பிறந்த மண் வாசம் (1) - திரு. ரா.பத்மநாபன்

பொதுவாகவே எந்த ஒரு மனிதனுக்கும் அவனது சொந்த ஊர் பற்றி ஒரு தேடலும், பெருமையும் அதன் மீது ஆழமான காதலும் இருக்கும். நானும் அதற்கு விதிவிலக்கில்லை. என்னுடைய மூதாதையர் பல தலைமுறைகளாக வாழ்ந்து மறைந்த என் சொந்த ஊரின் சிறப்புகளைத் தேடும் போது, இதுவரை அதிகம் அறியப்படாமல் குடத்துள் இட்ட விளக்காக இருந்து என் ஊருக்குப் பெருமை தேடித்தந்த பலரை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. என்னுடைய ஊர் தமிழ்நாட்டில் உள்ள பல ஆயிரக்கணக்கான சிற்றூர்களில் ஒன்று. பிற மாவட்டங்களில் அதிகம் பிரபலமாகாத ஊர்களில் ஒன்று.இந்த கட்டுரை தொடர்களின் நோக்கம் என்னைப்போல உங்கள் ஊரிலும் சரித்திர, இலக்கிய, கலைவாணர்கள் பலர் அடையாளம் தெரியாமல் எளிய வாழ்வு வாழ்ந்திருக்கலாம். அவர்களை அனைவருக்கும் தெரியச் செய்ய நீங்களும் முயல வேண்டும் என்பதே. முகநூலில் என்னுடன் தொடர்பு கொண்ட என் ஊரைச் சேர்ந்த நண்பர்கள் அவர்களுக்குத் தெரிந்த அறிஞர்கள் பற்றிய தகவல்கள் தந்தால் மிக்க மகிழ்ச்சியுடன் அவர்களின் பெருமையை எடுத்தியம்புவதை கடமையாகச் செய்ய விரும்புகிறேன். நான் பிறந்த மண்ணுக்கு என்னால் ஆன சிறிய கௌரவமாகவும் பாக்கியமாகவும் இப்பணியைக் கருதுகிறேன்.

இந்தக் கட்டுரை ரா.ப என்று இலக்கிய வட்டாரங்களில் அறியப் பட்ட திரு. ரா.பத்மநாபன் அவர்கள் பிறந்த நூற்றாண்டில் (1916 - 2016) அவர் நினைவைப் போற்றும் வகையில் எழுதப்படுகிறது. இத் தொடரில் என் பிறந்த ஊரான நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ் அறிஞர்களைப் பற்றி நான்கைந்து தொடர்கள் எழுத உள்ளேன். 

திரு. ரா.ப அவர்கள் 1916 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 10 ஆம் நாள்
திரு. இராம கிருஷ்ணன் - திருமதி ருக்மணி தம்பதியருக்கு திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சியில் பிறந்தார். S.S.L.C படித்து முடித்தபின், பம்பாயில் ESSO  என்றழைக்கப்பட்ட  நிறுவனத்தில் தட்டச்சு எழுத்தராகத்  தனது பணியைத் துவங்கியவர், காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் முதல்வரின் தனி உதவியாளராகப் பணியை நிறைவு செய்தார்.

