பூரட்டாதி என்ற ஆல்பா மற்றும் பீட்டா பெகாசஸ் (α and β - Pegasus)

நமது 27 விண்மீன்கள் பற்றிய தொடரில் அடுத்து நாம்  காண இருப்பது 25 வதாக அமைந்துள்ள பூரட்டாதி விண்மீன் கூட்டம். பூரட்டாதி, ஆல்பா பெகாசஸ் (α - Pegasus) மற்றும் பீட்டா பெகாசஸ் (β - Pegasus) ஆகிய இரண்டு விண்மீன்களைக் கொண்டது. பெகாசஸ் (Pegasus)கிரேக்க புராணத்தில் வரும் மந்திர சக்தி கொண்ட பறக்கும் வெள்ளைக் குதிரை. தற்போது அறியப்பட்டுள்ள 88 விண்மீன் கூட்டங்களில் இது 48 வது ஆக இடம் பெற்றுள்ளது. 






இரண்டாம் நூற்றாண்டில் தாலமி(Ptolemy) யால் அட்டவணைப் படுத்தப் பட்டது. பெகாசஸ் வடக்கு வான் அரைக் கோளத்தில் நான்காவது கால் பகுதியில் (NQ4) காணப்படும் பெரிய விண்மீன் கூட்டங்களில் ஒன்று. வானில் காணப்படும் 1121 சதுர பாகை பரப்பளவுடைய  ஏழாவது பெரிய விண்மீன் கூட்டம். வட அரைக் கோளத்தில் அக்டோபர் மாதத்தில் +90o முதல் -60o வரையிலான அட்சங்களில் காண இயலும். இதன் அருகில் உள்ள பிற விண்மீன் கூட்டங்கள் ஆண்டிரமெடா(Anderomeda), அக்வேரியஸ்(Aquarius), டெல்பினஸ்(Delphinus), ஈக்கூலியஸ்(Equuleus), கைனஸ்(Cygnus) லா கார்டா (La Carta), பிசஸ்(Pisces), வல்பெக்யூலா(Vulpecula) ஆகியன. பெகாசஸ் விண்மீன் கூட்டமும் ஆண்டிரமெடா, ஆரிகா, காசியோப்பியா, சீப்பஸ், சீட்டஸ், லா கார்ட்டா, பெர்சியஸ் மற்றும் டிரையாங்குலம் ஆகிய விண்மீன் கூட்டங்கள் அடங்கிய பெர்சியஸ்(Perseus)  விண்மீன் குடும்பத்தைச் சேர்ந்தது.

கிரேக்க புராணத்தில் பெர்சியஸ், கோர உருவ அரக்கி மெதுசா (Gorgon Medusa) வின் தலையைத் துண்டித்த போது, மெதுசாவின் கழுத்திலிருந்து வெளிவந்த வெள்ளை நிறமுள்ள இறக்கைகள் கொண்ட பறக்கும் குதிரையாகும்.




Image courtesy: europasicewolf.wordpress.com

டெல்ஃபி (Delphi) மலையில் உள்ள அப்பல்லோ (Apollo) கடவுளின் கோவிலின் பெண் பூசாரி மற்றும் குறி சொல்லுபவள்  டெல்ஃபியின் ஆரக்கிள் (Oracle of Delphi) என்று குறிப்பிடப்படும் பைதியா (Pythia). 

டம்: டெல்ஃபியின் ஆரக்கிள் (Oracle of Delphi)
Picture courtesy : greekmythology.wikia.com


டம்: பைதியா (Pythia)
Picture courtesy : ancient-origins.net





ஆர்கோஸின் (Argos) அரசனான அக்ரிசியஸிற்கு  (Acrisius) குறி சொல்லும் போது அவனது மகள் டானே (Danae) யின் வயிற்றுப் பேரன் அவனை ஒரு நாள் கொன்று விடுவான் என்றாள்.  தனது எதிர்காலத்தையும், தலைவிதியையும் வாழ்க்கை முடியும் தருணத்தையும் நினைத்துப் பயந்த அக்ரிஸியஸ் பூமிக்கடியில் ஒரு அறை கட்டி அதில் டானேயைச் சிறை வைத்தான். டானே கருத்தரிக்கக் கூடாது என்பதே அவனது எண்ணமாக இருந்தது. (கொஞ்சம் நம் கிருஷ்ணன், கம்சன் கதையின் சாயல் இருக்கிறது இல்லையா.)

