தனுசு விண்மீன் கூட்டம் - பூராடம் மற்றும் உத்திராடம்

தனுசு என்ற சஜிட்டேரியஸ் (Sagittarius) விண்மீன் கூட்டம்.
இதில் அடங்கியுள்ள விண்மீன் குழுக்கள் பூராடம் மற்றும் உத்திராடம் விண்மீன் கூட்டங்கள் அடங்கியது.
இதில் பூர்வ ஆஷாட என்ற பூராடத்தில் எப்சிலான் சஜிட்டரி [Epsilon(ε) Sagittarii]  மற்றும் டெல்ட்டா சஜிட்டரி [Delta(δ) Sagittarii] ஆகிய இரண்டு விண்மீன்களும், உத்திர ஆஷாட என்ற உத்திராடத்தில் ஜீட்டா சஜிட்டரி [Zeta(ξ) Sagittarii]  மற்றும் சிக்மா சஜிட்டரி [Sigma(σ) Sagittarii] ஆகிய இரண்டு விண்மீன்களும்  அடங்கியுள்ளன.


பூராடம் விண்மீன் குழு  தமிழில் உடைகுளம், முற்குளம், நீர்நாள் என்றும்
உத்திராடம் விண்மீன் குழு  ஆடி, கடைக் குளம், ஆனி, விச்சுவ நாள் என்றும் அழைக்கப்படுகின்றன.


சஜிடேரியஸ் தெற்கு வான் கோளத்தில் காணப்படும் பெரிய விண்மீன் கூட்டங்களில் ஒன்றாகும். இது பால் வழிக்கூட்டத்தின் மையத்தில் அமைவதால் எளிதில் கட்புலனாகும் விண்மீன் கூட்டம். 
இந்த விண்மீன் கூட்டத்தில் உள்ள பொலிவான விண்மீன்கள் அனைத்தும் தேனீர்ப் பாத்திரம் (Tea pot) வானவியல் வடிவை (Asterism) உருவாக்குகின்றன. கிபி இரண்டாம் நூறாண்டில் டாலமி (Ptolemy) யால் முதன் முதலில் வகைப்படுத்தப்பட்டது.


  867 சதுர பாகை பரப்பு கொண்ட சஜிடேரியஸ் வானில் காணப்படும் விண்மீன் கூட்டத்தில் 15 ஆவது பெரிய விண்மீன் கூட்டம். இது தெற்கு வான் அரைக்கோளத்தின் நான்காவது காற்பகுதியில்(SQ4) அமைந்துள்ளது. +55o முதல் -90o வரையிலான அட்சங்களில் காண இயலும்.
இதன் அருகில் உள்ள பிற விண்மீன் கூட்டங்கள் அக்யுலா(AQUILA), கேப்பிரிகார்னஸ்(CAPRICORNUS), கரோனா ஆஸ்ட்ரலிஸ்(CORONA AUSTRALIS),இந்தஸ்(INDUS), மைக்ரோஸ்கோப்பியம்(MICROSCOPIUM), ஓஃப்பியாகெஸ்(OPHIUCHUS)Indus,Microscopium,Ophiuchus,ஸ்கியுடம்(SCUTUM)  ஸ்கார்பியஸ்(SCORPIUS), செர்பன்ஸ்(SERPENS), கௌடா (CAUDA) மற்றும் டெலிஸ்கோப்பியம் (TELESCOPIUM) .இந்த விண்மீன் கூட்டத்தில் உள்ள இருபத்திரெண்டு(22) விண்மீன்களுக்கு கோள்கள் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விண்மீன் கூட்டத்தில்தான் கைத்துப்பாக்கி விண்மீன் (PISTOL STAR) காணப்படுகிறது. இந்த கைதுப்பாக்கி விண்மீன் பற்றிய விவரங்களை பின்னர் காண்போம். 
இது தவிர பால் வழிக்கூட்ட மையம் (Galatic Centre), ரேடியோ அலைகளின் முலம் சஜிடேரியஸ் A ( Sagittarius A) மற்றும் சஜிடேரியஸ் குள்ள நீள் வட்ட விண்மீன் திரள் (SAGITTARIUS DWARF ELLIPTICAL GALAXY), சஜிடேரியஸ் குள்ள ஒழுங்கிலி விண்மீன் திரள் (SAGITTARIUS DWARF IRREGULAR GALAXY), பர்னார்ட்டின் விண்மீன் திரள் (BERNARD’S GALAXY) ஆழ் வான் பொருட்கள் (DEEP SKY OBJECTS), குமிழி நெபுல்லா(BUBBLE NEBULA), கிட்டத்தட்ட15 மெசியர்(MESSIER) பொருள்கள் அதிலும் குறிப்பாக சஜிடேரியஸ் விண்மீன் மேகம் (SAGITTARIUS STAR CLOUD) என்ற மெசியர்24(MESSIER 24),ஒமேகா நெபுல்லா(OMEGA NEBULA)என்ற மெசியர் 17, மெசியர் 18, காயல் நெபுல்லா (LAGOON NEBULA) மற்றும் மெசியர் 20 என்று ஏகப்பட்ட பல விஷயங்களைத் தன்னகத்தே கொண்டது சஜிடேரியஸ் விண்மீன் கூட்டம். இவற்றைப் பற்றிய தகவல்களை தனிப்பகுதியாக பார்க்கலாம்.

