புனர் பூசம் - Castor (காஸ்டர்) , Pollux (போலக்ஸ்), புரோசியான் (Procyon), கோமெய்ஸா (Gomeisa) விண்மீன்கள்
புனர் பூசம் ( Punarvasu) விண்மீன் கூட்டம்
மிதுன ராசியிலுள்ள
(1) Castor (காஸ்டர்) எனப்படும் ஜெமினி ஆல்பா,
(2) Pollux (போலக்ஸ்) எனப்படும் ஜெமினி பீட்டா
(3) சிறு நாய் (Canis Minor) கூட்டத்தில் உள்ள புரோசியான் (Procyon) என்ற கேனிஸ் மைனர் ஆல்பா (Canis minor - Alpha) மற்றும் கோமெய்ஸா (Gomeisa) எனப்படும் கேனிஸ் மைனர் பீட்டா (Canis minor - Beta) ஆகிய விண்மீன்கள்
(1) அடங்கிய தொகுதியாகும்.
1)காஸ்டர் (CASTOR)
ஆல்பா ஜெமினோரம் அல்லது சுருக்கமாக ஆல்பா ஜெம் என்றழைக்கப்படும் இது இரவு வானில் மிதுன ராசியில் காணப்படும் இரண்டாம் பொவிவான விண்மீன் ஆகும். பேயர் முறையில் இதற்கு ஆல்பா குறியீடு தரப்பட்டிருந்தாலும் பீட்டா ஜெமினோரம் எனப்படும் போலக்ஸை (POLLUX) விடப் பொலிவு குறைந்தது. மிதுன ராசியின் இரட்டையர்கள் என்று காஸ்டரும் போலக்ஸும் அழைக்கப் படுகின்றன.
ஆனால் காஸ்டர் உண்மையில் மூன்று சோடி இரட்டை விண்மீன்களின் அமைப்பகும். ஒரு பொதுவான நிறை மையத்தைக் கொண்டு இயங்கும் சிக்கலான பல விண்மீன் அமைப்பாகும். வானில் நெருக்கமாக அமைந்த கட்புலனாகும் இரட்டை விண்மீன்களில் காஸ்டர் பொலிவு குன்றியும், போலக்ஸ் அதிகப் பொலிவோடும் விளங்கும். ஈர்ப்பு விசையினால் பிணக்கப்படாத ஆனால் பார்வைக்கோட்டில் அருகருகே அமைந்ததைப் போல் தோன்றும் இரு தனித்தனி விண்மீன்கள் காஸ்டரும் , போலக்ஸும் . காஸ்டர் தொகுப்பில் மட்டும் ஆறு (6) விண்மீன்கள் உள்ளன.
காஸ்டரும் போலக்ஸும் நவம்பர் கடைசி முதல் மே வரையிலான காலத்தில் வானில் நன்கு தெரியும் . ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாலை நேரங்களில் சூரியன் மறைந்த ஒரு மணி நேரத்திற்குப் பின் கீழ் வானில் தோன்றி, மாலை முழுவதும் உச்சத்தில் இருக்கும். சந்திரனின் பாதை இவ்விரு விண்மீன்களுக்கு அருகில் உள்ளதால் சந்திரனை அடையாளமாக வைத்து காஸ்டர் போலக்ஸ் விண்மீன்களை பிரித்தறிய முடியும். பொதுவாக ஜூன் 14 வாக்கில் சூரியன் காஸ்டரின் அருகில் வருவதால் அதற்குப் பல வாரங்கள் முன்பும் பின்பும் இதனைக் காண முடியாது. இருப்பினும் ஒரு ஆண்டில் பத்து மாதங்கள் கட்புலனாகும். காஸ்டர் புவிலிருந்து சுமார் 51 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. காஸ்டர் விண்மீன் தொகுப்பில் காணப்படும் ஆறு விண்மீன் களின் ஒட்டு மொத்த தோற்றப் பொலிவு எண் +1.58.
2) போலக்ஸ்(POLLUX)
பீட்டா ஜெமினோரம் அல்லது சுருக்கமாக பீட்டா ஜெம் என்றழைக்கப்படும் விண்மீன்.ஆரஞ்சு நிறமுடைய ,சூரியனிடமிருந்து 34 ஒளி ஆண்டுகள் தொலைவில், மிதுன ராசியின் வடப்புறக் கூட்டத்தில் சூரியனுக்கு அருகில் உள்ள அரக்க விண்மீன்.
