வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (2)

முதல் பார்வை
ஒரு மனிதன் சாதாரணமாக தன் முதல் பார்வையிலேயே, தெளிவான இரவு வானில் எண்ணிலடங்கா விண்மீன்களைக் காண்பதாகவே நினைப்பான். ஆனால் வானவியலாளர்கள் கூற்றுப்படி, வெறும் கண்ணால் சுமார் 2500 விண்மீன்களையே நிலவற்ற நாளில் காண இயலும். அதுவும் தூசு, புகையினால் மாசுபட்ட வளிமண்டலச் சூழலில் அதிகபட்சமாக சில நூறு விண்மீன்களையே காண இயலும் என்பதே உண்மையாகும். இருகண் நோக்கி (Binocular) அல்லது தொலை நோக்கி (Telescope) மூலம் நோக்கும் போது இவ்வெண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.
தமிழ் நாட்டில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள காவலூரில் உள்ள வைணு பாப்பு வானியல் மையத்தின் 230 செ.மீ. தொலை நோக்கி மூலம் நோக்கும் போது 500,000,000 விண்மீன்களைக் காண இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
















1) Image courtesy: www.trodly.com
2) Image courtesy: www.en.wikipedia.org

பெயர் சூட்டல் முறைகள்


மனிதர்களைப் போலவே விண்மீன்களும் அவற்றின் பெயராலேயே அறியப் படுகின்றன. பொதுவாக மூன்று முறைகளில் விண்மீன்கள் பெயரிடப்பட்டு அறியப் படுகின்றன. கிட்டத்தட்ட 50 விண்மீன்கள் மிகப் பொலிவு மிக்கவை என்ற வகையில் இடம் பெறுகின்றன.
சிரியஸ் (Sirius), கனோபஸ்(Canopus), கபெல்லா(Capella), ஆல்டீபரன் (Aldebaran) போன்ற இப் பெயர்கள் இலத்தீன், கிரேக்க, அரபு மொழியிலிருந்து பெறப்பட்டவை. கனோபஸ் (அகஸ்தி), ஆல்டீபரன் (ரோகிணி), ஸ்பைக்கா (சித்ரா) போன்ற பல மிகப் பொலிவு மிக்க விண்மீன்கள் இந்தியப் பெயரையும் பெற்றுள்ளன.

அடுத்ததாக உள்ள முறையில் ஒரு பொலிவு மிக்க விண்மீன் அது அமைந்துள்ள விண்மீன் குழுவின் பெயருடன் சேர்த்துப் பெயரிடப்பட்டு அறியப் படுகிறது. அதாவது மனிதன் தன் பெயருடன் தனது குடும்பப் பெயரையும் சேர்த்து வைத்துக் கொள்வது போன்று இம் முறையில் பெயரிடப்படுகிறது. எடுத்துக் காட்டாக லியோ விண்மீன் குழுவின் மிகப் பொலிவு மிக்க விண்மீன் ரெகுலஸ் Regulus).  


இதனை (α - Leonis) ஆல்பா லியோனிஸ் என்றும், அதற்கு அடுத்தபடி மிகப் பொலிவு மிக்க விண்மீன் (β - Leonis) பீட்டா லியோனிஸ் எனவும் அழைக்கப்படுகிறது. கிரேக்க எழுத்துக்கள் மொத்தம் 24 தான்.  




எனவே ஒரு விண்மீன் கூட்டத்தில் உள்ள எல்லா விண்மீன்களையும் இம் முறையில் குறிப்பிட இயலாது.  பேயர்(Bayer) முறையில் விண்மீன்களின் தோற்றப் பொலிவெண்ணின் (Apparent Visual Magnitude), அதாவது தோராயமாக அதிகப் பொலிவு கொண்ட விண்மீனிலிருந்து குறைந்த பொலிவு கொண்ட விண்மீன் என்ற வரிசையில் ஆல்பா, பீட்டா, காமா என்று பெயர் வழங்கப்பட்டது. 



Image courtesy : http://www.ducksters.com/science/physics/constellations

 
ஃப்ளாம்ஸ்டீட் (FLAMSTEED) ஆங்கிலேய வானவியலாளர் (1646 - 1719) ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தினார். 