ஆனாலும் ஜெகதலப்பிரதாபன் ஜீயஸ் (Zeus) தான் சகலகலா வல்லவன் ஆயிற்றே. தங்க மழையாக (Golden Rain) வடிவெடுத்து சிறையின் சுவர்களை ஊடுருவல் செய்து, அப்படியே டானேயையுடன் கலந்தான். அந்த உறவில் பிறந்தவனே பெர்ஸியஸ் (Perseus). ஜீயசை பகைத்துக் கொள்ள விரும்பாத அக்ரிசியஸ், தன் மகளையும் , பெயரனையும் ஒரு மிதக்கும் பெட்டியில் (Ark) வைத்து கடலில் விட்டு விட்டான். அந்தப் பெட்டி செரிஃபோஸ் (Serifos) தீவின் கரையில் ஒதுங்கியது. தீவின் அரசன் பாலிடெக்டஸின் (Polydectes) சகோதரனும் அவன் மனைவியும் அவர்களுக்கு அடைக்கலம் தந்து காப்பாற்றினர்.(இது கர்ணன் கதையை நினைவு படுத்துகிறது). 

படம் : டானே(Danae) மற்றும் குழந்தை பெர்சியஸ்(Perseus) காப்பாற்றப்படுதல்

Picture courtesy : www.gettyimages.ae




பெர்ஸியஸ் வளர்ந்து வாலிபப் பருவம் அடைந்தான். ஜீயஸ் தான் தனது தந்தை என்பதை அறிந்தான். அவன் பிறந்த போது ஒரு அரசன் அவனது வாழ்க்கையில் குறுக்கிட்டான். இப்போது மீண்டும் அவனது வாழ்க்கையில் மற்றொரு அரசன் குறுக்கிட்டான். இப்போது குறுக்கிட்டவன் பாலிடெக்டஸ். டானேயை மனைவி ஆக்கிக் கொள்ள நினைத்த அவனுக்கு, பெர்சியஸ் இருக்கும் வரை தன் எண்ணம் ஈடேறாது என்பது புரிந்தது. எனவே பெர்சியஸை தன் வழிலிருந்து அப்புறப்படுத்த அதிக ஆபத்தான , நீண்ட தொலைவு செல்ல வைக்கும்  திட்டம் ஒன்றைத் தீட்டினான்.  பெர்சியஸை அழைத்து அரக்கி மெடுஸாவை கொன்று அவள் தலையைக் கொண்டு வரும் படி பணித்தான். 

அத்தீனா(Athena) பெண் கடவுளால் சபிக்கப்பட்டு அரக்கியாக மாற்றப்படும் முன்புவரையில் மெடுஸா ஒரு பேரழகிதான். மெடுஸாவிற்கு தன் அழகின் மீது அப்படியொரு கர்வமும் பெருமையும். பார்ப்பவர்களிடமெல்லாம் தன் அழகைப் பற்றியே பெருமை பேசுவாள். 

படம் : பார்த்தனான் ஆலயம்

Picture courtesy : en.wikipedia.org





ஒரு நாள் பார்த்தினான் (Parthenon) ஆலயத்திற்கு சென்றாள். பார்த்தினான் ஆலயத்தில் எல்லா கிரேக்க கடவுளர்களின் சன்னதிகளும் இருந்தன. 

