உத்திரம் எனப்படும் பீட்டா லியோனிஸ் (β - Leonis) மற்றும் 93 லியோனிஸ்
உத்திரம் விண்மீன்கள்
சிம்ம ராசியில் உள்ள முக்கியமான மற்றொரு விண்மீன் குழு உத்திரம் எனப்படும் பீட்டா லியோனிஸ் (β - Leonis) மற்றும் 93 லியோனிஸ் ஆகியன.சிம்ம ராசியில் காணப்படும் மூன்றாவது பொலிவான விண்மீன் டெனிபோலா (Denebola) என்றழைக்கப்படும் பீட்டா லியோனிஸ் ஆகும்.
இது புவிலிருந்து சுமார் 36 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள A வகை பிரதான வரிசை விண்மீன். தோற்றப்பொலிவு எண் + 2.14 கொண்ட இவ் விண்மீன் 1.78 மடங்கு சூரியனின் நிறை, சூரியனின் ஆரத்தில் 1.728 மடங்கும் உடையது. இது ஒரு பொலிவு மாறு விண்மீனாகும்.
இதற்கு டீனெப் அலசெட்(Deneb Alased) என்று அரபு மொழியில் பெயர் உண்டு.
அதற்கு சிங்கத்தின் வால்(Tail of the Lion) என்று பொருளுண்டு. பிளாம்ஸ்டிட்(Flamsteed) முறையில் 94 - லியோ (94 - Leo) என்றும் அழைக்கப்படுகிறது.
பீட்டா லியோனிஸ் சுமார் 400 மில்லியன் ஆண்டுகள் வயதே ஆன ஒரு இளமையான விண்மீன். தட்டைக் கோளுரு வடிவம் கொண்டது. இதன் வெளிப்புற வெப்ப நிலை 8500 கெல்வின் அளவில் உள்ளது. மிக அதிகமான தற்சுழற்சித் திசை வேகம் கொண்டது. அதாவது வினாடிக்கு 128 கிமீ. இங்கு சூரியனின் நடுக்கோட்டு (Equatorial velocity) சுழற்சி வேகம் 2கிமீ/வினாடி குறிப்பிடத்தக்கது.
வட அரைக் கோளத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுவாதி (Arcturus), சித்திரை (Spica) ரெகுலஸ் (Regulus) ஆகியன ஒரு வசந்த கால முக்கோண நாண்மீனை உருவாக்குகின்றன. அதே போல சுவாதி (Arcturus), சித்திரை (Spica) இரண்டும் பீட்டா லியோனிஸ் என்ற டெனிபோலா (Denebola) உடன் மற்றொரு வசந்த கால முக்கோண நாண்மீனையும் (Triangle Asterism) உருவாக்குகிறது.
அதே போல் இம் மூன்று விண்மீங்களும் கோர் கரோலி (Cor Carolie) விண்மீனுடன் சேர்ந்து பெரிய வைரம் நாண்மீன் (Asterism) உருவாக்குகிறது.
டெனெபோலோ எதிர்பார்ப்பை விட அதிக அகச் சிவப்பு கதிர்(Infrared Excess) கதிர்வீச்சை வெளியிடுகிறது. இதிலிருந்து விண்மீன்னைச் சுற்றி தூசும் வாயுக்களும் கொண்ட ஒரு குப்பை வட்டு(Debris Disk) அமைந்திருப்பது தெரியவருகிறது. இவ் வட்டு விண்மீனிலிருந்து 39 வானியல் தொலைவுக்கு (39AU) ஆரம் கொண்டது.
உத்திரம் விண்மீன் குழுவில் அடுத்ததாக வரும் விண்மீன் 93 லியோனிஸ்
(93 - Leonis). இதன் தோற்றப்பொலிவு எண் 4.54 என்பதைத் தவிர வேறு அதிகத் தகவல்கள் இல்லை. பொதுவாக சிம்ம ராசியினை வட அரைக் கோளத்தில் காணச் சிறந்த மாதங்கள் மார்ச் முதல் மே வரையிலான காலமாகும். சூரியன் மறைந்ததும் கிழக்கு அடி வானில் தோன்றும்.
Comments
Post a Comment