Image courtesy: http://blog.simulationcurriculum.com

இம் முறையில் ஒரு விண்மீன் குழுவிலுள்ள விண்மீன்களை மேற்கிலிருந்து கிழக்காக குறுக்காக எண்ணி வந்து, பின்னர் அவற்றில் ஒவ்வொரு விண்மீனுக்கும் அடையாள எண் ஒன்று வழங்கப் படுகிறது. ஒவ்வொரு விண்மீனும் அதன் கூட்டத்தின் பெயருடன் இந்த அடையாள எண்ணையும் சேர்த்துப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ரீகல்(Rigel) ஓரியன் 19 எனக் குறிப்பிடப்பட்டால் அந்த விண்மீன் ஓரியன் கூட்டத்தில் மேற்கிலிருந்து பார்த்துக் கொண்டு வரும் போது பத்தொன்பதாவது விண்மீனாக அமையும். விண்மீனின் பெயரில் உள்ள எண் ஃப்ளாம்ஸ்டீட் எண் என அழைக்கப் படுகிறது. படத்தில் ஒரியன் கூட்டத்தில் உள்ள இரு விண்மீன்களின் பெயரும் அவற்றுக்குரிய பிளாம்ஸ்டீட் எண்ணும் சிவப்புக் கட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. 





தற்செயலாக வானை நோக்கும் எந்த ஒரு பார்வையாளரும், முதற்பார்வையிலேயே விண்மீனின் சில பண்புகளை உணர முடியும். அதாவது முதலில் எல்லா விண்மீன்களும் வெவ்வேறு பொலிவு கொண்டவை ஆக விளங்குவதைக் காண முடியும். சிரியஸ், கனோபஸ் போன்றவை மற்ற விண்மீன்களை விட அதிகப் பொலியுடன் காணப்படுகின்றன. பெரும்பாலான மற்றவை, நிலவற்ற, தெளிவான இரவுகளில் மட்டுமே ஓரளவு கண்ணுக்குத் தெரியும் அளவில் மங்கலாகத் தெரியும். இத்தகைய விண்மீன்களை மிக அதிகப் பெருக்குத் திறன் கொண்ட தொலை நோக்கிகளைப் பயன் படுத்தி மட்டுமே காண இயலும். மேலும் சில விண்மீன்கள் தமது பொலிவில் அடிக்கடி மாற்றமடைகின்றன. இம் மாற்றங்கள் சில மணி நேரங்களில், சில நாட்களில் அல்லது சில மாத காலங்களில் கூட ஏற்படும்.

தாலமி அளவு கோல்

அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த தாலமி (கி.மு. 170 - 100) பண்டைய வானவியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். விண்மீன்களின் பொலிவை மதிப்பிட ஒரு முறையை முதன்முதலில் வகுத்தவர் இவரே.
இவரது முறைப்படி மிகப் பொலிவு உள்ள விண்மீனின் பொலிவு மதிப்பு 1 (ஒன்று) எனவும், மிகப் பொலிவு குன்றிய விண்மீனின் பொலிவு மதிப்பு 6 (ஆறு) என்றும் எடுத்துக் கொள்ளப்பட்டன. கதிரவன் மறையும் வேளையில் தெளிவாகக் கண்ணுக்குப் புலனாகும் விண்மீன், மிகப் பொலிவு உள்ள விண்மீன் எனவும், நள்ளிரவில் தெளிவான வானிலும் பொலிவு மங்கி காணப்படும் விண்மீன், மிகப் பொலிவு குன்றிய விண்மீன்என்றும் கருதப்பட்டது. தாலமியின் காலத்தில் வெறும் கண்ணால் கண்ட காட்சிகளை மட்டும் அடிப்படையாக வைத்து பதிவுகள் மேற்கொள்ளப் பட்டன. ஆகவே இக் காட்சிப் பதிவுகள் கண்டிப்பாக 100 சதவீதம் சரியாக இராது.

புதிய அளவு கோல்

1856 ஆம் ஆண்டில் நார்மன் பொக்சன்(Norman Pogson) இந்த முறையை கொண்டுவந்தார். பொலிவு எண் 100 என்பது ஒரு காரணியின் ஐந்தாவது அடுக்கு என்று கொள்ளப்படுகிறது. அதாவது (2.512)5 = 100.  இந்த அளவு கோலில் ஒவ்வொரு இடைவெளிக்கும் அடுத்த இடைவெளிக்கும் பொலிவில் வேறுபாடு (100)1/5 = 2.512.
இன்று விண்மீன்களின் பொலிவை மிகத் துல்லியமாக அளவிடக் கூடிய நிலையில், ஏற்படுத்தப்பட்டுள்ள அளவு கோலின் படி, பொலிவு எண் 1 என்ற அளவிலுள்ள விண்மீனின் பொலிவானது, பொலிவு எண் 2 என்ற அளவிலுள்ள விண்மீனின் பொலிவை விட 2.512 மடங்காக உள்ளது. அதேபோல் பொலிவு எண் 2 என்ற அளவிலுள்ள விண்மீனின் பொலிவானது, பொலிவு எண் 3 என்ற அளவிலுள்ள விண்மீனின் பொலிவை விட 2.512 மடங்காக உள்ளது. இந்நிலை முன்னர் கூறப்பட்ட முறையில் தொடர்கிறது. 


