விசாகம் விண்மீன் - ஆல்பா, பீட்டா, காமா மற்றும் ஐயொட்டா லிப்ரா (α, β γ and ι Librae) விண்மீன்கள்.

நமது விண்மீன்கள் வரிசையில் (16) அடுத்து வருவது விசாகம் மீன்குழு. 

விசாகம் விண்மீன் குழுவில் வருபவை துலா விண்மீன் (Libra Constellation) கூட்டத்தில் உள்ள ஆல்பா, பீட்டா, காமா மற்றும் ஐயொட்டா லிப்ரா (α, β γ and ι Librae) விண்மீன்கள்.


லிப்ரா விண்மீன் கூட்டம் (Libra constellation) பரப்பளவில் 29 வது இடத்தில் வருகிறது. இதன் பரப்பு 538 சதுர பாகைகள்(Square degree). தென் வான் அரைக் கோளத்தின் (SQ3) மூன்றாவது கால் பகுதியில் (Third  Quadrant) + 65oமுதல் - 90o வரையிலான அட்சங்களுக்குள் (Latitudes) இவ் விண்மீன் கூட்டத்தைக் காண இயலும்.



அருகில் உள்ள விண்மீன் கூட்டங்கள் சென்டாரஸ்(Centaurus)ஹைட்ரா(Hydra), லூபஸ்(Lupus), ஓஃபியாகெஸ்(Ophiuchus), விருச்சிகம்(Scorpio),கேபுட்(Caput) மற்றும் கன்னி(Virgo) ஆகியன.

கிரேக்கர்கள் இக் கூட்டத்தை தேளின் கூரான நகங்கள்(Scorpion’s claws) என்று அழைத்தது மட்டுமல்லாமல் இதனை விருச்சிக ராசியுடன் சேர்ந்ததாகக் கருதினர்.



 நன்றி : deanofspace.blogspot.com

வானில் துலா ராசி விண்மீன்களின் நிலை  முதலாம் நூற்றாண்டிலேயே ரோமானியர்களைப் பொருத்தவரை உறுதி செய்யப்பட்டு விட்டது. சந்திரன் துலாவில் இருந்த போது ரோம் உருவானது என்று சொல்லப்பட்டது.

 ரோமானியர்களுக்கு துலா ராசி மிகவும் முக்கியமானது. காரணம் சமச்சீரான பருவ நிலை மற்றும் இலையுதிர்கால சம இரவு நாள் (Autumnal Equinox) ஆகியவற்றை உடையது. கிபி 729 வரையில் சூரியன் துலா ராசியில் வரும் போதுதான் இலையுதிர் கால சம இரவு நாள் வந்தது. 

அதாவது வட அரைக் கோளத்தில் அக்டோபர் 21 தான் இலையுதிர்கால சம இரவு நாள் ஆக கிபி 729 வரையிலுமிருந்தது. புவியின் முந்து நிலை இயக்கத்தில் ஏற்பட்ட மாற்றம் (Precession motion of earth) இலையுதிர் கால சம இரவு நாள் இப்பொழுது கன்னி ராசிக்கு சூரியன் வரும் போது அதாவது செப்டம்பர் 21 வாக்கில் ஏற்படுகிறது. 


மொத்தம் 12 ராசிகள். மொத்த ஆண்டுகள் 25920
ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர ஆகும் காலம் 25960/12 = 2160 ஆண்டுகள். 

அல்லது மொத்தக் கோணம் 360o . மொத்தம் 12 ராசிகள். 
ஒரு ராசிக்கும் அடுத்த ராசிக்கும் கோண இடைவெளி 30

30 கோண இடைவெளியைக் கடக்க ஆகும் காலம் 2160 ஆண்டுகள்.
1 கோண இடைவெளியைக் கடக்க ஆகும் காலம் 2160/ 30 = 72 ஆண்டுகள்.


இதுவே 2889 (2160 + 729) இல் சிம்ம ராசிக்கு சூரியன் வரும் போது என மாற்றமடையும். அதாவது இன்னும் சுமார் 800 ஆண்டுகளில்ஆகஸ்ட் 21 க்கு சிறிது சிறிதாக சம இரவு நாள் மாற்றமடைந்து விடும். 

.




சுமார் ஒவ்வொரு 26000 ஆண்டுகளுக்கும் கீழ்க்கண்டவாறு இலையுதிர்கால சம இரவு நாளும், வசந்தகால சம இரவு நாளும் மெல்ல மெல்ல மாற்றமடைந்து ஒரு சுற்றை நிறைவு செய்யும். கீழே அட்டவணையாக தரப்பட்டுள்ளது.





ஒவ்வொரு மாதமும் 21 ஆம் நாள் புவிலிருந்து நோக்க சூரியன் இருப்பது போலத் தோன்றும் இராசி.
                                                                
                                     
                       
கிருஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே பாபிலோனியர்கள் இந்த விண்மீன்களை தராசுடன் தொடர்பு படுத்தி வானத்தின் தராசு( Balance of the heavens)  என்றழைத்தனர். 

பிற்காலத்தில் கன்னி ராசியின் டைக் (Dike) அல்லது ஆஸ்டிரியா (Astraea) என்றழைக்கப்பட்ட பெண் கடவுள் பயன்படுத்திய நியாயத்தராசு என்பது நிலைத்தது. விருச்சிக ராசியின் கூர் நகங்கள் (Scorpion’s claws) என்பது வழக்கொழிந்து போனது.

இனி சுவாதி விண்மீன் குழுவில் உள்ள விண்மீன்களை ஒவொன்றாகக் காணலாம்.