1936 ஆம் ஆண்டு கல்லிடைகுறிச்சியில் பிறந்த மரகதவல்லி என்ற கங்கை அவர்களை மணந்தார். திரு. ரா.ப அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். திரு. கிருஷ்ணன், திரு. ராமசாமி மற்றும் திரு. ஸ்ரீராம் ஆகியோர். அன்னாரின் மனைவி திருமதி கங்கை அம்மாள் அவர்கள், திரு. ரா.பத்மநாபன் அவர்களின் அருமை சீடர் திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் கூற்றுப்படி சாந்தமுகத்தாய். பொறுமையின் அவதாரம். அம்மையார் குடும்பத்தின் இதர பணிகளை தன் தோளில் சுமந்து நன்கு கவனித்துக் கொண்டதால்தான்
திரு. ரா.பத்மநாபன் அவர்களின் இலக்கிய மற்றும் பக்திப்பணிகள் சிறப்புற அமைந்தன என்றால் அது மிகையாகாது. அம்மையார் பம்பாய் தமிழ்ச் சங்க நிறுவனர்களில் ஒருவரான டாக்டர். திரு. எஸ்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் சகோதரியின் மகளுமாவார். 1978 ஆம் ஆண்டில் நாராயணீயம் நூலைத் தமிழாக்கம் செய்யும் போது அவருக்கு திரு. நாஞ்சில் நாடன் பேருதவி செய்துள்ளார். இதனை திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் தன்னுடைய
”அம்பறாத்துணி” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். திரு. ரா.ப அவர்களால் எழுதப்பட்ட பல நூல்களில் ஒன்று ஸ்ரீமத் பகவத் கீதை யைத் தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்ட நூல். இந்த நூலை வெளியிடுவது, அவரது அருமைச் சீடர். திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் பெரு முயற்சியால் சாத்தியமானது என்று திரு.ரா.ப அவர்களின் மகன் திரு. ராமசாமி நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.


திரு. ரா.பத்மநாபன் அவர்களின் பிற நூல்கள்
(1) வேங்கடேச சுப்ரபாதம் - தமிழாக்கம். இந்த நூலை ஆய்வு செய்தவர் திரு. P.B. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் அவர்கள்
(2) ஸ்ரீ பூஜா ராமாயணம் - தமிழாக்கம். இந்த நூலுக்கு தமிழ்க்கடல் திரு. ராய சொக்கலிங்கம் பாராட்டுரை எழுதியுள்ளார்.
(3) நாராயணீயம் - தமிழாக்கம். இந்த நூலுக்கு வாகீச கலாநிதி கி.வா.ஜகன்நாதன் முன்னுரை எழுதியுள்ளார்.
(4) ஸ்ரீமத் பகவத் கீதை - தமிழாக்கம். இந்த நூலுக்கு அவரது அருமை சீடர் திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் முன்னுரை எழுதியுள்ளார்.
இப் புத்தகம் மாலதி பதிப்பகம், 10/352, பெருமாள் கோவில் வீதி, ஒலம்பஸ், இராமநாதபுரம், கோயம்புத்தூர் - 641045 நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. ரா.பத்மநாபன் அவர்களின் மகன் திரு.ராமசாமி அவர்கள் என் அத்தையின் புதல்வி திருமதி. கோமதி அவர்களின் கணவராவார். என்னுடைய பிறந்த ஊரான கல்லிடைகுறிச்சிக்குப் பெருமை சேர்த்த பல மாணிக்கங்களில் திரு. ரா.பத்மநாபன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.

திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் தன் ஆசானின் ஸ்ரீமத் பகவத் கீதை (மூலம் - தமிழாக்கம்) நூலுக்கு எழுதிய முன்னுரை கீழே தரப்பட்டுள்ளது.



வித்து முளைக்கும் தன்மை போல்

எந்தத் தோதிலும் இஃது ஓர் முன்னுரை இல்லை. எப்படி நான் திருக்குறளுக்கு முன்னுரை எழுத சாத்தியம் இல்லையோ, அது போல பகவத் கீதைக்கு நான் எங்கனம் முன்னுரை எழுத? மேலும் என் ஆசிரியர் மொழியாக்கம் செய்த நூலுக்கு நான் எங்கே முன்னுரை எழுதுவது. அணிந்துரை என்றும் அகவ இயலாது. வேண்டுமானால் பேராசிரியர். தெ. ஞான சுந்தரம் அறிமுகம் செய்த பணிந்துரை என்ற சொல்லைப் பயன் படுத்தலாம். எனவே ஈண்டு குறிக்கப்பெறும் வரிகள் என் ஆசான் பற்றிய நினைவுக் குறிப்புகள் மட்டுமே.
தமிழ்க்கடல் திரு. ராயசொக்கலிங்கம், தனது மாணாக்கரா என் ஆசானை
ரா. பதுமநாபன் என்பார். அவர் பதிப்பித்த ,எழுதிய அனைத்து நூல்களிலும் ஒரு பத்தியாவது தமது மாணவர் பற்றிய குறிப்பு இருக்கும். அவரது இயற்பெயர் ரா.பத்மநாபன். இரா.பத்மநாபன் என்றே எழுத மாட்டார். அஃதோர் அமங்கலக்குறிப்பென்று அறிவார்.பம்பாய் தமிழ்ச் சங்கத்தில் அவரை சுருக்கமாக ரா.ப என்பார்கள்.  



காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியற் கல்லூரியின் நிற்வாகியாக இருந்து, பணி ஓய்வு பெற்று, 1973ல் பம்பாய் வந்தார். ஏற்கனவே 1939 - 1952 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பம்பாயில் வாழ்ந்தவர். என்வே பம்பாய் தமிழ் சங்க்கத்தின் ஆயுள் உறுப்பினர். இந்த ஆண்டு தமிழ்ச் சங்கத்திற்கு பவள விழா ஆண்டு. அடுத்த ஆண்டு ரா.ப வுக்கு நூற்றாண்டு. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரத்தாண்டு என்று தமிழ்ச் சங்கத்தையும், ரா.ப வின் பணிகளையும் வாழ்த்தும் தகுதி எமக்குண்டு.
இரண்டாவது முறை பம்பாய் வந்ததும் சயான் சாலையில், மாட்டுங்காவிலிருந்து சயான் நோக்கிச் செல்லும் போது இடது வசம் கிங் சர்க்கிள் ஹார்பர் பிராஞ்ச் ரயில் நிலையம் தாண்டி, கைலாஷ் பவன் என்ற அடுக்ககத்தில் அவருடைய இரண்டாவது மகன் ப. ராமசுவாமியுடன் வாழ்ந்து வந்தார்.ஓய்வு பெற்று பம்பாய் வந்ததும் தமிழ்ச் சங்கம் அவரை பயன் படுத்திக் கொள்ள நினைத்தது. அந்த கால கட்டத்தில் கம்பராமாயண பட்டி மன்றங்கள் தமிழகத்து மேடைகளில் ஆரோக்கியமான இலக்கிய விவாதங்களை நிகழ்த்திக் காட்டின. பெரும் திரளில் தமிழர் வாழ்ந்த பம்பாயிலும் அதன் தாக்கம் இருந்தது. நானும் கூடத் தொடக்க காலத்தில் குன்றக்குடி அடிகளார், அ.ச. ஞானசம்பந்தன், கி.வா.ஜகன்நாதன், பா. நமச்சிவாயம், வேனா, கமலா சங்கரன் ஆகியோர் நடுவர்களாக இருந்த பட்டி மன்றங்களில் பேசியவன்தான். தமிழின் நற்பேறு ஒரு பேச்சாளனின் இறப்பில் ஒரு எழுத்தாளன் பிறப்பு.
அந்தக் காலத்தில் பம்பாய் தமிழ்ச் சங்கம் முழுமையாகக் கம்பனை கற்றுத்தரும் நோக்கத்தில் வாரம் மூன்று வகுப்புகள் என்ர கணக்கில் கம்பன் வகுப்பு தொடங்கியது. பத்தொன்பது மாணவர்களுடன் தொடங்கப் பெற்ற அவ்வகுப்பில் நானொருவன் மட்டுமே மிச்சம் என்ற நிலைக்கு வந்தது.
மாணவராகச் சேர்வதற்கு முன் பம்பாய் தமிழ்ச் சங்கத்து மேடைகளில் ரா.ப அவர்களின் சொற்பொழிவுகளை சில முறை கேட்டதுண்டு. மெடை பேச்சுக்களுக்கான ஜகஜ்ஜாலங்கள் இல்லாமல் நேரடியான, அறிவார்த்தமான பேச்சுக்கள் அவருடையவை. பாடல்களைச் சொல்வதில் இனிமையும், தெளிவும் சொல் சிதையாமையும் இருக்கும். சொல் பிரித்து பாவங்களுடன் இசையுடன் மொழிவார். பிறகுதான் நான் தெரிந்து கொண்டேன் அவர் தமிழ்க் கடல் ராய.சொ அவர்களின் மாணவர் என்பதை. “ஒரு சோதியில் சென்று கொளுத்திய பந்தம் தேக குறைய எரியுமோ”
