மேஷ ராசி - அசுவினி மற்றும் பரணி

மேஷ ராசி ஆங்கிலத்தில் ஏரீஸ் (ARIES) என்றழைக்கப்படுகிறது.
இதில் அடங்கியுள்ள விண்மீ்ன்களில் குறிப்பிடத்தக்கவை அசுவினியும் பரணியும்.

இந்த கட்டுரையில் தரவுகள் பல்வேறு மூலங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
எனவே கருத்துக்கள் சிறிதளவு மாறுபட்டிருக்கலாம்.

 




அசுவினி விண்மீனை தமிழில் இரலை, ஐப்பசி, யாழ், ஏறு, புரவி, பரி, சென்னி என்ற சொற்களால் திவாகர, சூடாமணி நிகண்டுகள் சுட்டியுள்ளன.
நம்ம தெருவின் இளவட்டப் பசங்களுக்கு, பக்கத்துத் தெரு கம்பியூட்டர் வகுப்புக்குப் போகும் அஸ்வினியோ தரணியோ சரியாக எப்போ வீட்டை விட்டு கிளம்பி எந்த வழியாக எப்பொழுது போவாள் என்பது தெரிந்தால் மிகவும் உபயோகமாயிருக்கும். பெட்டிக்கடையில் தவம் கிடக்க வேண்டாம் இல்லையா அது மாதிரி, சாதாரணமாக  இந்தமேஷ ராசி விண்மீன்களைப் பார்க்க சிறந்த காலம் தெரிந்தால் நாமும் விண்மீனைப் பார்க்க தவம் கிடக்க தேவையில்லை.

அதே மாதிரி அவள் தூரத்தில் மிக அழகாகவோ, சுமாராக தெரியலாம். பக்கத்தில் வந்தால் உண்மையான முகப்பொலிவு தெரியும் இல்லையா? அது போல் தான் இந்த தோற்றப்பொலிவு எண் மதிப்பு தரப்படுவதும். இது பற்றிய தகவல் கடைசியில் உள்ளது.
விண்மீன்களுக்கு அடையாளம் கொடுக்க இரண்டு முறைகள்  உள்ளன
1. பிளாம்ஸ்டீட் முறை 2. பேயர் முறை
பிளாம்ஸ்டீட் முறையில் விண்மீன் குழுமத்தின் ( Constellation) பெயருடன் எண் தரப்படும். (e.g: 35.Aries)
பேயர் முறையில் குழுமத்தின் ( Constellation) பெயருடன் கிரேக்க எழுத்து தரப்படும்.
(e.g: β - Aries)

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்கள். அதாவது சூரியனின் மறுபக்கம் பூமி அமையும் கால கட்டம். அக்டோபர் கடைசியில் இந்த விண்மீன் தொகுப்பு சூரியன் மறையும் போது கிழக்கிலும் நள்ளிரவில் உச்சத்திலும் காலையில் சூரியன் உதிக்கையில் மேற்கிலும் மறையும். நவம்பர்மற்றும் டிசம்பர் மாதங்கள் மேஷ ராசியை கிழக்கு தொடுவானில் முழு இரவும் பார்க்கலாம். மேஷ ராசி விண்மீன்  நவம்பர் மாத இறுதிகளில் இரவு 10 மணிக்கும், இரவு 8 மணிக்கு டிசம்பர் இறுதியிலும், மாலை 6 மணிக்கே ஜனவரி இறுதியிலும் உச்சத்தை அதாவது நடு வானுக்கு வரும். இது எல்லா கால பகுதிகளுக்கும் (Time Zone) பொருந்தும்.
ஏரீஸ் ஒரு அதிகம் பிரகாசமற்ற விண்மீன் தொகுப்பு என்பதால் மேக மூட்டமற்ற, அதிக தூசுகள் இல்லாத கிராமப்புற வானத்தில் அதுவுமே அமாவாசை நாளாக இருந்தால் பார்க்க எளிதாக இருக்கும்.