முதலில் வருவது ஆல்பா லிப்ரா(α -  Librae)

இது ஒரு பல விண்மீன்கள்(Multiple star system) அமைப்பாகும். இவ்விண்மீன் Zubenelgenubi என்றும் அழைக்கப்படுகிறது. அரபியில் இதற்கு தெற்கு கூர் நகம்( Southern Claw) என்று பொருள் படும்.லிபரா விண்மீன் கூட்டத்தின் இரண்டாவது பொலிவான விண்மீன். இது ஒரு இரட்டை விண்மீன். இரண்டு விண்மீன்களும் ஒரு பொதுவான இயக்கத்தை கொண்டுள்ளன.  இதன் பாதை சூரியனின் தோற்ற இயக்கப் பாதைக்கு (Ecliptic path)அருகில் அமைந்துள்ளதால்  சந்திரனால் அடிக்கடி மறைக்கப்படும் வாய்ப்புள்ளது. ஆனால் பிற கோள்களால் மறைக்கப்படும் வாய்ப்பு மிகவும் குறைவே.


ஆல்பா லிபரா(1) - இது சற்று பொலிவு மங்கிய விண்மீன். இது ஒரு நிற மாலையியல் இருமை விண்மீன். இதன் தோற்றப் பொலிவெண் +5.153 ஆகும். இதன் கூட்டாளி விண்மீனுடன் சுற்றிவர எடுக்கும் காலம் 5870 நாட்கள். ஒன்றைவிட்டு ஒன்று 10 வானியல் அலகு தொலைவில் அமைந்துள்ளன.புவிலிருந்து சுமார் 79.4 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது F4 வகை விண்மீன். 


ஆல்பா லிபரா(2) - இது சற்று பொலிவான விண்மீன். இதன் தோர்றப் பொலிவெண் +2.741. இதுவும் ஒரு நிறமாலையியல் இருமை(Spectroscopic Binary) விண்மீனே. ஆல்பா லிபரா(1) லிருந்து 5400 வானியல் அலகு தொலைவில் அமைந்துள்ளது. சூரியனிலிருந்து 75.8 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது A3 வகை விண்மீன்.


லிபரா KU என்பது ஆல்பா லிபரா விண்மீன் குழுவின் 5 வது உறுப்பினர். இது 1 பார் செக் தள்ளியே அமைவதால் மற்ற உறுப்பு விண்மீன்களுடன் ஈர்ப்பியல் ரீதியான பிணைப்பைப் பெற்றுள்ளது.


அடுத்து வருவது பீட்டா லிபரா( β - Librae)


இது Zubeneschamali  என்றும் அழைக்கப்படுகிறது. அரபி மொழியில் இதற்கு வடக்கு கூர்நகம்( Northern Claw) என்று பொருள். லிபராவின் மிகப் பொலிவான விண்மீன்.  தோற்றப் பொலிவு எண் + 2.61 கொண்ட இந்த விண்மீன் சூரியக் குடும்பத்திலிருந்து 185 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. சூரியனை விடவும் 130 மடங்கு பொலிவானது மற்றும் 4.9 மடங்கு ஆரம் கொண்ட இது ஒரு வெளுத்த நீல நிறமுடைய குள்ளன் (Blue-White Dwarf) 

B8 Vவகயைச் சார்ந்தது. மிகவும் வேகமாக, வினாடிக்கு 250 கிமீ வேகத்தில் சுழலக்கூடியது. இது தனித்த விண்மீன் என்று கருதப்பட்டாலும், இதன் பொலிவில் சிறிய மாற்றத்தைக் காண முடிகிறது. இதன் காரணமாக பீட்டா லிபரா விண்மீனை இரட்டை விண்மீனாகவும் கருத இடமுள்ளது. 


அடுத்தது காமா லிபரா(γ  Librae)


இது Zubenelakrab என்றும் அழைக்கப்படுகிறது. அரபு மொழியில் இதற்கு தேளின் கத்தரிப்பான்(Shears of Scorpion) என்று பொருள் கொள்ளலாம்.

இது சூரியக் குடும்பத்திலிருந்து சுமார் 152 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த, சூரியனை விட 2.15 மடங்கு நிறை மற்றும்71 மடங்கு பொலிவு உடையது. தோற்றப் பொலிவெண்+3.91 கொண்ட இது ஒரு K0 IIIவகை ஆரஞ்ச் அரக்க விண்மீன் ஆகும்.

கடைசியாக வருவது ஐயொட்டா லிபரா( ι Librae)

ஐயொட்டா லிபரா ஒரு B9 IV வகை விண்மீன். இது  விண்மீன் ஐயொட்டா (1) லிபரா மற்றும் ஐயொட்டா(2)லிபரா ஆகிய இரு கூறுகளை உடையது.


ஐயொட்டா (1) லிபரா ஒரு B9 வகை துணை அரக்க விண்மீன் மற்றும் ஒரு குள்ளன் சோடிகளைக் கொண்டது. புவிலிருந்து சுமார் 377 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.


ஐயொட்டா(1) ல் அமைந்த சோடிகளில் ஒன்று, ஒன்றையொன்று 23.47 ஆண்டுகளில் சுற்றி வருகின்றன.இவற்றின் ஒன்றுசேர்ந்த நிறை(Combined mass) சூரியனின் நிறையைப் போல 6 மடங்கு.தனித்தனியாக இவை 149 மற்றும் 94 மடங்கு சூரியனை விடவும் பொலிவானவை.


ஐயொட்டா(1) ல் அமைந்த மற்றொரு சோடி 10 மற்றும் 11 ஆம் எண் மதிப்பில் அமைந்த(Magnitude) G வகை குள்ளர்கள்.


ஐயொட்டா(2) ஒரு A3  வகை குள்ளன். சூரியனிடமிருந்து 240 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.






Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)