படம் : அத்தீனா

Picture courtesy : www.emaze.com



ஞானத்தின் கடவுளான அத்தீனாவின் சன்னதிக்கு வந்த மெடுஸா, அந்த சன்னதியில் அத்தீனாவை விட அழகான  தனது சிலை இருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று மமதையோடு சப்தமாகக் கூறினாள். மேலும் எல்லோரும் தலை வணங்கிய அத்தீனாவை வணங்கவும் இல்லை. கண்டிப்பாக மக்கள் ஒரு நாள் தனக்கு அழகிய கோவில் கட்டி வழிபடுவார்கள் என்று சொன்னாள். பின்னர் அங்கிருந்த பெரிய பளபளப்பான பித்தளைக் கதவுகளில் தனது அழகை ரசித்தபடி இருந்தாள். 

கோவிலுக்கு வந்தவர்கள் அனைவரும் போய் விட்ட நிலையில், மெடுஸா மட்டும் தனித்திருந்தாள். அப்போது பித்தளை கதவுகளில் தெரிந்த அவளது உருவம் அத்தீனாவாக மாறியது.” முட்டாள் பெண்ணே, மேனி அழகு அழியக் கூடியது. ஞானமும், அறிவும்தான் அழியாதது” என்றது அத்தீனா தெய்வம். அதை மறுத்த மெடுஸா தன் அழகுதான் இந்த உலகத்தை மகிழ்ச்சியாக வைத்துள்ளது. என் அழகை பார்த்து ரசிப்பதால்தான் அவர்களின் வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக மாறுகிறது என்றாள். 

படம் : கோர வடிவம் கொண்ட அரக்கி மெடுஸா

picture Courtesy : lostgirlmyths.wikia.com 







இதைக் கேட்ட அத்தீனா பெண் தெய்வம் அவளை பாம்பு உடலும் தலை முழுவதும் பாம்புகளும் கொண்ட கோர வடிவ அரக்கியாக மாறும்படியும், மெடுஸாவை பார்ப்பவர்கள் கல்லாக மாறும்படியும் சாபமிட்டது. தவறுதலாகக் கூட மெடுஸாவை யாரும் பார்த்து விடக் கூடாது என்பதற்காக அவளை பூலோகத்தின் மறு முனைக்கு அரக்கிகளுடனும், பிற பார்வையற்ற கோரமான உருவமுடைய அரக்கப் பிறவிகளுடனும் வாழ அனுப்பியது. இந்த மெடுஸாவை கொல்லத்தான் பெர்சியஸை, பாலிடெக்டஸ் வஞ்சகமாக திட்டமிட்டு அனுப்பினான்.


படம் : மெடுஸாவின் துண்டித்த தலையுடன் பெர்சியஸ்

Image courtesy : greekmythology.com





மெடுஸாவின் தலையை பெர்சியஸ் துண்டித்ததும் கிரிஸயோர்(Chrysaor)  என்ற அரக்கனும், பெகாசஸும் தோன்றினர். பொசிடன்(Poseidon) மெடுசாவை, பார்த்தனான் கோவிலில் வைத்து கற்பழித்தபோது கோவில்  தீட்டுப்பட்டதால் அத்தீனா தெய்வம் மெடுஸாவிற்கு சாபமிட்டது என்றும் ஒரு கதை உண்டு. பொசிடன் மூலம் மெடுசாவிற்கு பிறந்த பிள்ளைகளே கிரிசயோர் மற்றும் பெகாசஸ் என்றும் சொல்வதுண்டு.

தனது நாட்டிற்கு வெற்றியுடன் திரும்பி வந்த பெர்சியஸ், தன் தாய் பாதுகாப்பாக இருப்பதையும், அரசன் பாலிடெக்டஸின் வஞ்சக நோக்கத்தையும் அறிந்தான். அரசன் மீது கோபமான அவன் தன் கையில் வைத்திருந்த மெடுஸாவின் தலையை அரசன் மற்றும் அவன் அவையினரை நோக்கிக் காட்டவும் அவர்களனைவரும் சிலையாகினர். பின்னர் பாலிடெக்டஸின் மீனவ சகோதரனான டிக்டிஸ் (Dictys) வசம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தான். மெடுஸாவின் தலையை அத்தீனா விடம் அளிக்க, அதனை அத்தீனா தன் மார்புக் கேடயத்தை அலங்கரிக்க உபயோகித்துக் கொண்டது.




