப்படி  சமர்த்தாய் சாப்பிடறது”, என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். எட்டு மணிக்கு தாத்தா குப்புசாமியை கதை சொல்ல வேண்டி சுற்றிச் சுற்றி வந்தார்கள்.
மேல்தளத்தில் பெரிய கல்யாண ஜமக்காளம் படுக்கை விரித்து நடுவில் தாத்தாவுக்கும் குமரேஷ், காவ்யா இடது பக்கமும், ராகுலும், சுகன்யாவும் வலது பக்கமும் என்று போட்டாயிற்று.
சாப்பிட்டபின் மேல் தளத்திற்கு வந்த தாத்தா ஒன்பது மணிக்கு ஆண்டிரமெடா கதை சொல்ல ஆரம்பித்தார்.
“நாம் எல்லாம் பூமியின் மேலே இருக்கிறோம், இல்லையா?” நமக்கு மேல் வானம் பெரிய தேங்காய் ஓட்டை கவிழ்த்த மாதிரி இருக்கிறது. நமது தலைக்கு மேல் வட வான் கோளம் அதாவது ஒரு பாதி தேங்காய் ஓடு உள்ளது.”

படம் : வான் கோளத்தின் உள்ளே பூமி இருப்பது போன்ற படம்



“முதலில் வானத்தை எல்லோரும் பாருங்க. அங்கே என்னவெல்லாம் தெரிகிறது?”
“சந்திரனும் நிறைய நட்சத்திரங்களும் தாத்தா” என்றன பிள்ளைகள்.
“சரி. இந்த மாதம் என்ன மாசம்?”
“செப்டம்பர் மாதம்”
“இப்போ மணி என்ன?” 
“ஒன்பது மணி”.
“வடகிழக்கு பகுதியை பாருங்க எல்லாரும். அங்கே கவனமா பாருங்க V வடிவத்தில் அமைந்த மாதிரி கொஞ்சம் நட்சத்திரங்கள் தெரியுதா? அதற்கு மேல் W வடிவத்தில், அந்த V  யோட சேர்ந்த மாதிரி சதுரமா நான்கு நட்சத்திரங்கள் தெரியுதா”
“தாத்தா எல்லாம் ஒரே மாதிரி இருக்கு தாத்தா, புரியலை.”

படம் : வட வான் கோள நட்சத்திரக் கூட்டங்கள் - செப்டம்பர் மாத வானம்.


“பரவாயில்லை. இந்த ஆண்டிரமெடா நட்சத்திரக் கூட்டத்தை ஆகஸ்டிலிருந்து, பிப்ரவரி மாதம் வரை காண முடியும். அதனால் இன்னும் நிறைய நாட்கள் பார்த்து எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.
ஆண்டிரமெடா (ANDROMEDA) என்பது கிரேக்க புராணத்தில் வரும் ஒரு இளவரசி. அவள் ஆப்ரிக்க கண்டத்தின் எத்தியோப்பியா நாட்டின் இளவரசி. அவளது பெயரால் சொல்லப்படும் நட்சத்திரக் கூட்டம்தான் நான் முதலில் சொன்ன V வடிவத்தில் அமைந்த நட்சத்திரங்கள். அதற்கு மேல் W வடிவத்தில் அமைந்த நட்சத்திரங்கள் தான் ஆண்டிரோமெடாவின் அம்மாவான காஸியோப்பியா (CASSIOPEIA), அதாவது எத்தியோப்பியா நாட்டின் அரசி. காஸியோப்பியாவின் கணவன் செஃப்பியஸ்(CEPHEUS) எத்தியோப்பிய நாட்டின் அரசன். அந்த V வடிவ ஆண்டிரமெடாவுடன் இணைந்த மாதிரி உள்ள சதுரமாகக் காணப்படும் நட்சத்திரங்கள் தான் ஆண்டிரமெடாவை காப்பாற்றித் திருமணம் செய்து கொண்ட பெர்சியஸின்(PERSEUS) அதிசயமான பறக்கும் குதிரை பெகாசஸ்(PEGASUS). இவற்றை நாளைக்கு ஒரு வானவியல் தொலைநோக்கி நாமே தயார் செய்து பார்க்கலாம்.