. தனுசு ராசி என்பது 12 ராசிகளில் ஒன்று. இந்த ராசி பழைய கிரேக்க புராணக் கதைகளில் சொல்லப்படும் ஒரு விசித்திரமான பிறவி (CENTAUR).
 தலை, மார்பு வரையில் உடல் மற்றும் கரங்கள் மனிதனைப் போலவும் மார்புக்குக் கீழேயும், கால்களும் குதிரையைப் போலவும் இருக்கும். இது க்ரோட்ட்ஸ் (CROTUS) என்ற புராணப் பாத்திரத்துடன் தொடர்பு உள்ளதாக கிரேக்க புராணக் கதைகளில் காணப்படுகிறது. 
க்ரோட்டஸின் தலை, மார்பு வரையான உடல்,காது மனிதன் போன்றும் கால்கள் ஆடு போலவும் சில சமயங்களில் கொம்பு உடையதாகவும் உள்ள சட்டர் (SATYR) பிறவி என்று சித்தரிக்கப்படுகிறது.
 பான் (PAN GOD) கடவுளுக்கும், யுப்பீமீ (EUPHEME) என்ற பெண் தேவதைக்கும் (NYMPH) பிறந்த ஆண்மகவுதான் க்ரோட்டஸ். 

ஹெலிக்கன் (HELICON) மலையில் ஜீயஸ் கடவுளின் பெண்களான ஒன்பது இசைத் தேவதைகள் மௌசாய் (MOUSAI) என்ற மியூஸஸ் (MUSES) களுடன் க்ரோட்டஸ் வாழ்ந்து வந்தான். இந்த யுப்பீமீ(EUPHEME) தேவதைதான் மியுஸஸ்களை வளர்த்தது வந்தது. க்ரோட்டஸ் நல்ல இசைக் கலைஞன் மட்டுமல்லாது நல்ல வில்லாளியும் கூட. அவன்தான் வில், அம்பைக் கண்டுபிடித்தவன்.பொதுவாக சட்டர்கள் அதிக காம வெறி கொண்ட சட்டங்களை மதிக்காத, விலங்குகளைப் போல செயல்படும் முரட்டுக் குணம் கொண்ட பிறவிகள். ஆனால் க்ரோட்டஸ் இதற்கு நேர்மாறான குணாதிசயம் கொண்டவன். கலைகளிலும், அறிவியலிலும் அதிகமான அறிவு உடையவன் மற்றும் மானிடர்களிடம் மரியாதையுடன் இருப்பவன்.
க்ரோட்டஸின் கடின உழைப்பு மற்றும் கவனமாக எதையும் செய்யும் குணம் காரணமாக ஜீயஸ் கடவுள் அவனுக்கு இறப்பே இல்லாத வாழ்வு தந்து ஒரு விண்மீன் கூட்டத்தில் வைத்தார். அவ்வாறு வைக்கும் போது அவனது எல்லா திறமைகளும் அந்த விண்மீன் கூட்டம் குறிக்க வேண்டும் என்பதால் அவனைக் குதிரையுடன் இணைத்து அதிக தொலைவு செல்லுதலையும் மற்றும் வில் அம்பு கொடுத்து விரைந்து செயல்படுதலையும் குறித்தாராம். க்ரோட்டஸின்  வில்லானது தேள் விண்மீன்(Scorpio Constellation) கூட்டத்தின் மிக முக்கிய விண்மீனான கேட்டை (Antares) விண்மீனை குறிபார்ப்பது போல இருக்கும்.