பெகாசஸ் தமிழில் நாழி, முக்கொழுங்கோல், புரட்டை என்றும் வட மொழியில் பூர்வ ப்ரோஸ்தபத என்றும் அழைக்கப்படுகிறது. ப்ரோஸ்தபத என்பதற்கு முதலாவது ஆசீர்வதிக்கப்பட்ட கால்கள் என்று பொருள் சொல்லப்படுகிறது. பெகாசஸ் பிறந்ததும் ஹெலிக்கன் மலை நோக்கிப் பறந்தது. அந்த மலையில் தான் மியூசஸ்(Muses)கள் வாழ்ந்து வந்தன. அவற்றுடன் சினேகமான பெகாசஸ், தன் குளம்பால் தரையில் உதைத்து ஒரு  நீரூற்றை உருவாக்கியது. அந்த நீரூற்று ஹிப்போகிரெனி(Hippocrene) என்ற பெயரிட்டு வழங்கப்பட்டது. ஹிப்போகிரெனி என்றால் குதிரையின் ஊற்று எனப் பொருள் கொள்ளலாம். இந்த ஊற்றின் நீரை யாரெல்லாம் பருகுகிறார்களோ அவர்கள் எல்லாம் கவிதை எழுதுவதில் பெரும் புலமை பெறுவார்கள் என்று சொல்லப்பட்டது.

படம் : கைம்மேரா

Picture courtesy : www.ngkids.co.uk




பெகாசஸின் பிரசித்தமான புராணக்கதை பெல்லெரோபனுடன் (Bellerophon) தொடர்புடையது. கைம்மெரா(Chimaera) என்ற நெருப்பை சுவாசிக்கும் லைசியா(Lycia) நாட்டையே சேதப்படுத்திய ஒரு அசுரன். இவன் சிங்கத்தின் தலை, யாளியின் வால் மற்றும் ஆட்டின் உடல் மூன்று தலைகளுடன் விசித்திரமான வடிவம் கொண்ட அசுரனாவான். 
படம் : பெல்லெரோபன், கைம்மெராவை கொல்லும் காட்சி
Picture courtesy: greekmythology.com

பெல்லெரோபன் லைசியாவின் லோபேட்ஸ்(Lobates)  என்ற அரசனால் கைம்மெராவைக் கொல்ல அனுப்பி வைக்கப்பட்ட ஒரு மாவீரன். பெகாசஸ் குதிரையைக் கண்ணுற்ற பெல்லெரோபன், அத்தீனா பெண் தெய்வத்தால் தனக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒரு தங்க கடிவாளத்தைப் பயன்படுத்தி அதைப் பழக்கினான். வானிலிருந்து கைம்மேரா மீது திடீர் தாக்குதலை தன் ஈட்டி மற்றும் அம்புகளால் நடத்திக் கொன்றான். இதன் பின்னரும் லோபேட்ஸ் அரசனுக்காக பல வீரதீரச் செயல்களைச் செய்தான். இதனால் கிடைத்த புகழ் போதை கண்ணை மறைக்க, தலைக்கனம் பிடித்து கடவுள்களுடன் சேர ஆசைப்பட்டு ஒலிம்பஸ் மலையை நோக்கி பயணித்தான். அந்த முயற்சியில் தோல்வி கண்டு பெகாசஸ் குதிரையிலிருந்து கீழே தரையில் வீழ்ந்தான். ஆயினும் பெகாசஸ் ஒலிம்பச் மலையை அடைந்தது. அங்கே ஜீயஸ்(Zeus) பெகாசஸை தனது இடி, மின்னலைத் தாங்கி வரும் குதிரையாக பணியமர்த்தி விண்மீன் கூட்டங்களில் ஒன்றாக விளங்கச் செய்தான். குதிரையின் மேல் பாதியாகவே பெகாசஸ் விண்மீன் கூட்டம் சித்தரிக்கப்படுகிறது. இருப்பினும் இது 7 வது பெரிய விண்மீன் கூட்டமாகத் திகழ்கிறது.பெகாசஸ் பெரும் சதுரம் பெகாசஸின் உடலை குறிக்கிறது. 




