சித்திரை(Spica) என்ற α - வெர்ஜினிசஸ் (α - Virginis)
சித்திரை விண்மீன்
நமது விண்மீன் வரிசையில் அமைந்த (14) பதினான்காவது விண்மீன். இது தென் அரைக்கோளத்தில்
அமைந்துள்ள கன்னி ராசி எனப்படும் விர்கோ (Virgo) விண்மீன் கூட்டத்தில் உள்ள மிகப் பொலிவான
விண்மீனான ஆல்பா வெர்ஜீனிஸ் (α - Virginis) என்ற விண்மீன்.
தமிழில்சித்திரை, நெய்ம்மீன்,
பயறு, அறுவை, நடுநாள், ஆடை, தூசு, சுவை, தச்சன், துவட்டா நாள், நேர்வான் என்ற பெயர்களில்
அழைக்கப்படுகிறது.
இரவு வானில் கட்புலனாகும்
பொலிவான (15) பதினைந்தாவது விண்மீன். புவிலிருந்து சுமார் 250 ஒளி ஆண்டுகள் தொலைவில்
உள்ளது. இரண்டாம் நூற்றாண்டில் டாலமியால் பதிவு செய்யப்பட்ட விண்மீன் கூட்டம்.
வான்
கோள நடுக்கோடும் ( Celestial Equator) வானில் சூரியன் இயங்குவதாகத் தோன்றும் பாதை
(Ecliptic path) இரண்டும் இரு புள்ளிகளில் வெட்டிக் கொள்ளும் என்பது நமக்குத் தெரியும்.
இவற்றை சம இரவு நாட்கள் என்று அழைக்கிறோம். இதில் இலையுதிர் கால சம இரவு நாள்
(Autumnal Equinox) அதாவது பீட்டா வெர்ஜீனிஸ் (β - Virginis) க்கு மிக அருகில் அமைந்திருக்கும்.
விர்கோ விண்மீன் கூட்டம்தான்
பரப்பளவின் அடிப்படையில் இரண்டாவது பெரிய விண்மீன் கூட்டம். இதன் பரப்பளவு 1294 சதுர
பாகைகள்.
தெற்கு வடக்காக - 20o முதல் +20o வரை பரவியுள்ளது
(Declination). வலது கோணம் (Right ascension) 11 மணி முதல் 16 மணி வரை பரவியுள்ளதைக்
காணலாம்.
கிரேக்க புராணங்களில்
கன்னி (Virgo) ராசி நீதிக்குறிய பெண் கடவுளான டைக் (Dike) குடன் தொடர்பு படுத்தப் படுகிறது.
ஜீயஸ் (Zeus) கடவுளுக்கும் டைட்டனஸ் தேமிஸுக்கும் (Titaness Themis) க்கும் பிறந்த
மகள் டைக் (Dike). விர்கோ எப்பொழுதும் இறக்கைகளுடன் உள்ள ஒரு தேவதையாகவும் அதன் இடது
கையில் கோதுமை தானியக் கதிர்களை வைத்திருப்பது போலவும் சித்தரிக்கப்படுகிறது.
நமது
சித்திரை விண்மீன் இந்த தானியக்கதிரில் அமைந்திருப்பது போன்றுள்ளது. துலா ராசி(Libra) ராசிக்கு
அதாவது நீதித் தராசின் அருகே இருப்பது போன்ற தோற்றமுடையது.
சில சமயம் டைக்கை, அஸ்டரியா (Astraeia) என்றும் சொல்லப்படுகிறது.
அதாவது அஸ்ட்ராயஸ் (Astraeus) என்ற விண்மீன்களின் தந்தைக்கும்,
ஈவோஸ் (Eos) என்ற விடியல் பெண்தெய்வத்திற்கும் பிறந்த
பெண் என்றும் சொல்லப்படுகிறது.
கிரேக்க புராணத்தின்
படி டைக், மானிடர்களின் பொற்காலத்தில் (Golden age) மானுடர்களிடயே நீதியைப் பூமியில் பரிபாலனம்
செய்ய அனுப்பப்பட்டாள். இந்தப் பொற்காலத்தில் மானிடர்கள் எப்பொழுதும் இளமையாகவும்,
செழிப்பாகவும், சண்டை சச்சரவு இன்றி அமைதியாவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தனர். பூமியில்
எப்பொழுதும் வசந்த காலமாகவே இருந்தது. பழைய முன்னறிவித்தல் (Prophecy) களை நிறைவேற்றும்
பொருட்டு ஜீயஸ்(Zeus), தன் தந்தை குரோனஸை
(Cronus) பதவியிலிருந்து தூக்கி எறிய பூமியில் வெள்ளிக் காலம்(Silver age) ஆரம்பமானது.
பூமி முன்னளவு செழிப்பாக இல்லை என்றானது. ஜீயஸ் நான்கு பருவ காலங்களை உருவாக்க, மானிடர்களுக்கு
கடவுளர் மீதான மரியாதையும், பற்றும் இல்லாது போனது. டைக் (Dike) மானிடர்களிடம் உரையாற்றியது.
