பிறந்த மண் வாசம் - (3) திரு.சாமிநாதகவிராயரும், திரு. சிவசுப்பிரமணியக் கவிராயரும்
கல்லிடைக்குறிச்சிக்குப் பெருமை சேர்த்த
அடுத்த இரு மாணிக்கங்கள் திரு. சாமிநாத கவிராயரும் அவரது மகன், திரு. சிவ சுப்ரமணியக்
கவிராயரும் ஆவர். அதிகமான தகவல்கள் வலைத்தளங்களில் காணப்படவில்லை.
கிடைத்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து
கொள்வதில் மகிழ்ச்சி. இந்த இரு தமிழறிஞர்களின் பரம்பரையினர், சுற்றத்தார்கள் மேலதிகத்
தகவல்கள் தந்தால் நம் மண்ணிற்கும், தமிழுக்கும் செய்யும் பெரும் சேவையாக அமையும் என்பதில்
சந்தேகமில்லை.
கவிராயர்
எனப்படுவோர் குடும்ப வழியாகத் தமிழைப் பேணிய நற்றமிழ் அறிஞர்கள். இனிய கவிதைகளைத் தூய
தமிழில் இயற்ற வல்லவர்களுக்கு அக்காலத்தில் வழங்கப்பட்ட பட்டமே ‘கவிராயர்’ என்பது. இவர்கள் பரம்பரை பரம்பரையாகத்
தமிழ் சுவடிகளைப் பாதுகாத்து வந்தனர். பிற்காலத்தில் அவற்றை அச்சில் ஏற்றும் முக்கியமான
பணியையும் செவ்வனே செய்தனர். தமிழகம் வேற்று நாட்டவர் ஆட்சிக்குக் கீழ் அடிமைப்பட்டு
இருந்த காலங்களில் இவர்கள் அருகிப் போயினர் என்பது வருத்தத்திற்குரிய ஒன்று.
பொதிகை நிகண்டு என்ற நூல் 18 ஆம் நூற்றாண்டிலியற்றப்பட்டது.
இந்நூலுக்குப் பொதிகை நிகண்டு என்று
பெயர் தரப்பட்டதின் காரணம் அறியப்படவில்லை. இதன் ஆசிரியர் கல்லிடைக்குறிச்சி சாமிநாதக்
கவிராயர் பொதிகைமலைச் சீமையாகிய திருநெல்வேலிமாவட் டத்தைச் சேர்ந்தவர் ஆகவே, அம்மலைப்
போற்றும் வகையில் இப்பெயர் தரப்பட்டதோ என்று ஐயுற வாய்ப்புள்ளது. இவர் சுருக்கமாகச்
சாமி கவிராசன் எனவும் அழைக்கப்படுவார். ஆசிரியர் திரு. சாமிநாதக் கவிராயர் அவர்கள்
கல்லிடைக்குறிச்சி ஊரைச் சேர்ந்த சைவ வேளாளர்
மரபினர். இவர் மகன் ஆகிய திரு. சிவ சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள் பூவைப் புராணம்,
நாம தீப நிகண்டு ஆகியவற்றின் ஆசிரியராவார். பொதிகை நிகண்டு மட்டுமன்றி, ஆசிரியர் சாமி
நாதக் கவிராயர் தம் பெயரால் சாமிநாதம் என்னும் இலக்கண நூல் ஒன்றும் இயற்றியுள்ளதாகத்
தெரிகிறது. இரண்டு பிரிவுகளைக் கொண்டது
இந்நூல். விருத்தப்பாவில் 18138 சொற்கள் விளக்கப்பட்டுள்ளன. இதனை 1934 இலில் வையாபுரிப்பிள்ளை
பதிப்பித்துள்ளார். இந் நூலை தமிழ் பல்கலைக் கழக வலைத்தளத்திலிருந்து
PDF கோப்பாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
தமிழ் வழக்குப்படி, நிகண்டு நூலினை உரிச்சொற்
பனுவல் என்பர். கி.பி. 8ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தமிழில் வட மொழி மட்டுமல்லாது
தெலுங்கு, உருது, ஆங்கில மற்றும் போர்த்துகீசிய மொழிச் சொற்களும் உதாரணமாக சன்னல், கிஸ்தி, ஜமாபந்தி,
போன்றவை பரவலாக எழுத்து வழக்கிலும், பேச்சு வழ்க்கிலும் கலக்கத்
தொடங்கின. இவற்றின் காரணமாகச் சொற் பொருளுணர்த்தும் நூல்களான நிகண்டுகள் தோன்ற வேண்டிய
அவசியம் ஏற்பட்டது. இவ்வாறாக பல நிகண்டுகள் பல்வேறு காலங்களில் இயற்றப்பட்டன. காலத்தால்
மிகவும் பிற்பட்ட நாமதீப நிகண்டு கூடச் சுவடி வடிவிலேயே இருந்தது.
கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய
நாமதீப நிகண்டு நூலினைத் தமிழ்-லெக்சிகன் பதிப்பாசிரியர் ச.வையாபுரிப்பிள்ளை அவர்கள்
பழைய உரையைத் தழுவியியற்றிய புத்துரையுடன் 1930ஆம் ஆண்டில்
வெளியிட்டுள்ளார். தமிழ்
அகராதியின் ஆதார நூற்தொகுதியில் முதல் நூலாக இந்நூல் வெளிவந்தது. பின்னர் இப்பதிப்பும்
கிடைப்பது அரிதாயிற்று. இப்பொழுது நிழற்படப்பதிப்பாக மட்டுமே மறு பதிப்பாக வெளிவந்துள்ளது. நூல் முழுவதும்
800 வெண்பாக்களால் இயன்றுள்ளது. நான்கு படலங்களும் 16 வருக்கங்களும் கொண்டது.
சிவ சுப்பிரமணியக் கவிராயர் 19-ஆம் நூற்றாண்டின்
முதற்பகுதியில் இருந்தவர், திருநெல் வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலூகா கல்லிடைக்குறிச்சி
இவருடைய ஊர். சாமிநாதம் என்னும் இலக்கண நூலையும், பொதிகைநிகண்டு என்னும் நிகண்டு நூலையும்
இயற்றிய சாமிநாத கவிராயரின் மகனார் இவர். ஒருபொருட் பல்பெயர்த் தொகுதியாய் விளங்குகிறது.
இந்நூலிற் கூறப்பட்டுள்ள பொருட் பெயர்கள் ஏறத்தாழப் பன்னீராயிரமாகும். இவை முழுவதும்
சொல்லகராதியாகத் தொகுத்து இணைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பாகும்.
இவர் பூவைப் புராணம் என்னும் புராணத்தை
இயற்றி அதனைக் கொல்லம் ஆண்டு 985-இல் (கி.பி. 1810-இல்) அரங்கேற்றினார்.
இன்னும் இது போல அதிகம் வெளிச்சத்திற்கு
வராத தமிழறிஞர்கள் பலர் எல்லா ஊரிலும் உள்ளனர். அவர்களின் படைப்புகளை முடிந்த அளவு
அச்சில் ஏற்றி பதிப்பித்த தமிழறிஞர் திரு. வையாபுரிப் பிள்ளைக்கும், தமிழ் பல்கலைகழகத்திற்கும், உலகத் தமிழாராய்சி நிறுவனத்திற்கும் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

Comments
Post a Comment