சதயம் விண்மீன் - காமா அக்வேரியஸ் (γ - AQUARIUS)

சதயம் விண்மீன் என்ற காமா அக்வேரியஸ் (γ - AQUARIUS)  பன்னிரெண்டு ராசிகளில் ஒன்றான கும்ப ராசியில் அதாவது ஆங்கிலத்தில் அக்வேரியஸ் (AQUARIUS) அழைக்கப்படும் விண்மீன்கள் கூட்டத்தில் அடங்கியுள்ள ஒரு விண்மீனாகும். இந்த அக்வேரியஸ் விண்மீன் கூட்டம் தெற்கு வான் அரை கோளத்தில் அமைந்துள்ளது. அக்வேரியஸ் என்றால் இலத்தீனில் அல்லது நீர்ப் பாத்திரம்(குடம்) சுமப்பவர் (கோப்பை சுமப்பவர் என்று பொருள் கொள்ளலாம். அக்வேரியஸ் விண்மீன் கூட்டம் வானில் அமைந்துள்ளன இடத்தை கடல் என்று சொல்லலாம். ஏனெனில் இதற்கு அருகில் நிறைய விண்மீன் கூட்டங்கள் தண்ணிருடன் தொடர்புடைய பெயர்களைக் கொண்டவையாக உள்ளன. எடுத்துக்காட்டாக மீனம் (PISCES), ஆறு (ERIDANUS) மற்றும் சுறாமீன் (CETUS) ஆகியவற்றைக் கூறலாம். மற்றெல்லா ராசி விண்மீன் கூட்டங்களைப் போலவே இந்த விண்மீன் கூட்டமும் கிரேக்க வானியலாளர் தாலமியால் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் அட்டவணைப் படுத்தப்பட்டது.  
 அக்வெரியஸில் மிகப்பிரசித்தி பெற்ற பேரரக்க விண்மீனான சாதல்சூட் (Sadalsuud) என்ற பீட்டா அக்வெரியஸ் மற்றும் குறிப்பிடத்தக்க பல ஆழ் வான் பொருட்கள் உள்ளன. கோள வடிவ விண்மீன்கள் கூட்டமான மெசியர் (MESSIER) 2 (NGC 7089) மற்றும் மெசியர் 72 (NGC 6981) மற்றும் மெசியர் 73 (NGC 6994) ஆகியவையும் நெபுல்லாக்களில் சனி நெபுல்லாவும், அறு கோண நெபுல்லாவும் இந்த விண்மீன் கூட்டத்தில் முக்கியமானவை.   அக்வேரியஸ் விண்மீன் கூட்டம் வானில் காணப்படும் பத்தாவது பெரிய விண்மீன் கூட்டமாகும். இது 980 சதுர பாகை பரப்பளவு கொண்டது. இதனை தெற்கு வான் அரைக் கோளத்தின் நான்காவது கால் துண்டுப்பகுதியில் (SQ4), +650 அட்சம் முதல் - 900 அட்சத்தில் இடம் சுட்ட முடியும்.



இதற்கு அருகில் அக்யுல்லா(Aquila), காப்ரிகார்னஸ் (Capricornus), சீட்டஸ் (Cetus), டால்பினஸ் (Delphinus), ஈக்குலியஸ் (Equuleus), பெகாசஸ் (Pegasus), பிசஸ் (Pisces) மற்றும் ஸ்கல்ப்டர் (Sculptor), பிஸ்சிஸ் ஆஸ்டிரினெஸ்(PISCIS AUSTRINUS) ஆகிய சில குறிப்பிடத்தக்க விண்மீன் கூட்டங்கள் அமைந்துள்ளன. இதில் உள்ள ஏழு விண்மீன்களுக்கு கோள்கள் உள்ளது. மேலும் நான்கு விண்வீழ்கற் பொழிவுகளான (METEOR SHOWERS), மார்ச் அக்வேரிட்ஸ் (MARCH AQUARRIIDS), டெல்டா அக்வேரிட்ஸ், ஈட்டா அக்வேரிட்ஸ் மற்றும் அயோடா அக்வேரிட்ஸ் ஆகியவை இவ்விண்மீன் கூட்டத்துடன் தொடர்புடையவை.
வடமொழியில் சதபிஷ என்று சொல்லப்படும் இவ் விண்மீன் கூட்டம் தமிழில் நீர்நாள், செக்கு, குன்று, போர், சுண்டன், வருணன் நாள் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. சதயம் என்றால் நூறு மருத்துவர்கள், நூறு மருந்துகள் அல்லது குணப்படுத்துவோர் எனலாம். அதாவது சதய விண்மீன் கூட்டத்தில் காணப்படும் மங்கலான நூற்றுக்கணக்கான விண்மீன்கள் ஒவ்வொன்றும் ஒரு மருத்துவரை அல்லது மருந்தை குறிப்பதாக சொல்லப் படுகிறது. பொதுவாகப் பல மருத்துவர்கள் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகக் காணப்படுவது  இங்கு குறிப்பிடத்தக்கது. முதலாம் ராஜராஜ சோழன் என்ற அருள் மொழி வர்மன், ஸ்ரீ நாராயணகுரு, பால் நியூமன், ராபின் வில்லியம்ஸ், எல்விஸ் பிரிஸ்லி, எட்கர் ஹோவர், பால் க்லி, ஜோ டி மாகியோ ஆகியோர் சதய நட்சத்திரத்தில் பிறந்த சில பிரபலமானவர்கள். 