அப்போது மானிடர்கள் அவர்கள் முன்னோர்களின் கொள்கைகளை விட்டுவிடக் கூடாது என்று அறிவுறுத்தியது.
பலமுறை எச்சரித்தும் எந்தப் பனும் இல்லாததால் மானிடர்களை வெறுத்து மலைக்குப் பறந்து
சென்று விட்டது. அதன் பிறகு நிலைமை இன்னும் மோசமாக வெண்கலக் காலம்(Bronze age), இரும்புக்காலம்(Iron
age) ஆரம்பித்தவுடன் நிரந்தரமாகவே விண்ணுலகம் சென்று விட்டது. இது போல் பல கதைகள்.
கன்னி ராசியின் அதி
முக்கிய விண்மீன் சித்திரை என்ற ஸ்பைக்கா (Spica). சூரியனைவிட அதிக வெப்பமான பொலிவான
தொலைநோக்கியால் பிரித்தறிய இயலாத ஒரு இருமை
விண்மீன் (Binary star).
இந்த இருமை விண்மீன்கள் ஒன்றை ஒன்று 11 மில்லியன் கிமீ தொலைவில்
அமைந்த பாதையில் ஒன்றை ஒன்று சுற்றிவருகின்றன. இந்த இடத்தில்
பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு 150 மில்லியன் கிமீ என்பது கவனிக்கத்தக்கது.
இவற்றின் பரிமாற்று ஈர்ப்பின் காரணமாக முட்டை வடிவத்தை பெற்றுள்ள இந்த விண்மீன்களின்
கூரான முனைகள் ஒன்றை ஒன்று நோக்கியபடி 4 நாட்களில்
சுற்றி வருகின்றன. சித்திரை விண்மீனின் (ஆல்பா வெர்ஜினிஸ்) தோற்றப் பொலிவு எண்
+1.04.
முதன்மை விண்மீன் B1 வகை துணை அரக்க நிலைக்கும் அரக்க
நிலைக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள சூரியனை விடவும் 12100 மடங்கு பொலிவான விண்மீன்
ஆகும். இதன் துணை B2 வகையைச் சேர்ந்தது. முதன்மை விண்மீன் இரண்டாம் வகை சூப்பர் நோவா
ஆக வெடித்துச் சிதறத் தேவையான அளவு பெரிதாக வளர்ச்சியடைந்துள்ள புவிக்கு அருகில் உள்ள விண்மீன்களில் ஒன்றாகும்.
சித்திரை விண்மீனை கொண்டே ஹிப்பர்சஸ்
(Hipparchus) BC 127 ஆம் ஆண்டிலேயே புவியின் சுழற்சியச்சின் படிப்படியான மாற்றத்தைக்
கண்டறிந்தார்.
இப்பொழுது அதாவது ஜூன் மாதம்(2016) வியாழன்(Jupiter), சனி(Saturn) மற்றும் செவ்வாய்(Mars) ஆகிய மூன்று கோள்களும் இரவு விழத் தொடங்கியதும் வெளிப்படத் துவங்கும். அதில் பொலிவான வியாழன் மேற்குப் பகுதியில் பாதியில் நள்ளிரவு வரையில் கட்புலனாகும்.
செவ்வாய் சற்றுப் பொலிவு குறைவான நிலையில் சனிக்கு மேலாக தென்கிழக்கு வானில் அந்தி நேரத்தில் புலப்படும். அதுவும் இன்று(3.6.2016) சனி புவிக்கு மிக அருகில் வருகிறது.
அண்டாரிஸ்(Antares) என்ற கேட்டை, சனி மற்றும் செவ்வாய் ஆகிய மூன்றும் அழகிய முக்கோணத்தை உருவாக்கும் காட்சியை வானில் காணலாம்.
தென் கிழக்கிலிருந்து தென் மேற்காக ஒரு வளைந்த கோட்டை கற்பனை செய்தால் நமது சித்திரை விண்மீன் இக் கோட்டின் நடுவில் அமைந்திருக்கும்.
மற்றொரு முறையில் கிழக்கு வானில் பின் மாலைப் பொழுதில் பெருங்கரடி
(Ursa Major) விண்மீன்கள் கூட்டத்தின் ஒரு பகுதியான பெருங்கரண்டி(Big Dipper) அல்லது சப்த ரிஷி மண்டலம் என்ற ஏழு விண்மீன்களின் கடைசி விண்மீனிலிருந்து தொடர்ந்து கீழ் நோக்கி அதே வளைந்த பாதையைத் தொடர்ந்து வர முதலில் வருவது அக்குரஸ்(Arcturus) என்ற சுவாதி. அப்புறம் இன்னும் கீழே வர சித்திரை(Spica) யும் கோர்வஸ் (Corvus) ஹஸ்தமும் கண்ணுக்குப் புலனாகும். இதை ஆங்கிலத்தில் Arc to Arcturus and Spike to Spica என்ற சொற்றொடரின் முலம் நினைவில் கொள்ளலாம்.
Comments
Post a Comment