பிறந்த மண் வாசம் - (7) திரு. சி.ஆர். சுப்பராமன்
திரு.
சி.ஆர். சுப்பராமன் அவர்களுக்கு கல்லிடைக்குறிச்சி பிறந்த ஊர் இல்லை. திருநெல்வேலியை
அடுத்த சிந்தாமணிதான் இவரது சொந்த ஊர் என்றாலும் இவரது குடும்பத்தினர், திரு. சுப்பராமன்
அவர்களின் மறைவுக்குப்பின் நான் சிறுவனாக இருந்த
போது, அதாவது 1960 ளின் இறுதி வாக்கில் கல்லிடைக்குறிச்சி, வைத்தியப்பபுரம் தெருவில்
வசித்து வந்தனர். எனவே எங்கள் ஊரின் பெருமை மிக்க மனிதர்களில் அவரையும் இணைத்துக் கொள்வதில்
பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். அவரது மகன் திரு. சி.எஸ்.அரவிந்த கண்ணா( C.S. கண்ணன்) அவர்கள், தற்சமயம் திருச்சி
ஸ்ரீ ரங்கத்தில் வசிக்கிறார். அவரும் மெல்லிசைக் குழு மற்றும் இசையமைப்பாளராக திகழ்கிறார்.திரு. கண்ணன் அவர்களின் மகனான திரு. Rashaanth Arwin னும் இளம் திரைப்பட இசை அமைப்பாளராக பரிமளித்துக் கொண்டிருக்கிறார். திரு. சுப்பராமன் அவர்களின் மற்றொரு மகனான திரு. சி.எஸ். வேணு அவர்கள் பள்ளி நாட்களில்
என் சகோதரர் ஈஸ்வரனின் நெருங்கிய நண்பராவார்.
1940
களின் இறுதிப்பகுதிகளில் பாரம்பரியமான கர்நாடக இசை தான் திரையிசையிலும் கோலோச்சிக்
கொண்டிருந்தது. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய வடிவத்தில் திரைப்பட இசையை
உருவாக்கி, தமிழ் திரை இசையில் ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்திய பெருமை திரு. சுப்பராமன் அவர்களையே
சாரும். தந்தையின் பெயர் ராமசுவாமி அய்யர். தமிழ் திரை இசையில் பின்னாட்களில் புகழ் பெற்ற சங்கர்-கணேஷ்
இரட்டையர்களில் ஒருவரான சி.ஆர்.சங்கரின் மூத்த சகோதரர்தான் திரு. சி.ஆர்.சுப்பராமன்
அவர்கள்.
திரு.சி.ஆர்.சுப்பராமன்
தனது பதின் வயதுகளிலேயே, அதாவது பத்தொன்பதாவது வயதிலேயே திரை இசை அமைப்பாளராக ஆனவர்.
தனது இருபத்தெட்டு வயதில் காலமாகி விட்டாலும் கூட, அந்த எட்டாண்டு திரைப்பட இசையமைப்பாளர்
வாழ்க்கையில் பல திரையிசை விற்பனர்களை உருவாக்கியவர். மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும்
டி.கே.ராமமூர்த்தியும் இவர்களுடன் டி.ஜி.லிங்கப்பா, தெலுங்கு சுஸ்சுருல்லா தக்ஷிணாமூர்த்தி,
ஆர்.கோவர்த்தனம், கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ், ஜி.கே.வெங்கடேஷ் ஆகிய இசை அமைப்பாளர்களை
உருவாக்கிய மாமனிதன்.
தனது
பதினான்கு வயதில் இசையைத் தன் வசப்படுத்திக் கொள்ளும் கலையில் சி.ஆர்.சுப்பராமன் தேர்ச்சி பெற்று விட்டார். தெலுங்கில்
தயாரிக்கப்பட்ட “செஞ்சுலெட்சுமி” படத்திற்கு புதிய இசை அமைப்பாளர் தேவைப்பட்ட போது
திரையுலகிற்குக் கிடைத்த மாணிக்கம் தான் திரு.சி.ஆர்.சுப்பராமன். இந்தப் படம் பின்னாளில்
தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது வெளியானது.
1948-இல்
ராஜமுக்தி திரைப்படத்திற்கு இசை அமைக்கும் சந்தர்ப்பம் சி.ஆர்.சுப்பராமனுக்குக் கிடைத்தது.
இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரும் வெற்றியைத் தழுவின. இப்படத்தில் ஒரு பாடலான
‘உனையல்லால் ஒரு துரும்பசையுமோ’ என்ற பாடல் தியாகராஜபாகவதர் பாடியது. அந்த நாட்களில்
படத்தில் பாடல்கள் அதிகம் இருக்கும். பாடல்களை பொதுவாக கதாநாயகர்களே பாடுவது வழக்கம்.
