விண்மீன் கூட்டங்களும் தேசியக் கொடிகளும் - பகுதி (1)
தென் சிலுவை (Southern Cross) விண்மீன் குழு
பண்டைய கிரேக்கர்களுக்கு நன்கு தெரிந்திருந்த சிலுவை விண்மீன்களை அவர்கள்
செண்டரஸ் விண்மீன் கூட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதினர். ஏதென்ஸ் நகரின் அட்சத்தில்
இருந்து நோக்க கிமு. 1000 ஆண்டுகளில் வானின் கீழ்ப்பகுதியில் அவர்களால் தெளிவாகக் காண
முடிந்தது. பிற்காலத்தில் புவியின் முந்து நிலை இயக்கம் காரணமாக (Precession of the
equinoxes) கிமு 400க்குப் பின் சிலுவை விண்மீன்கள் அட்சம் இன்னும் குறைவாகவே வீண்மீன்
குழு எதென்ஸ் நகரவாசிகளுக்கு கட்புலனாகவில்லை. இந்த விண்மீன்கள் மீண்டும் 16 ஆம் நூற்றாண்டில்
ஐரோப்பிய மாலுமிகளால் புவியின் தெற்கு பிரதேசங்களைக் கண்டறிய கடல் பயணம் மேற்கொள்ளப்பட்ட
போது மறு கண்டுபிடிப்பு செய்யப்பட்டது. சிலுவை விண்மீன் குழு முதலில் தனித்த விண்மீன்
கூட்டம் என்றே இத்தாலிய ஆய்வாளர் ஆண்டிரியஸ் கோர்சலி 1516ல் குறிப்பிட்டார். போர்துகீசியர்கள்
ஆப்பிரிகாவை சுற்றி வரும் போது இதனை தங்களின் கடல் பயண வழிகாட்டியாகக் கொண்டு பயணித்தனர்.
சிலுவை விண்மீன்கள் தெற்கு வான் கோளத்தில் தென் துருவத்தைக் காட்டும் குறிமுள்ளாக கடற்பயணங்களில்
அமைகிறது. இதில் உள்ள ஆல்பா க்ரக்சிஸ் என்ற பொலிவான விண்மீன் ஒரு இருமை விண்மீனாகும்.
மேற் குறிப்பிட்ட பல நாடுகளில்
அவற்றின் தேசியக் கொடியில் விண்மீன்கள் இடம் பெற்றிருக்கும். அவற்றின் முக்கியத்துவம்
குறித்து அறிந்து கொள்ள இந்தக் கட்டுரை பயன்படும் என நம்புகிறேன்.
முதலில் ஆஸ்திரேலியாவின் தேசியக் கொடி. இதில் இடது காற்பகுதியில் காணப்படும் யூனியன் ஜாக் குறியீடு ஆஸ்திரேலியாவின் இங்க்கிலாந்து நாட்டுத் தொடர்பையும், அதற்கு கீழ் காணப்படும் ஏழு முனை விண்மீன் அதன் ஆறு மாநிலங்களையும் அவற்றின் ஒருங்கிணைந்த பிரதேச பொது ஒற்றுமையையும், பொது வளமையையும் குறிக்கிறது. மற்றோர் அரை பகுதியில் காணப்படுவது தென் சிலுவை விண்மீன்கள் ஆகும்.
அடுத்து நியூசிலாந்து நாட்டின் தேசியக் கொடியைப் பார்ப்போம்.
இந்த நியூசிலாந்து நாட்டின் கொடியில் ஆழ்ந்த நீல நிறப் பின்னணியில் பிரதானமாக இரு குறிகள் உள்ளன. அவை 1) கொடியின் இடது பக்க காற்பகுதியில் யூனியன் ஜாக் என்ற இங்கிலாந்து நாட்டின் தேசியக் கொடியின் குறியீடும் 2) வலது அரைப்பகுதியில் ஐந்து முனைகளுடன் வெள்ளை நிற எல்லைக்கோட்டுடன் கூடிய நான்கு விண்மீன்களும் இருப்பதைப் பார்க்கலாம். கொடியை மாற்றி அமைப்பது தொடர்பான தேசிய அளவிலான விவாதங்கள் பல தசாப்தங்களாக நடந்து வந்தது. 2016 ஆம் ஆண்டில் மார்ச் 24 ஆம் நாள் இது குறித்து நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பின் படி தேசியக் கொடியை மாற்றத் தேவை இல்லை என்று 57 விழுக்காடு மக்களும், 43 விழுக்காடு மக்கள் மாற்றம் தேவை என்றும் வாக்களித்தனர் என்பதால் கொடி மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பப்புவா நியூ கினியா நாட்டின்
புதிய தேசியக் கொடி 1971 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 3:4 விகிதத்தில் அமைந்த செவ்வக
கொடியின் கட்டப்பட்ட பக்கத்தின் மூலை விட்டத்தில் இது இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மேல் முக்கோணப் பகுதியில் சொர்கத்தின் ராகியானா பறவையும், கீழ் முக்கோணப்பகுதியில்
தென் சிலுவை விண்மீன்கள் வெள்ளை நிறத்திலும் உள்ளன. கொடியை 1971 இல் வடிவமைத்தவர் பதினைந்தே
வயதான சூசன் கரிக்கி என்ற பள்ளி மாணவியாவார். அவர் 1971 ஆம் ஆண்டில் தேசிய அளவில் நடைபெற்ற
வடிவமைக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
சிவப்பு நிறமும் கருப்பு
நிறமும் பப்புவா நியூ கினியாவின் பல பழங்குடி மக்களின் பாரம்பரியமான நிறமாகும். கருப்பு,
சிவப்பு மற்றும் வெள்ளை ஆகியன ஜெர்மானிய பேரரசின் நிறங்கள். 1918 க்கு முன்பாக இந்த
சிறிய நாடு ஜெர்மானிய காலனியாதிக்க நாடாக இருந்தது என்பதே இதன் காரணமாகும்.