போலக்ஸ் விண்மீனின் தோற்றப் பொலிவு எண் + 1.1 மதிப்புடையது. சூரியனை விட சுமார் இரு மடங்கு நிறையும் 9 மடங்கு விட்டமும் கொண்டது. தன் உட்புறம் எல்லா ஹைட்ரஜனையும் காலி செய்து விட்ட பின் ஆரஞ்சு அரக்க விண்மீன் ஆக உருவெடுத்துள்ளது. மேல் பரப்பு வெப்ப நிலை 4666 கெல்வின். ஹைட்ரஜன் ஹீலியம் தவிர பிற தனிமங்கள் சூரியனில் இருப்பதில் 85% முதல் 155% ஆக இருக்கலாமென்று மதிப்பிடப் படுகிறது. வானவியல் பிரிவில் K0 III வகை விண்மீன். போலக்ஸ் விண்மீனை ஒரு கோள் b (Thestias) சுற்றி வருவது 2006 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இக் கோள் நம் வியாழனை விட சுமார் 2.3 மடங்கு நிறையுடையது. கோளின் சுற்றுக் காலம் 590 நாட்கள்.
3)புரோசியான் ( Procyon) எனப்படும் கேனிஸ் மைனர் -ஆல்பா மற்றும்
கோமெய்ஸா(Gomeisa) எனப்படும் கேனிஸ் மைனர் பீட்டா
சிறு நாய் கூட்டம் (Canis Minor) வடக்கு வானில் காணப்படும் சிறிய விண்மீன் கூட்டமாகும். இந்த விண்மீன் கூட்டத்தின் பெயர் இலத்தின் மொழியிலிருந்து பெறப்பட்டது. ஓரியன் வேடனின் பின்னே செல்லும் இரு நாய்களில் ஒன்று பெரியது (Canis Major) மற்றொன்று சிறியது (Canis Minor). புரோசியான்(Procyon) என்ற ஆல்பா கேனிஸ் மைனரிஸ் மற்றது கோமெய்ஸா (Gomeisa) எனப்படும் இரண்டு விண்மீன்கள் மட்டுமே இத் தொகுப்பில் அடங்கும்.
புரோசியான்(Procyon) இரவு வானில் காணப்படும் எட்டாவது (8) பொலிவான் விண்மீன் ஆகும். இதன் தோற்றப் பொலிவெண் +0.34 கொண்ட இரட்டை விண்மீன்.
புரோசியான் A என்பது பிரதான வரிசை F5 வகை விண்மீன். இதன் கூட்டாளி புரோசியான் B என்பது ஒரு வெள்ளைக் குள்ளன் வகை விண்மீன்.
இதன் பொலிவுக்கு அதன் சுய ஒளிர்தல் காரணமில்லை. சூரியனுக்கு மிக அருகில் 11.46 ஒளி ஆண்டுகள் தொலைவிலமைந்திருப்பதே காரணமாகும். புரோசியான் விண்மீன் சிரியஸ்(Sirius) மற்றும் பெட்டல்ஜீஸ் (Betelgeuse) ஆகிய இரண்டுடன் சேர்ந்து குளிர்கால முக்கோணம் உருவாக்குகிறது. புரோசியான் விண்மீனை மாலை நேரத்தில் காண்பதற்கு குளிர் காலத்தின் கடைசி நாட்கள் சிறந்த காலம் ஆகும். புரோசியான் A சூரியனின் நிறையைப் போல் 1.5 மடங்கு நிறை, இரு மடங்கு ஆரம் மற்றும் 6.9 மடங்கு பொலிவும் கொண்டது. புரோசியான் B மிகச் சிறியது. இது சூரியனின் நிறையில் 0.6 மடங்கும் சுமார் 8600 கிமீ ஆரமும் கொண்டது.
கோமெய்ஸா (Gomeisa) என்ற கேனிஸ் மைனர் பீட்டா
கழுத்துப்பகுதியிலுள்ளது. பீட்டா கேனிஸ் மேஜர்(Canis Major - β) என்ற மிர்சம்(Mirzam) மற்றும் பீட்டா கேனிஸ் மைனர்(Canis Minor - β) என்ற கோமெய்ஸா (Gomeisa) ஆகிய இரண்டு விண்மீன்களையும் கட்டியக்காரர்கள் (Announcers) என்பர். காரணம் பெரிய விண்மீனான சிரியஸ் வானில் தோன்றுமுன் இவ்விரண்டு விண்மீன்களும் தோன்றுவதே.
இது ஒரு B 8 வகை பிரதான வரிசை விண்மீன். பொலிவு மாறும் விண்மீன். இதன் தோற்றப் பொலிவு எண் +2.89 என்றாலும் +2.84 முதல் +2.92 வரை மாறக் கூடியது. புவியிலிருந்து சுமார் 170 ஒளி ஆண்டுகள் தொலைவில் மிக வேகமாகச் சுழலும் இவற்றை கூடு விண்மீன்கள் என்றழைப்பர். இறுதியாக இந்து மதபுராணமான இராமயணத்தில் ஸ்ரீராமன் அவதரித்த விண்மீன் என்ற பெருமை படைத்தது புனர்பூசம் விண்மீன்.
Comments
Post a Comment