அக்வேரியஸ் ஒரு இளைஞன் பிசிஸ் ஆஸ்டிரினஸ் (Piscis Austrinus) என்ற விண்மீன் கூட்டத்தைச் சேர்ந்த தென் மீன்(Southern Fish) என்ற விண்மீனின் வாயில் இரு காதுகள் கொண்ட ரோம் நாட்டு ஜாடி (amphora) யிலிருந்து நீர் அல்லது தேன்(nector) ஊற்றுவது போல் சித்தரிக்கப்படுகிறது. டிராஸ் (Tros) மன்னனது மகன் கனிமெட் (Ganymede)டுடன் கிரேக்கப் புராணங்களில் அக்வேரியஸ் தொடர்பு படுத்தப்படுகிறது. அழகான ட்ரோஜன் இளைஞன் கனிமெட்டின் அழகு ஜீயஸ்ஸின் (Zeus) கண்ணை உறுத்தியது. ஜீயஸ் ஒரு கழுகாக (AQUILA) தன்னை உருமாற்றிக் கொண்டு ஒலிம்பஸ் மலைக்கு கடத்தி வந்து விட்டது. அங்கே உள்ள தெய்வங்களுக்கு நீர் பாத்திரம் சுமப்பவனாக பணியமர்த்தியது.




மற்றொரு கதையில், இந்த விண்மீன் கூட்டம் ப்ரோமீதீயசின்(Prometheus) மகன் டிகாலியனை (Deucalion) குறிப்பதாக சொல்லப்படுகிறது.
பாபிலோனியர்களின் புராணத்தில் அக்வேரியஸ் தான் கு.லா(GU.LA)  அதாவது மிக உயர்வான ஈ (Ea) கடவுள். 



படம் - (Ea) கடவுள்
Image courtesy : http://jerryandgod.com

எகிப்திய புராணங்களில் விண்மீன் கூட்டம் நைல் நதிக்கான கடவுளைக் குறிக்கிறது என்று சொல்லப்படுகிறது.       
சதயம் என்று தமிழில் அழைக்கப்படும் சதாஷ்பிய என்ற γ - அக்வாரி
விண்மீன் சூரியனிலிருந்து தோராயமாக 164  ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள, தோற்றப் பொலிவெண் + 3.849 எண் மதிப்பு கொண்ட நிறமாலையியல் இரட்டை விண்மீன். சதயம் ஒரு பிரதான வரிசை A0 V வகை விண்மீன். இதன் பெயர் அரபு மொழியில் சாத் அல் அக்ஸ்பியா
(sa’d al axbiyah) என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் “வீடுகளின் அதிருஷ்டம்” எனலாம். கதிரவன் வான் கோளத்தில் அதன் தோற்ற இயக்கப்பாதையில் அக்வேரியஸைக் கடக்கும் போது குளிர் காலம் முடிவடையும். ஆகவே பொதுவாக மாற்றங்களுக்கான காலம் என்ற பொருளில் அதிருஷ்ட விண்மீன்கள் என்று அக்வேரியசின் விண்மீன்கள் சொல்லப்படுகிறது.


Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)