சமோவா நாட்டு தேசியக் கொடியில்
காணப்படும் சிவப்பு நிறப் பின் புலம் வீரத்தைக் குறிக்கிறது. நீல நிறம் சுதந்திரதையும்,
வெள்ளை நிறம் தூய்மையையும் குறிக்கிறது. தென்
சிலுவை குழுவின் ஐந்து விண்மீன்கள் முறையே α, β, γ, δ மற்றும் ε ஐ குறிக்கிறது.
இதில் ε மட்டும் சிறியதாக இருப்பதன்
காரணம் அது அதிகப் பொலிவானது இல்லை என்பதால் ஆகும். சிலுவை சமோவாவின் புவியியல் இருப்பிடத்தையும்,
நியூசிலாந்து நாட்டுடன் ஆன தொடர்பையும் சுட்டுகிறது.
இறுதியாக பிரேசில் நாட்டு தேசியக் கொடியை காண்போம்.
பிரேசில் நாட்டின் கொடி
7:10 என்ற விகிதத்தில் அமைந்த செவ்வகக் கொடியாகும். பச்சை புலத்தில் தங்க நிற சாய்
சதுரம் அதன் உள்ளே ஒரு நீல நிற வட்டு. இந்த வட்டு அந்த நாட்டின் இரவு வானத்தைக் குறிக்கிறது.அந்த
வட்டில் குறுக்காக வரும் பட்டையில் எழுதப்பட்ட “Ordem E Progresso” என்ற சொற்றொடர் “ஒழுங்கும் முன்னேற்றமும்”
(Order and Progress) பொருள் தரும். வட்டின் கீழே காணப்படும் 27 விண்மீன்கள் பிரேசிலின்
மேல் வானத்தில் இரவில் காணப்படும் விண்மீன்களைக் குறிப்பதாகும். கொடியை ரேய்முண்டோ
டெய்க்ஸீரா மென்டஸ் (Raimundo Teixeria Mendes) வடிவமைத்தார். நவம்பர் 19 ஆம் நாள்1889
ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட 21 விண்மீன் உள்ள கொடி மே மாதம் 11 ஆம் நாள் 1992 இல் 27 விண்மீன்
கொண்ட கொடியாக மாற்றம் செய்யப்பட்டது. இக் கொடியில்
காணப்படும் பல் வேறு விண்மீன் கூட்டங்கள் 1 ,2 ........9 என்று
எண்ணிடப்பட்டு சுட்டப்பட்டுள்ளது. எண் ஆறு (6) தென் சிலுவை( Southern Cross) விண்மீன்
குழுவிற்கானது. இதில் காணப்படும் பிற விண்மீன் குழுக்கள் பற்றிய விவரம்
1. புரோசியான்
- 1 விண்மீன்,
2. கேனிஸ்
மேஜர் - 5 விண்மீன்கள் ( சிரியஸ் - பெரியது)
3. கனோபஸ்
(அகஸ்தி) - 1 விண்மீன்
4. ஸ்பைகா
( சித்திரை) - 1 விண்மீன்
5. ஹைட்ராவின்
2 விண்மீன்கள் ( ஆயில்யம்)
6. சதர்ன்
கிராஸ் - 5 விண்மீன்கள் (
7. சிக்மா
ஆக்ட்டாண்டிஸ் - தென் துருவ விண்மீன் - 1 விண்மீன்
8. டிரையாங்குலம்
ஆஸ்டிரலீஸ் - 3 விண்மீன்கள்
9. ஸ்கார்பியோ
- 8 விண்மீன்கள் - பெரியது கேட்டை(Antares)
ஆகியன.
இந்தத் தொடர் ஒரிரு பகுதிகள் கொண்ட சிறு தொடர்தான். பல நாடுகளின் கொடிகளில் பல விண்மீன் வடிவங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றைப்பற்றியும் உங்களின் வரவேற்பை பொறுத்து எழுத ஏண்ணியுள்ளேன். உங்களின் ஆதரவு என்னை இன்னும் அதிகம் எழுதத் தூண்ட வேண்டும் என்பதே என் அவா. அது போல தங்களின் பின்னூட்டத்தை மறக்காமல் இடவும்.
Comments
Post a Comment