அப்போது பம்பாய் பிராஞ்ச் ஹார்பர் ரயில் வழித்தடத்தில் ரே ரோடு ஸ்டேஷன் பக்கம் எனது பணிமனை. வாசம் கொலாபாதாண்டி நேவி நகரில் நேவியில் வேலை பார்த்த சேகனூர் மார்க்கபந்து லட்சுமண முதலியாருடன். என்னை விட பத்து வயது பெரியவர் அவர்.
பணிமனை நீங்கி இரண்டு வடாபாவ் தின்று தண்ணீர் குடித்த பொலிவுடன் கம்பன் வகுப்புகளில் நுழைந்தால் யாவருக்கும் முன்னதாக ரா.ப உட்கார்ந்திருப்பார். அப்போதுதான் முகச்சவரம் செய்து,குளித்து, வெள்ளை சட்டை வேட்டியுடன் நெற்றியில் அர்த்த சந்திர வடிவில் சந்தனப் பொட்டு வைத்து, பூத்த புது மலர் போல இருப்பார். முகத்தில் என்றும் வளர்ந்திருக்கும் நிறைந்த புன்னகை அது அவரது அகத்தின் அழகு.
கம்பனில் பாயிரச் செய்யுளில் தொடங்கி ஒரு பாட்டைக் கூடத் தள்ளாமல் வகுப்பு போகும். வகுப்புக்கு எவர் வந்தாலும் வராமல் போனாலும் எந்த முகத்தாங்கலும் இராது. பிற மாணவர்களுக்கு கம்பன் கற்பதை விடவும், தமிழ் கற்பதை விடவும் அவசரமான அலுவல்கள் இருந்திருக்கும். சென்று, தேய்ந்து இறுதல் என்றொரு வழக்கு உண்டு தமிழில். அது போல் தான் ஆயிற்று எங்கள் கம்பன் வகுப்பும். ஆனால் நான் ஒரு பிடிவாதக்காரன். Die hard species என்பார் வேனா. இறுதியில் ஒரு நாள் ரா.ப சொன்னார், “நீங்களும் கிங் சர்க்கிள் இறங்கி எங்க பில்டிங் தாண்டி தமிழ்ச் சங்கம் வரணும்... நானும் நடந்து வரணும்... எதுக்கு வெட்டி அலைச்சல்? அடுத்த வகுப்பு நம்ம ஆத்திலே” என்றார்.
வகுப்பு இருக்கும் நாளெல்லாம் முன்னிரவில் திரும்ப விக்டோரியா டெர்மினல் போய், அங்க்கிருந்து பஸ் பிடித்து குவார்ட்டர்ஸ் போக இரவு ஒன்பது  மணிக்கு மேலாகி விடும். முதலியார் எனக்காக சாப்பிடாமல் காத்திருப்பார். எனக்கும் அதுவரை பசி தாங்காது என்பற்காகவே வடாபாவ் ஏற்பாடு.
முதல் வகுப்பு அவர் வீட்டிற்கு போகும் போதே சற்று தாமதம். கைலாஷ் பவன் தாண்டி வடாபாவ் தின்று வர நேரமில்லை. என்வே நாற்பத்திரண்டு படிகளும் ஏறி ஆசிரியர் வீட்டிற்குப் போனேன்.
“கை, கால் கழுவிட்டு வாங்கோ” என்றார். துவைத்து உலர்த்திய துண்டு நீட்டினார். சோபாவில் அமர்ந்தபோது அம்மா,எமக்கு மாமி என்றழைப்பதில் சீலம் இல்லை. கங்கை என்பது அவரது பெயர். பெயருக்கும் குணத்திற்கும் அப்படி ஒரு பொருத்தம். தட்டு நிறைய கொழுக்கட்டைகள் கொண்டு வந்தார்.எனக்கு “பாரகம் அடங்கலும், பசிப்பிணி அறுகென ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்து” என்ற பாடடல் நினைவு வந்தது. பம்பாய் வந்த பிறகு கொழுக்கட்டை என்றால் ஊருக்குப் போனால்தான். என்வே மிச்சமின்றி சாப்பிட்டேன். பெரிய டபராவில் கொதிக்கக் கொதிக்க வாசனையாக.வயிறும் மனமும் குளிர்ந்தது. வாய் காபியால் மணந்தது. அதன் பிறகு எங்கே நான் காபி குடித்தாலும் தர ஒப்பீட்டு அளவைக்கு அந்த காபிதான்.
