விருச்சிக விண்மீன்(Scorpius Constellation) கூட்டம் - அனுஷம், கேட்டை மற்றும் மூலம். (பகுதி 2 கேட்டை)

கேட்டை விண்மீன் குழு

இதில் அடங்கியுள்ள விண்மீன்கள் ஆல்பா, சிக்மா, டவ் ஸ்கார்பி (α, σ and τ  - Scorpii) ஆகியன.




அண்டரெஸ் (Antares) என்ற α - ஸ்கார்பி விருச்சிகத்தில் உள்ள விண்மீன்களிலேயே மிகப் பொலிவானதும், இரவு வானின் பொலிவான விண்மீன் வரிசையில் 15 வதும் ஆக அமைந்துள்ளது. அண்டரெஸ் என்றால் தேளின் இருதயம்( Heart of the scorpion) என்று பொருள்படும். செவ்வாயின் எதிரி (Anti Ares) அல்லது செவ்வாயைப்போல் என்று பொருளில் மற்றொரு பெயர் காரணமாகக் கூறப்படுகிறது. இது செவ்வாயைப் போல் செந்நிறமாக இருப்பதால் மெசபடோமிய வானியலாளர்கள் அவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம் என்றும் கருதப் படுகிறது.
மற்றொரு கருத்து இசுலாத்திற்கு முன்பான (pre - Islamic) தங்க முல்லாக்யாத் (Golden Mu’ alla qat) ஏழு நீண்ட கவிதைகளில் போற்றப்படும் போர் வீரன் அண்டார் அல்லது அண்டரா - இபன் - ஷதாத்( Antar or Antarah - ibn- shaddad) நினைவைப் போற்றும் வகையில் சூட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

α - ஸ்கார்பி(Antares) , மகம்(Regulus), ஃபோமல்ஹெட்(α - Piscium) மற்றும் ரோகிணி(Aldebaran) இவை நான்கும் பாரசீகத்தின் அரச விண்மீன்கள்(Royal Stars of Persia) என்று அழைக்கப்படுகின்றன.  

இக்காலத்தில் இரான்(Iran) என்றும் கிமு 3000 ஆண்டில் பெர்சியா என்றும் அழைக்கப்பட்ட நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் வானம் நான்கு பகுதியாக உள்ளதாகவும், அந்த பகுதிகளை மேற்கண்ட நான்கு விண்மீன்களும் காவல் புரிந்து வருவதாக நம்பினர். 
இந்த நான்கு விண்மீன்களும் நல்ல, தீய சக்திகளைக் கொண்டது எனவும் கருதினர். இந்த நான்கு விண்மீன்களையும் வானியல் சார்ந்த அறிவியல் கணக்கீடுகளுக்கு அவர்கள் பயன்படுத்தினர்.
 எகிப்தியர்கள் இதை செர்கெட்(Serket) என்ற தேள் பெண் கடவுளாக கருதி வழிபட்டனர்.


அண்டரெஸ் +0.96 தோற்றப் பொலிவெண் கொண்ட ஒரு சிவப்பு அரக்க விண்மீன். இது சூரியனிலிருந்து சுமார் 550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ரோகிணி(Aldebaran),சித்திரை(Spica) மற்றும் ரெகுலஸ்(Regulus) ஆகியவறைப்போல் இதுவும் சூரியனின் தோற்ற இயக்கப்பாதையின் அருகே 5o வேறுபாட்டில் அமைந்துள்ளது. 
அடிக்கடி சந்திரனாலும், எப்போதாவது ஒரு முறை வெள்ளியாலும்(Venus) மறைக்கப்படும். கடைசியாக கிமு 525 ஆண்டில் செப்டம்பர் 17 அன்று வெள்ளியால் மறைக்கப்பட்டது என்று பதிவிடப்பட்டுள்ளது. 