“நாளைக்கு கம்பியூட்டரில் அது பற்றிய செய்முறை படிக்கலாம். அப்புறம் அதில் சொல்லியபடி நாமே செய்வோம்”.
“ஐ, ஜாலி. சரி தாத்தா”
“இப்போ கதைக்கு வரலாம். மனிதன் வானத்தில் காணும் நட்சத்திரங்களை கற்பனையால் ஒன்றுபடுத்தி ஒரு உருவம் தந்தான். அந்த உருவத்தை புராணக் கதைகள், அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் தொடர்பு படுத்தி பெயர் சூட்டினான். அப்படி சூட்டப்பட்ட பெயர்கள்தான் ஆண்டிரமெடா, காஸியோப்பியா, பெகாசஸ், பெர்சியஸ், செஃப்பியஸ் போன்றவை”.


“ ஆண்டிரமெடாவின் கதையோடு தொடர்புடைய ஐந்து பெயர்களும் அருகருகே அமைந்த நட்சத்திரக் கூட்டங்கள்தான்”.

“கிரேக்கர்களுக்கு  பன்னிரெண்டு ஒலிம்பியக் கடவுள்கள் உண்டு. அந்த பன்னிரெண்டு கடவுள்களில் கடல் தெய்வம் பொசிடன் (POSEIDON). இவன் ஜீயஸ்(ZEUS) மற்றும் ஹடெஸ்(HADES) ஆகிய கடவுளர்களின் சகோதரன்”. கடலில் வாழும் உயிரினங்களின் காவலன்”.
பேரழகியான எத்தியோப்பிய அரசி, காஸியோப்பியாவிற்கு தன் அழகைக் குறித்து ஆணவமும், கர்வமும்  அதிகம். அவளின் வீண் பேச்சே அவளுக்கு முதல் எதிரியானது.”
"நமது திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் இல்லையா,

 பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
என்று". 
காஸியோப்பியா தானும் தன் மகள் ஆண்டிரமெடாவும் தான், கடல் தேவதைகளான நெரீத்து (NEREIDS) களை விட அழகு என்று தற்பெருமை பேசியபடி தருக்குடன் திரிந்து வந்தாள்.”
“தாத்தா, நெரீத்துகள் யார்? அவர்கள் எங்கே இருப்பார்கள்?” என்றாள் சுகன்யா.
“அப்படிக் கேள். நெரீத்துகள். கடற் கடவுள் நெரீயஸின் (NEREUS) மகள்கள் நெரீத்துகள். இவர்கள் மொத்தம் 50 பேர். எல்லோரும் மிக அழகானவர்கள். ஆகவே காஸியோப்பியாவின் தற்பெருமைப் பேச்சால் கோபமுற்ற நெரீத்துகள் கடலின் ஆட்சித் தெய்வமான பொசினிடம் முறையிட்டனர். கோபமான பொசிடன் எத்தயோப்பியாவை அழிக்க சீட்டஸ் (CETUS) பயங்கரமான கடல் அசுரனை அனுப்பினான்.”

படம் : சீட்டஸ்(CETUS)



“பார்த்தாயா சுகன்யா ஒருவரைக் கேலி செய்வதால் அதிலும் அழகு குறித்து கேலி செய்வது எப்படி ஆபத்தில் முடிகிறதென்று. இனிமேல் யாரையும் கேலி செய்யாதே” என்றவரிடம்
“ஆமாம் தாத்தா, சாரி காவ்யா, நான் இனி மேல் உன்னை மட்டும் இல்லை, யாரையும் சத்தியமா கேலி பேச மாட்டேன்”, என்றாள் சுகன்யா.

“அப்புறம் என்ன ஆயிற்று தாத்தா” என்ற குமரேஷிடம்,
“பாரு இப்போவே ராகுல் தூங்க ஆரம்பித்து விட்டான். மணியும்  பத்தரை ஆகிவிட்டது. இப்போது எல்லாரும் தூங்கலாம். நாளைக்குப் பகலில் வானவியல் தொலை நோக்கி செய்த பின்னர் இரவு ஒன்பது மணிக்கு இந்த நட்சத்திரக் கூட்டங்களைப் பார்த்தபடி தொடர்ந்து கதை கேட்கலாம்” என்றார் குப்புசாமி கொட்டாவி விட்டபடி.


தொடரும்......

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)