நிலவின் ஒளி இல்லாத இருண்ட இரவுகளில் ஆட்டின் தலைப் பகுதியில் உள்ள மூன்று விண்மீன்கள் ஹாமல், ஷரட்டன் மற்றும் மெசர்டிம் (Hamal, Sheratan and Mesartim) திடீரென்று யாரோ மங்கிய விளக்கை  தூண்டி விட்டது போல் பொலிவு அதிகரிகரிக்கக் காண முடியும். சிறிய தொலை நோக்கியால் உற்று நோக்க மெசர்டிம் ஒரு இரட்டை விண்மீன் என அறிய இயலும்.
ஆட்டின் தலையை எளிதில் அடையாளம் காண முடியும் . கிழக்கில் பிளீயட்ஸ் விண்மீன் கொத்தும் மேற்கில் பெகாசஸ் சதுக்கமும் நடுவில் மேஷராசியை அடையாளம் காணப் பயன்படும் இரு பெயர்ப் பலகையை போல் உள்ளன. ஆடு தன் தலையைத் திருப்பி பார்ப்பது போல் பிளியட்ஸ் விண்மீன் கொத்தை இரசிப்பது மாதிரி அமைப்பில் உள்ளது.


1)Hamal விண்மீன் தமிழில் அசுவினி


Hamal விண்மீன் தமிழில் அசுவினி என்றழைக்கப்படும் விண்மீன் ஆகும். இரவு
வானத்தில் காணப்படக்கூடிய 48 வது பிரகாசமான விண்மீன். சூரியனை விட இரு மடங்கு பெரியது. இது K - வகை ஆரஞ்சு அரக்கன் விண்மீன். அதாவது சற்று வயதான விண்மீன். பொலிவு மாறு விண்மீனான இதன் தோற்றப்பொலிவு எண்மதிப்பு (Visual magnitude) 1.98 மற்றும் 2.04 இடையே மாறுபடும்.

இந்த விண்மீன் சுமார் 66 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஒளி ஒரு வினாடியில் 3 இலட்சம் கிலோமீட்டர் தொலைவை ஒரு வினாடியில் கடக்கிறது.
இந்த வேகத்தில் பயணம் செய்தால் புவியிலிருந்து அசுவினி விண்மீனை அடைய சுமாராக 66 ஆண்டுகள் பிடிக்கும்.

ராஸ்-அல்-ஹாமல் என்ற அரபு சொற்றொடரிலிருந்து வழிவந்த பொருள் கொண்டது ஆட்டுக்குட்டியின்  தலை மேல் என்ற பொருள்படும் காரணத்தால் மேஷம்(ஆடு) எனப்படுகிறது.

2)ஷரட்டன் (SHERATAN) என்ற β-Arietis

Sheratan எனப்படும் மேஷம் பீட்டா , ஒரு வெள்ளை பிரதான வரிசை (Main sequence) நிறமாலை இரட்டை விண்மீன் (Spectroscopic Binary) மற்றும் அதன் துணை நிறமாலை ஒரு G வகுப்பு நட்சத்திரமாக இருக்கும் சந்தேகிக்கப்படுகிறது . 59.6 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஷரட்டனின் தோற்றப் பொலிவு அளவு கோலில் எண்மதிப்பு 2.64 ஆக உள்ளது. இதன் பெயர் அரபுச் சொற்றொடர் aš-šarāţān, “இரண்டு அறிகுறிகள் " என்பதிலிருந்து பெறப்படுகிறது. சில ஆயிரம் ஆண்டுகள் முன் வரையில் இந்த விண்மீன் மெசர்டிம் ( γ - Arietis ) Mesarthim விண்மீனுடன் சேர்ந்து ஒன்றாக கருதப்பட்டது அதனால் இப்படி பெயர் பெற்றது.
3) மெசர்டிம் (MESARTHIM) என்ற γ - Arietis