Number-line.svg



இம்முறையில் மிக அதிகப் பொலிவுடைய விண்மீனின் பொலிவு எண் எதிர்க் குறி மதிப்பைக் கூடப் பெறலாம். உதாரணமாக இம் முறையில் சிரியஸின்(SIRIUS) பொலிவு எண் -1.6 ஆகும். அக்குரஸின்(ARCTURUS) பொலிவு எண் சுழி.
சில கிரிக்கெட் மைதானத்தில் உள்ள வீரர்களைப் போல் தனித்தனியாக விலகி இருக்கும். சில ஒன்று திரண்டு கூட்டமாக அமையும். இப் பண்பு தவிர வேறு சில பண்புகளையும் முதற் பார்வையிலேயே நம்மால் உணர முடியும். சில விண்மீன்கள் சிவப்பு நிறத்திலும், சில சிரியஸ்,கனோபஸ் போல நீலமாகவும் மற்றும் பெரும் பான்மையானவை மஞ்சளாகயும் வெள்ளையாகவும் ஒளி வீசுவதைக் காண முடியும்.




 Im/age courtesy : http://arstechnica.com
வெள்ளை நிற விண்மீன்கள், சிவப்பு நிற விண்மீன்கள், மஞ்சள் நிற விண்மீன்கள், நீல நிற விண்மீன்கள்.


மேற்கண்ட படத்தில் மஞ்சள், வெள்ளை, சிவப்பு மற்றும் நீல நிற விண்மீன்களைக் காணலாம். இது  ஒமேகா சென்டுரை (Omega Centauri) விண்மீன் திரள். நம் பால் வழிக்கூட்டத்தில் செண்டாரஸ் (Centaurus constellation) விண்மீன் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு கோளக ( Globular cluster) விண்மீன் திரளாகும்.


படம் : ஒமேகா சென்டுரை (Omega Centauri) விண்மீன் திரள்




















Image courtesy: en.wikipedia.com



ஒமேகா சென்டுரை 150 ஒளி ஆண்டுகள் விட்டமுடையது. புவியிலிருந்து 15800 ஒளி ஆண்டுகள் தொலைவிலும் அமைந்துள்ளளது. பொதுவாக சிவப்பு நிற விண்மீன்கள் குறைந்த வெப்பநிலையிலும், நிறையில் குறைந்தும் நீல நிற வீண்மீன்கள் அதிக வெப்ப நிலையிலும், நிறை அதிகம் பெற்றும் இருக்கும். 


முன்னாட்களில் கண்ணால் கண்ட காட்சிப் பதிவுகளை மட்டுமே வைத்து இவ்வளவு தகவல்களைத் திரட்ட முடிந்த பண்டைய வானியலாளர்களின் மனதில் கீழ்க்கண்ட வினாக்கள் கண்டிப்பாக எழுந்திருக்கும். 

1. விண்மீன்கள் ஏன் பொலிவில் மாறுபடுகின்றன?
2. விண்மீன்கள் ஏன் பல்வேறு நிறங்களில் தோன்றுகின்றன?
3. சில விண்மீன்கள் ஏன் அவ்வவ்போது தமது பொலிவில் மாற்றமடைகின்றன?
4. விண்மீன்கள் ஏன் சிறியதாகவோ அன்றி பெரியதாகவோ தோன்றுகின்றன?




இவ்வினாக்களுக்கு கண்ணால் பார்த்து மட்டுமே விடை கூற இயலாது.அதற்கு முன் உண்மையில் விண்மீன் என்பது என்ன என அறிந்து கொள்ள வேண்டும்.முதல் கட்டமாக நம்மிடமிருந்து விண்மீன்கள் எவ்வளவு தொலைவில் உள்ளன என்பதை மதிப்பிடுதல் அவசியமாகிறது.இதன் பிறகே விண்மீன்கள் சிறியதாகவோ அன்றி பெரியதாகவோ தோன்றுவதனையும் விண்மீன் எதனால் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய இயலும்.

தொடரும்......

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)