ஹால் தாண்டி உள் அறையில் கிழக்குப் பார்த்து நாலடிக்கு  ஆறடி அகல நீளத்தில் ராமர் பட்டாபிஷேகம் படம். தரையில் மணை போட்டு படத்தின் கீழே ஆசிரியர் அமர்ந்தார். அவர் முன்னால் கம்பராமாயணம் வை. மு. கோ உரை. என் கையில் மர்ரே ராஜம் அய்யர். அந்தக் காலத்தில் ஒரு காண்டம் ஒரு ரூபாய் என்று வெளியிடப்பட்ட கம்பராமாயண மூலம். தமிழ்ச் சங்கத்தில் விட்ட இடத்திலிருந்து பாடம் தொடங்கியது. பாடம் மட்டுமல்ல வகுப்பு நடந்த நாட்களில் எல்லாம் டிபனும் காபியும்.ஒரு நாள் அலுவலகத்தில் சற்று அதிகமான வேலை. பதினைந்து நிமிடங்கள் தாமதமாகப் போனேன்.
“சுப்ரமணியம், ஆபீஸில போன் இருக்கோல்லியோ, லேட்டாகும்னா அல்லது வர முடியாதுன்னா கூப்பிட்டுச் சொல்லிருங்கோ..... காத்திண்டிருக்க மாட்டேன்...” என்றார். சுறுக்கென்று கட்டெரும்பு கடித்ததை போல. ஆனால் நேரம் தவறாமை  அவர் தம் ஒழுங்கு எதையும் சினந்த முகத்துடன் சொல்ல மாட்டார். கருத்தில் கடுமை இருந்தாலும் குரலில் இனிமை இருக்கும்.
தமிழ் செய்யுளை வாய் விட்டு இயல்பான சந்த ஓசையுடன் வாசிக்கச் சொல்லுவார். கூச்சப்படாமல் ஓசை நயத்துடன் பாடல் சொல்ல நான் கர்றுக் கொண்டேன். கம்பன் மட்டுமே பயிற்றவில்லை அவரெனக்கு. மார்கழி மாதம் எனில் ஆண்டாள் திருப்பாவை மாணிக்கவாசகரின் திருவெம்பாவை தின்மும் வரிசை மாறாமல் அதிலொன்று இதிலொன்று. எல்லாப் பாடல்களுமே மனப் பாடம் ஆயிற்று. சில சமயம் எம்.எல். வசந்த குமாரி குரலில் ஒலிநாடா ஓடும். சில சமயம் சீர்காழி கோவிந்த ராஜன் குரலில் திருக் கடவூர் அபிராம் அந்தாதி, தேவாரம், திருவாசகம், நாலாயிரத்திவ்யப் பிரபந்தம்.
நாராயணபட்டத்திரியின் நாராயணீயம் முழுக்க விருத்தப் பாக்களால் தமிழ்படுத்தினார். ரா.பத்மநாபன் அவர்களின் கையெழுத்து நல்ல வடிவாக இருக்கும். எனினும் நாராயணீயம் மொத்தமும் என் கையெழுத்தில் படி எடுத்தேன். பம்பாய் தமிழ்ச் சங்க்கம் 1978ல ல் நடத்திய அதன் வெளியீட்டு விழாவில் பல பெரிய மனிதர்களுடன் சிறுவனான நானும் மேடையில் இருந்தேன்.
கி.பி. 1560 ல் தோன்றிய நூற்றாண்டு வாழ்ந்த ஸ்ரீ நாராயண பட்டத்திரி பாரதப் புழை ஆற்றின் வடகரையில் பிறந்து கண்ணனின் அபுத லீலைகளை அமுதொழுகப் பாடும் பாகவதத்தின் சுருக்கமான 100 தசகங்களாக 1034 சுலோகங்களால் ஸ்ரீ நாராயணீயம் செய்தார். காளிங்க நர்த்தனம் என்னும் 53 வது தசகத்தை காளீய நடனம் என்று தமிழ்ப் படுத்தினார் திரு.ரா.