ஒரு மூன்று நட்சத்திர அமைப்பு . பெயர் காரணம் தெரியவில்லை .ஒரு கால கட்டத்தில் மேஷத்தின் முதல் விண்மீன் என்று குறிப்பிடப்பட்டது காரணம் கண்ணுக்குத் தெரிந்த வசந்த கால சம இரவு (vernal equinox) விண்மீன் ஆகயிருந்தது.காமா Arietis இரண்டு வெள்ளை A - வகை பிரதான வரிசை (Main Sequence) விண்மீன்களை கொண்ட இருமை நட்சத்திர (Binary) அமைப்பாகும். 7.7 வில்வினாடி (ARC SECOND) தள்ளியுள்ள இவற்றின் தோற்றப் பொலிவு எண் 4.75 லிருந்து 4.83 வரை உள்ளது. இதன் மூன்றாவது கூட்டாளி K - வகை விண்மீன். 221 வில் வினாடி தொலைவில் அமைந்துள்ள இதன் தோற்றப் பொலிவு எண் 9.6 ஆகும். இந்த அமைப்பு சுமார் 160 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. மிகப் பொலிவான கூறு ஆல்பா -2 Canum Venaticorum வகை பொலிவு மாறு விண்மீன், வலுவான காந்தப் புலம் மற்றும் வலுவான ஸ்ட்ரான்ஷியம் , குரோமியம் , அல்லது சிலிக்கான் நிறமாலை வரிகளுடன் கூடிய ஒரு வேதியியல் விசித்திரமான பிரதான வரிசை நட்சத்திரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. விண்மீனின்பொலிவு 2.61 நாட்களுக்கு ஒரு முறைகொண்டு 0.04 அளவு வேறுபடுகிறது.
4) பொடின்(Botein) என்ற δ - Arietis (Delta Arietis)
இதுவும் ஒரு K - வகை ஆரஞ்சு அரக்கன் விண்மீன். புவியிலிருந்து சுமார் 168 ஒளி ஆண்டுகள் தொலைவில்  உள்ளது. தோற்றப் பொலிவு எண் 4.35. இதன் விட்டம்  நமது சூரியனை விட 13 மடங்கு பெரியது. வயிறு என்ற பொருள் கொண்ட இதன் பெயர் அரபிச் சொல் Butain என்பதிலிருந்து பெறப்பட்டது

2) பரணி விண்மீன் தொகுப்பில் 35, 39, and 41 Arietis ஆகிய மூன்று விண்மீன்கள் உள்ளன.
35 எரிட்டிஸ் என்ற விண்மீன் சுருக்கமாக 35 Ari பிளாம்ஸ்டீட் மூலம் வட மேஷ விண்மீன் கூட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு இரட்டை விண்மீன்.
இது புவியிலிருந்து தோராயமாக 340 ஒளி ஆண்டுகள் (100பார்செக்) தொலைவில் உள்ளது. இந்த விண்மீனை வெறும் கண்ணால் காண இயலும். இதன் தோற்றப் பொலிவு எண் 4.64. இது ஒற்றை வரி நிறமாலை இரட்டை விண்மீன். கூட்டாளி விண்மீன் இருப்பதை முதன்மை விண்மீனின் நிறமாலை பெயர்ச்சி மூலமே அறிய முடியும். இவ்விரு விண்மீன்களும் ஒன்றை ஒன்று 490 நாள் கால அளவில் சுற்றிவருகின்றன. இது B வகை பிரதான வரிசை விண்மீன். இதன் பொலிவு சூரியனைக் காட்டிலும் 870 மடங்கும் , நிறை 5.7 மடங்கும் அதிகம்.
39 எரிட்டிஸ் என்ற விண்மீன் சுருக்கமாக 39 Ari பிளாம்ஸ்டீட் முறையில் (எண்களையும் விண்மீனங்கூட்டத்தின் பெயரையும் கொண்டு அடையாளப்படுத்துதல்) வட மேஷ விண்மீன் கூட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட ஒற்றை விண்மீன்.
இது புவியிலிருந்து தோராயமாக 172 ஒளி ஆண்டுகள் (53பார்செக்) தொலைவில் உள்ளது. இந்த விண்மீனை வெறும் கண்ணால் காண இயலும். இதன் தோற்றப் பொலிவு எண் 4.5. விண்மீங்களின் பரிணாம வளர்ச்சிப் பாதையில் தொடக்கத்தில் சூரியன் போலிருந்து தற்பொழுது உட்புறம் ஹீலியம் சேகரமாகும் சிவப்பு  அரக்க விண்மீன் நிலை. இது  K வகை விண்மீன். இதன் பொலிவு சூரியனைக் காட்டிலும் 56 மடங்கும் , நிறை 1.6 மடங்கும் அதிகம். ஆனால் இதன் வெளிபுற உறை விரிவடைந்து சூரியனை விட 11 மடங்கு ஆரத்துடன் விளங்குகிறது.
41எரிட்டிஸ் என்ற விண்மீன் சுருக்கமாக 41Ari ஒரு பிளாம்ஸ்டீட் முறையில் வட மேஷ விண்மீன் கூட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட இரட்டை விண்மீன். இதற்கு பேயர் முறை பெயர் (கிரேக்க எழுத்துக்கள் கொண்டு அடையாளப்படுத்தும் முறை (உ- ம் α Aries) கிடையாது. காரணம் இந்த விண்மீன் தற்சமயம் வழக்கற்றுப் போன Musca Borealis என்ற விண்மீன் குழுமத்தில் ஒரு காலத்தில் இருந்தது. சில சமயம் C எரிட்டிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. வெறும் கண்ணால் பார்க்கக் கூடிய இதன் தோற்றப் பொலிவு எண் 3.63. இந்த விண்மீன் நம் பூமியிலிருந்து 166 ஒளி ஆண்டுகள்(51பார்செக்) தொலைவில் உள்ளது. இதன் முதன்மை விண்மீன்
B - வகையைச் சேர்ந்தது. கூட்டாளி விண்மீன் 0.3 வில்வினாடி கோணவிலக்கம் பெற்றுள்ளது.
ஒளி ஆண்டு:
ஒளியானது ஒரு வினாடி நேரத்தில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து செல்லக்கூடியது. ஒளி ஓராண்டுக் காலத்தில் கடந்து செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு தூரம் ஆகும். அந்த கணக்குப்படி ஒளியாண்டு தூரம் என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர் தொலைவு ஆகும்.
வானியல் அலகு :
ஒரு AU என்பது சூரியனுக்கும் பூமியின் வட்டப்பாதைக்கும் இடையேயான சராசரித் தொலைவு ஆகும். ஒரு AU என்பது 14,95,97,871 கிலோமீட்டர்கள்.