பெகாசஸ் பெரும் சதுரம்(Great square) என்பது ஒரு குறிப்பிடத்தக்க வானவியல் காட்சி (Asterism). இக் காட்சியை பெகாசஸ் விண்மீன் கூட்டத்தின் மூன்று விண்மீன்களும், ஆல்பா ஆண்டிரமெடா என்ற விண்மீனும் சேர்ந்து உருவாக்குவது. பண்டைக்காலத்தில் இது பெகாசஸுக்கும் அண்டிரமெடாவிற்கும் பொதுவானதாகக் கருதப்பட்டது.
பதினேழாம் நூற்றாண்டில் பேயர் (Bayer) இதற்கு இரட்டை அடையாளம். ஆல்பா ஆண்டிரமெடா மற்றும் டெல்ட்டா பெகாஸி என்று வழங்கினார். இப்போது ஆல்பா ஆண்டிரமெடா அல்லது பொதுப்பெயரான ஆல்பரட்ஸ் (Alpheratz) ஆகியவையே புழக்கத்தில் உள்ளது. பூரட்டாதி விண்மீனில் அடங்கியுள்ள ஆல்பா பெகாஸி என்ற மார்கப்(Markab) மற்றும் பீட்டா பெகாஸி என்ற ஷீட்(Scheat) மற்றும் உத்திரட்டாதி விண்மீன் தொகுதியைச் சேர்ந்த காமா பெகாஸி என்ற அல்ஜெனிப்(Algenib) ஆகியவை பெரும் பெகாஸி சதுரத்தை உருவாக்கும் பிற விண்மீன்களாகும்


மார்கப் எனப்படும் (Markab) ஆல்பா பெகாஸி (α Pegasi)
மார்கப் என்னும் ஆல்பா பெகாஸி ஒரு அரக்க விண்மீன். B9 III வகையைச் சேர்ந்தது. கிட்டத்தட்ட 133 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதன் தோற்றப் பொலிவு எண் 2.48 ஆகும். பெகாசஸ் கூட்டத்தில் ஊள்ள மூன்றாவது பொலிவான விண்மீன். சூரியனைக் காட்டிலும் ஆல்பா பெகாசஸ் ஐந்து மடங்கு ஆரம் கொண்டது. மார்கப் என்ற பெயர் அரபு மொழியிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் குதிரையின் சேணம்(Saddle of the horse)  என்பதாகும்.
ஷீட்(Scheat)  எனப்படும் பீட்டா பெகாஸி (β Pegasi)
இது தான் பெகாஸி விண்மீன் கூட்டத்தின் இரண்டாவது பொலிவான விண்மீன். இது துணை அரக்க நிலைக்கும் அரக்க நிலைக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள M2.3 II - III வகை விண்மீன்.சூரியனை விட 1500 மடங்கு பொலிவானது. இதனுடைய பாரம்பரியப் பெயரான ஷீட்(Scheat)  என்றால் மேல் கை(upper arm)  என்று பொருள் படும். பீட்டா பெகாஸியின் தோற்ரப் பொலிவு எண் 2.42. சுமார் 196 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த இதன் பொலிவு சுமார் 43.3 நாட்களுக்கு ஒரு முறை 2.31 லிருந்து 2.74 வரை மாற்றமடையும். விண்மீன் தன் நிறையை இழப்பதன் காரணமாக இதனைச் சுற்றிலும் விரிவடையும் ஒரு வாயுக்கூடு உள்ளது. இக் கூடு சூரியனின் ஆரத்தைப் போல 3500 மடங்கு ஆரமுடையது.
  

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)