ப. மூன்றரை ஆண்டுகள் அவரிடம் கம்பன் பயின்றேன். மிகைப் பாடல்கள் என்று அறியப்பட்ட பாடல்களைக் கூடத் தவிர்க்காமல் சொல்லுவார். சில நாட்கள் அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தால் தமிழிசை கேட்டவாறு சும்மா உட்கார்ந்து இருப்போம். பாரதி பாடல்களில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. தம் பிடித்து பாரதியாரின் “ஊழிக்கூத்து” பாடுவார். அவர் பாடும் பாணியில், 2013 ல் ஏற்காட்டில் நடந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட முகாமில் நானும் “ஊழிக்கூத்து” பாடினேன்.
கம்பன் வகுப்புகள் பூரணமான பின்பும்,பல ஆண்டுகள் அவருடன் தொடர்பில் இருந்தேன். 1989 ல் பம்பாய் நீங்க்கி கோயம்புத்தூருக்கு மாற்றலாகி வந்த பிறகு நான் அவரைக் கண்டதில்லை என்றாலும் என் புத்தகங்களை  அவருக்கு அனுப்புவேன். கடித்தத் தொடர்பில் இருந்தோம்.
1999 ல் தமது 83 ஆம் வயதில் அவர் இறந்து போன தகவல் எனக்குத் தெரியாது. அவர் இறந்த பிறகும் அவருக்கு நான் எழுதிய கடிதம் பார்த்து, அவரது இரண்டாம் மகன் ப.ராமசுவாமி எழுதிய கடிதத்தின் வாயிலாகத் தெரிந்து கொண்டேன். துக்கன் கேட்கக் கூட வாய்க்கவில்லை.
அவருக்கும் அவரது துணைவியாருக்கும் சொந்த ஊர் தாமிரபரணிகரையில் அமைந்த பதினெட்டுத் தெருக்கள் கொண்ட வான் பெரிய ஊர், கல்லிடைக்குறிச்சி. கல்லிடைக்குறிச்சி அப்பளத்திற்கு மட்டும் பெருமை சேர்த்த ஊரல்ல. ரா. பத்மநாபன் துணைவியார் கங்கை, பம்பாய் தமிழ் சங்க நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் எஸ்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் மருமகள்.
ரா.ப வுக்கு மூன்று மகன்கள். மூத்தவர் கிருஷ்ணன். அவரை நான் பார்த்ததில்லை. வெளிநாட்டில் இருந்தார். இரண்டாவது மகன் ராமசுவாமியும் அவரது மனைவியும் என்மீது அதிகம் பரிவு கொண்டிருந்தவர்கள். குழந்தையாக நான் பார்த்த அவர்களது மகள் அபர்ணா இப்பொது குடும்பத்துடன் சிக்காகோவில் வசிக்கிறார். ரா.ப் வின் மூன்றாவது மகன் ஸ்ரீராம் நான் கம்பன் பயிலும் போது சிறுவன். இப்பொழுது குடும்பத்துடன் வெளிநாட்டில்.
காரைக்குடி கம்பன் கழகம் 74 வது ஆண்டு விழாத் தலைமை ஏற்க என்னப் பணித்த போது எங்க்கு எனதாசிரியர் நினைவில் வந்து கண்கள் கசிந்தன. விழா மேடையில் சொன்னேன், “நானும் கர்வப்படலாம் ராய.சொ.வின் மாணவப்பரம்பரை என்று”. எங்கிருந்தோ ஆசிரியர் ரா.பத்மநாபன் என்னைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார் என்றும் சொன்னேன். தொடர்ந்து அறக்கட்டளை சொற்பொழிவுகள் என்று அடுத்த சில மாதங்கள் நிகழ்த்திய போதும், அதனை “கம்பனின் அம்பறாத்துணி” எனும் தலைப்பில் நூலாக்கிய போதும் அதை என் குருதட்சினை என்ரு கருதினேன். அதனை அவருக்கு சமர்ப்பணம் செய்து நூற்கடன் செய்தேன்.