தோற்ற ஒளிப்பொலிவெண் (Apparent magnitude) என்பது ஒரு வான்பொருள் ஒன்றின் அதன் பொலிவு அல்லது ஒளிர் திறனைப் பூமியிலிருக்கும் ஒரு பார்வையாளரால் அளவிட்டறியக் கூடிய ஒரு கூறு ஆகும்.  பார்வையாளர் ஒருவர் புவிலிருந்து காணும் போது தெரியும் அதன் ஒளிர்வு (பொலிவு) ஆகும். இது பூமியின் காற்று மண்டலத்தில் தூசு மற்றும் மேகம் இருப்பதால் இம்மதிப்பு தடைப்படும் என்பதால், இதை காற்று மண்டலத்திற்கு அப்பால் இருந்து மதிப்பிடுவார்கள். இம்மதிப்பு புவி வளிமண்டலத்தால் ஏற்படும் இடையூறைக் கருத்தில் கொண்டு சமப்படுத்தப்பட வேண்டும். ஒரு பொருள் பிரகாசமானதாயின் அதன் தோற்றப் பொலிவு மதிப்பு குறைவானதாக இருக்கும். விண்ணில் எல்லா விண்மீன்களும் ஒரே சமயத்தில் கண்களுக்குப் புலப்படுவதில்லை. முதலில் சூரியன் மறைந்தவுடன் தெரியவரும் விண்மீன்களை பிரகாசமிக்க விண்மீன்கள் என்றும் அதன் ஒளிப்பொலிவெண் முதல் நிலை என்றும் கூறுவர். பின்புல வெளிச்சம் குறையக் குறைய அடுத்தடுத்த பிரகாசமுள்ள விண்மீன்களும் தெரியவருகின்றன. இறுதியாகத் தெரியவருவது மங்கலான விண்மீன்களாகும். இவற்றின் ஒளிப்பொலிவெண் 6 எனக் கொள்ளப்பட்டுள்ளது. தோற்றப் பொலிவு மதிப்பு 6 வரை உள்ள பொருட்களை மட்டுமே நாம் நமது வெறும் கண்களால் காண முடியும். அதற்கு மேல் உள்ள பொருட்களை வெறும் கண்ணால் காண முடியாது. புவியில் இருந்து பார்த்தால் சூரியனின் தோற்றப் பொலிவு மதிப்பு –26.74 ஆகும். ஆனால் முழு நிலவின் குறைந்த பட்ச தோற்றப் பொலிவோ –2.50 ஆகும்.

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)