பாபிலோனியன் புராணக்கதைகளில் நெர்கல் (Nergal)  என்ற ஒரு மனிதத்தலையும் ஒரு சிறுத்தைத் தலையும் ஆக இரட்டைத் தலை கொண்டதும் இறகுகளை யுடையதுமான குதிரையின் உடலை கீழ்ப்பாகத்திலும் கொண்ட (CANTAUR) பிறவியுடன் தொடர்பு படுத்தப்பட்டது.



முதலில் பூராடம் விண்மீன் குழுவில் அமைந்த எப்சிலான் சஜிட்டரி
(ε - Sagittarii)  மற்றும் டெல்ட்டா சஜிட்டரி (δ - Sagittarii) பற்றிப் பார்ப்போம். இவை முறையே கவுஸ் ஆஸ்ட்ரலீஸ் (Kaus australis)  என்றும் கவுஸ் மீடியா (Kaus media) என்றும்அழைக்கப்படுகின்றன.


(1) கவுஸ் ஆஸ்ட்ரலீஸ் (Kaus Australis) என்ற எப்சிலான் சஜிட்டரி                    (ε -Sagittarii)                  

எப்சிலான் சஜிட்டரி ஒரு இருமை விண்மீன். இது புவியிலிருந்து சுமார் 143 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. சூரியனைக் காட்டிலும் 375 மடங்கு பொலிவான B  வகை நீல அரக்க விண்மீன். இதன் தோற்றப் பொலிவு எண் +1.79 ஆகும். சஜிட்டரி விண்மீன் குழுவில் அதிகப் பொலிவான விண்மீனும், இரவு வானின் 36 வது பொலிவான விண்மீனும் இதுதான். இதன் கூட்டாளி விண்மீன் 32 வில்வினாடி தள்ளி அமைந்துள்ளது.

 இதன் பாரம்பரியப் பெயர் கவுஸ் ஆஸ்ட்ரலீஸ் என்பதில் கவுஸ் என்பது அரபு மொழியில் வில்லைக் குறிக்கும். ஆஸ்ட்ரலீஸ் என்பது இலத்தீன் மொழியில் தெற்கு என்பதையும் சுட்டுகிறது. விண்மீன் வில்லின் அடிப்பகுதியில் இருப்பதாகவும் பிற டெல்ட்டா என்ற கவுஸ் மீடியா (Kaus media), லாம்டா சஜிட்டரி என்ற கவுஸ் போர்லீஸ் ( Kaus Borealis) விண்மீன்களுடன் சேர்ந்து வில்லை உருவாக்குவதாகவும் கொள்ளப்படுகிறது. டெல்ட்டா சஜிட்டரி என்பது வில்லின் நடுப்பகுதியையும், லாம்டா சஜிட்டரி என்பது வில்லின் மேல் பகுதியையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.


அடுத்து நாம் காண வேண்டியது கவுஸ் மீடியா (Kaus media) என்ற  டெல்டா சஜிட்டரி (δ - Sagittarii) விண்மீன்.

டெல்டா சஜிட்டரி ஒரு பல் விண்மீன்(Multiple star system) அமைப்பு ஆகும்.சுமார் 306 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. சூரியணை விடவும் 1180 மடங்கு பொலிவும், 62 மடங்கு ஆரமும் மற்றும் 5 மடங்கு நிறையும் கொண்ட K3 III வகை விண்மீன். பாரம்பரியப் பெயர்கவுஸ் மீடியா (Kaus media) வில்லின் நடு என்ற பொருள்படும். இதன் முதன்மை விண்மீனுக்கு மூன்று மங்கலான துணை விண்மீன்களைக் கொண்டது.

டெல்டா சஜிட்டரி B ( Delta sagittarii - B) 26 வில் வினாடி தள்ளியும், 
டெல்டா சஜிட்டரி C ( Delta sagittarii - C) 40 வில் வினாடி தள்ளியும், 
டெல்டா சஜிட்டரி D ( Delta sagittarii - D) 58 வில் வினாடி தள்ளியும்
அமைந்துள்ளது.

டெல்டா சஜிட்டரி 1969 ஆம் ஆண்டில் வில்லியம் ஆர். ஃபார்ஸ்சென்ஸின் (William R.Forstchen) நாவல் “தி சி ஆப் ஸ்டார்ஸ்”
(The sea of stars) இல் இடம் பெற்றது. அதில் ஒரு பெண்கள் குழு டெல்டா சஜிட்டரியின் ஒரு உள் காலனி 122 விற்கு விண்வெளிப்பயணம் செய்வதாக   கதை எழுதப்பட்டிருக்கும். 