என் கதைகளில், கவிதைகளில், கட்டுரைகளில் தொல் தமிழ் சொற்கள் தாராளமாகப் புழங்குவதாகவும், கம்பனின் செல்வாக்கு அதிகமாக இருப்பதாகவும், தீவிர இலக்கிய வாசகர்கள் கருத்துச் சொல்வார்கள். அதன் காரணங்களில் தலையாயது ஆசிரியர் ரா.பத்மநாபன் எனக்களித்த கல்வி.
எனதிந்த 67 ஆண்டு வாழ்க்கையில் பல நதிகளில் நீரள்ளிப் பருகியிருக்கிறேன். நீரள்ளிப்பருகும் நிலையில் நதிகள் சுத்தமாகவும், பெருக்கெடுத்தும் உயிர்த் தமிழ் வளர்ப்பதாகவும் இருந்தன. அவற்றுள் பெருநதி ரா. பத்மநாபன் அவர்கள்.
ரா.பத்மநாபன் பிறந்து இன்னும் ஓராண்டில் நூற்றாண்டு ஆகும். அதற்கான கட்டியம் கூறல் , அவர் தமிழ் செய்த இந்த நூல் “பகவத் கீதை”. இதை எப்போது தமிழ் செய்ய ஆரம்பித்தார், எப்போது யாத்து முடித்தார் போன்ற தகவல்கள் இல்லை என்றாலும் இன்றேனும் அது நூலாவதில் மகிழ்ச்சி.
இதைத்தான் பாரதி “வித்து முளக்கும் தன்மை போல” என்கிறார் போலும்.
பகவத் கீதையைத் தமிழ் செய்யுள் வடிவத்தில் அவர் எய்து வைத்திருந்த ஆக்கம்,அவர் காலமாகி பதினாறு ஆண்டுகள் சென்று அவர் குடும்பத்தினரின் முன்கை எடுப்பால், இப்பொழுது நூலாகிறது. மாலதி பதிப்பக நண்பர்களின் முயற்சிக்கு நன்றியும், வணக்கமும், வாழ்த்தும்.
தமிழ் கூறும் நல்லுலகம் வாசித்து பயன் பெற வேண்டும்.
                                                   
                                                                                             மிக்க அன்புடன்,
                                                                                              நாஞ்சில் நாடன்
                                                                                               (கையொப்பம்)
கோயம்புத்தூர் - 641042
05 மே 2015.

Comments

  1. நாஞ்சில் நாடன் கோவையில் வசிக்கிறார் என்று அறிகிறேன். அடுத்த முறை கோவை சென்றால் அவரை அவசியம் சந்திப்பேன்

    ReplyDelete
  2. திரு ரா.பத்மநாபன் அவர்கள் மொழியாக்கம் செய்து பம்பாய் தமிழ் சங்கத்தால் 1978 m ஆண்டு வெளியிடப்பட்ட நாராயணீயம் நூல் எங்கு கிடைக்கும்?இது பற்றி தகவல் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என் மின்னஞ்சல் ramaswamisubramaniam@gmail.com.
    நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)