அண்டரெஸ் மிகவும் பருமனான, ஒளிர்வு மிகுந்த விண்மீன் என்று சுட்டப்படுகிறது. கிட்டத்தட்ட 12 மில்லியன் ஆண்டுகள் வயதான இவ்விண்மீன் சூரியனின் நிறையில் 15 முதல் 18 மடங்கு நிறையுடனும்,883 மடங்கு ஆரத்துடனும், 10000 மடங்கு பொலிவுடனும் அமைந்துள்ளது.  



அண்டரெஸ் விண்மீன் ஒரு பொலிவுமாறு (LC slow irregular)  விண்மீனாகும். இதன்தோற்றப் பொலிவு மெதுவாக ஆனால் சீரற்ற முறையில் +0.88 முதல் +1.16 வரை மாற்றம் அடைகிறது. 

இதன் கூட்டாளி விண்மீன் அண்டரெஸ் B, 529 வானியல் தொலைவு தள்ளி அமைந்துள்ளது.அண்டரெஸ் B +5.5 தோற்றப் பொலிவெண் கொண்ட ஒரு B வகை விண்மீன். இது சூரியனை விட 170 மடங்கு பொலிவானது. இதன் சுற்றுக் காலம் 878 ஆண்டுகள்.


அடுத்து வருவது சிக்மா ஸ்கார்பி(σ - Scorpii)

சிக்மா ஸ்கார்பி விண்மீன் அமைப்பின் ஒன்றுடட்ட தோற்றபொலிவு எண் +2.88. இது புவியிலிருந்து 568 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.அமைப்பின் பொலிவான விண்மீன் முழுவதுமாக அறியப்படாத ஒரு நிறமாலையியல் இருமை விண்மீன். இவை முறையே சிக்மா ஸ்கார்பி A மற்றும் சிக்மா ஸ்கார்பி B ( σ - Scorpii A , σ - Scorpii B) என்றழைக்கப்படுகின்றன.



இவை ஒன்றை ஒன்று 33.1 நாட்களில் சுற்றி வருகின்றன.

நிறமாலையியல் இருமை விண்மீன்களில் முதன்மையான விண்மீன் அதாவது சிக்மா ஸ்கார்பி A (σ - Scorpii A) B1 III வகை அரக்க விண்மீன்.

சூரியனின் நிறையைக் காட்டிலும் 18 மடங்கு நிறையும் 12 மடங்கு ஆரமும் உடையது. இது (பீட்டா செஃபீ) β-Cephei  வகை பொலிவு மாறும் விண்மீன். மற்றொரு விண்மீன் சிக்மா ஸ்கார்பி B(σ - Scorpii B) ஒரு B1 V வகை பிரதான வரிசை விண்மீன். 


இது தவிர மூன்றாவதாக 0.5 வில்வினாடி தள்ளி ஒரு விண்மீனும்  சிக்மா ஸ்கார்பி C (σ - Scorpii C), நான்காவதாக சிக்மா ஸ்காபி D (σ - Scorpii D) என்ற 20 வில்வினாடி தள்ளி இன்னுமொரு B9 வகையான, +8.7 தோற்றப் பொலிவெண் உடைய விண்மீனும் பிரதான இருமை விண்மீனைச் சுற்றி வருகின்றன.

கடைசியாக வருவது அல் நியாத்(Al Niyat) எனும் டவ் ஸ்கார்பி(τ Scorpii)

இந்த விண்மீன் ஹைட்ரஜன் இணைவு விண்மீன். மிகவும் வலிமையானதும் சிக்கலானதுமான காந்தப் புலத்தைக் கொண்டுள்ளது. B0.2V வகையைச் சார்ந்தது.
மிகவும் வெப்பமான சுரியனைப் போல 15 மடங்கு நிறையும் 6 மடங்கு ஆரமும் கொண்டது. புவிலிருந்து 470 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த சூரியனைக் காட்டிலும் 18000 மடங்கு பொலிவான இதன் தோற்றப்பொலிவெண் +2.82 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிக வெப்பம், அதிகமான பொலிவு மெதுவான இயக்கம் மற்றும் தெளிவான நிறமாலை காரணமாக டவ் ஸ்கார்பி வானியலாளர்களிடையே அதிகம் பிரபலமான விண்மீன் ஆக விளங்குகிறது.

Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)