அடுத்தது உத்திராடம் என்று அழைக்கப்படும் ஜீட்டா சஜிட்டரி[Zeta(ξ) Sagittarii] மற்றும் சிக்மா சஜிட்டரி[Sigma(σ) Sagittarii] ஆகியவற்றைக் காண்போம்.



அசெல்லா (Ascella) என்ற ஜீட்டா [ (ζ) Zeta Sagittarii]
ஜீட்டா சஜிட்டரி மற்றும் ஒரு இருமை விண்மீன்,இதுதான் இக் கூட்டத்தின் எப்சிலான், சிக்மா சஜிட்டரி விண்மீங்களுக்கு அடுத்த மூன்றாவது பொலிவான விண்மீனாகும். இதன் மரபுப் பெயரான அசெல்லா என்றால் இலத்தீன் மொழியில் அக்குள் (Armpit) என்று பொருள்படும். இந்த விண்மீன் புவிலிருந்து சுமார் 89.1 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
 ஜீட்டா சஜிட்டரி இரண்டு விண்மீங்களைக் கொண்டது. ஒன்று A2 வகை அரக்க விண்மீன். இதன் தோற்றப் பொலிவு எண் 3.26. இதன் கூட்டாளி விண்மீன் 3.37 தோற்றப்பொலிவெண் கொண்ட A4 வகை விண்மீன். இந்த இரு விண்மீன்களின்ஒன்றுபட்ட தோற்றப்பொலிவு எண் 2.60 ஆகும். இந்த இரு விண்மீன்களும் 13.4 வானியல் தொலைவு தள்ளியுள்ளன. அசெல்லாவிற்கு இன்னும் ஒரு மங்கலான மமர்றும் ஒரு கூட்டாளி 75 வில் வினாடி தள்ளி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நுன்கி (Nunki) என்ற சிக்மா(Sigma) சஜிட்டரி [ σ Sagittarii]
சிக்மா சஜிட்டரி இந்த விண்மீன் கூட்டத்தின் இரண்டாவது பொலிவான விண்மீன். இது ஹைட்ரஜன் இணைவு வினை நடைபெறும் குள்ளன் வகை B2.5 V விண்மீன் ஆகும்.இதன் தோற்றப் பொலிவு எண் 2.1. இது சூரியனை விட 3000 மடங்கு பொலிவானது மட்டுமல்லாமல் 7 மடங்கு சூரியனக் காட்டிலும் நிறை அதிகம் கொண்டது. புவிலிருந்து 228 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த விண்மீன் மிக வேகமாக சுழலக் கூடியது. விணாடிக்கு 200 கிமீ என்ற வேகத்தில், அதாவது சூரியனின் சுழற்சி வேகமான 2 கிமீ வினாடிக்கு என்பதைப் போல 100 மடங்கு அதிக வேகத்தில் சுழல்கிறது. சிக்மா சஜிட்டரியின் நுன்கி(Nunki)என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெயர் பாபிலோனிய(BABYLONIAN) அல்லது அசிரியன்(ASSYRIAN) மூலமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தப் பெயரின் முக்கியத்துவம் இன்னும் அறிந்து கொள்ளப்படவில்லை. இப் பெயர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் மறு கண்டுபிடிப்பு செய்யப்பட்டது. பின்னர் ஹிங்க்லே ஆலன்(Hinckley Allen) எழுதிய "விண்மீன்களின் பெயர்களும், முன்னோர்கள் வழி சார்ந்த கலாச்சாரம் காரணமான விண்மீன் பற்றிய அறிவும்மற்றும் அர்த்தமும்" (STAR NAMES,THEIR LORE AND MEANING)  என்ற புத்தகம் மூலம் உலகறியச் செய்யப்பட்டது.
நுன்கி விண்மீனிற்கு மிக மங்கலான தோற்றபொலிவு எண் 9.5 கொண்ட ஒரு கூட்டாளி 5.2 விவினாடி தள்ளியுள்ளது. இது சூரியனும் கோள்களும் இயங்குவதாகத் தோன்றும் பாதைக்கருகில்(Ecliptic path) உள்ளதால் சில நேர்வுகளில் சந்திரனால் மறைக்கப்படுகிறது. பொதுவாக கோள்களால் அதிகமாக மறைக்கப்படுவது இல்லை. கடைசியாக 1981 ஆம் ஆண்டில் வெள்ளியால் (venus) நவம்பர் 17 ஆம் நாள் மறைக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.     
சிக்மா சஜிட்டரி என்ற பொலிவான விண்மீனை கடைசியாக செவ்வாய் (Mars) மறைத்தது கிபி 423 ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் என்றுகுறிப்புகள் காணப்படுகின்றன.



Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)