சி.ஆர்.சுப்பராமன் இசையில் 1949 ஆம் ஆண்டில் வெளிவந்த படம், “லைலா மஜ்னு” அமோக வெற்றியைக்
பெற்றது. இந்த மாபெரும் வெற்றிக்கு திரு. சுப்பராமன் அவர்களின் திரையிசையும் காரணமாக
அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 18 பாடல்கள். திருமதி.பானுமதி ராமகிருஷ்ணாவின்
சொந்த தயாரிப்பு நிறுவனமான பரணி பிக்சர்ஸின் படம் இந்த லைலாமஜ்னு. இப்படத்தில் “உயிர்
போகுதே….. பறந்து செல்லும் பைங்கிளியே மறதியாகுமா” பாடல் கண்டசாலா பாடியது அதிகம் அக்
காலத்தில் விரும்பப்பட்ட பாடலாகும். இதற்குப் பின்னர் தமிழ்த் திரையுலகில் சி.ஆர்.சுப்பராமனின்
இசைக்கு தனி மதிப்பு ஏற்படத் தொடங்கியது.
’வேலைக்காரி’
படத்தில் சி.ஆர்.சுப்பராமனுக்குப் புகழ் சேர்த்தது ’ஓரிடம் தனிலே நிலை இல்லாதுலகினிலே,
உருண்டோடிடும் பணம் காசு எனும் பாடல் இன்றளவும் புகழ் பெற்ற பாடலாகும்.
“பவளக்கொடி”
திரைப்படத்தில் இருபத்தெட்டு இனிமையான பாடல்களை வெவ்வெறான பல ராகங்களில் இசையமைத்திருந்தார். ‘கன்னியின் காதலி’ படம் தான் கவியரசு கண்ணதாசன் முதன்முதலில் பாடல் எழுதிய படம்.
இதில் இரண்டு பாடல்களுக்கு சி.ஆர்.சுப்பராமன் இசையமைத்திருந்தார். திருச்சி லோகநாதனும்,
எம்.எல்.வசந்தகுமாரியும் மிக அழகாக பாடியிருப்பார்கள். 1950-இல் பாரிஜாதம் மற்றும்
1951- இல் பல படங்கள். மணமகள் திரைப்படத்தில் மகாகவி பாரதியாரின் “சின்னஞ்சிறு கிளியே
கண்ணம்மா” பாடல் அமரத்துவம் பெற்ற ராகமாலிகையாக
இன்றளவும் அமைந்துவிட்டது. அதன்பிறகு எத்தனையோ ராகங்களில் சின்னஞ்சிறு கிளியே இசைக்கப்பட்டாலும்
சி.ஆர்.சுப்பராமனின் கற்பனையில் சிரஞ்சீவித் தன்மை கொண்ட இந்த ராகமாலிகை எல்லா மேடைக்
கச்சேரிகளிலும் பாடப்பட்டுவந்தது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக வி.என்.சுந்தரம், எம்.எல்.வசந்தகுமாரி
குரல்களில் பாடப்பட்ட அந்தப் பாடலின் தீஞ்சுவை இன்றும் மக்களால் பருகப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன.
சி.ஆர்.சுப்பராமன் இசையமைத்த கடைசிப்படம் “தேவதாஸ்”. தேவதாஸ் படத்திற்கு இசையமைத்துக்
கொண்டிருந்தபோதுதான் திடீரென்று சுகவீனமுற்று அவர் காலமானார். இறக்கும்போது அவருக்கு
வயது 28.
சி.ஆர்.சுப்பராமன்
பொறுப்பேற்றிருந்த படங்கள் பலவற்றிற்கு அதன் பின் அவரிடம் உதவியாளர்களாக இருந்த மெல்லிசை
மன்னர்கள் இசையமைத்துக் கொடுத்தார்கள். இசைத்தட்டுக்களில் தங்கள் குருவான சி.ஆர்.சுப்பராமன்
அவர்களின் பெயரையே இசையமைப்பாளராகப் பதிவு செய்ய சிபாரிசு செய்தார்களாம். கட்டுரைக்கு அடிப்படையாக அமைந்தது திருமதி. விசாலாக்ஷி ஹமீது அவர்களால் தொகுத்தளிக்கப்பட்ட
“இன்னிசைச் சுவடிகள்” நிகழ்ச்சியிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள். இக் கட்டுரைக்கு
தேவையான மேலதிகத் தகவல்களை அவரது மகன் திரு. அரவிந்த கண்ணா அவர்களிடம் முகநூல் வாயிலாகப்
பெற மற்றொரு நண்பர் மூலம் முயன்று வருகிறேன். கிடைத்தவுடன் அவற்றையும் சேர்த்து மேலும்
பல சுவாரசியமான தகவல்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இலங்கை
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், வர்த்தக சேவையில் 13.6.2015 அன்று திருமதி. விசாலாஷி ஹமீது
அவர்களின் நிகழ்ச்சி ஒலிபரப்பானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment