ஆயில்யம் விண்மீன் - ஹைட்ரா (Hydrae δ, ε, σ, η, ρ and ζ) விண்மீன்கள்

ஆயில்யம் விண்மீன் ( ஹைட்ரா δ, ε, σ, η, ρ மற்றும் ζ)



ஆயில்யம் விண்மீன் கூட்டம் நமது நட்சத்திர வரிசையில் ஒன்பதாவது விண்மீனாக கடகராசியில் அமைகிறது. ஆனால் உண்மையில் ஆயில்யம் விண்மீன் கூட்டம் என்பது ஹைட்ரா (Hydrae δ, ε, σ, η, ρ and ζ) என்ற ஆறு(6) விண்மீன்களின் தொகுப்பாகும். ஹைட்ரா என்றால் நீர்ப்பாம்பு (Water Snake) என்று பொருள் படும். இது ஹெர்குலிஸ் குடும்பத்து உறுப்பினர்.


இந்த பெரிய தொகுப்பின் தலையில் அமைந்த ஆறு (6) விண்மீன்கள் ஆயில்யம் என்று அழைக்கப்படுகிறது.(படம்) ஆயில்ய நட்சத்திரம் ஆஷ்லேசா என்று வட மொழியிலும் தமிழில் அரவு நாள், கௌவை, பாம்பு என்றும் வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட 88 விண்மீன் குழுக்களில் (Constellations) ஒன்று. இரவு வானில் கிட்டத்தட்ட 3.154% இடத்தை அடைக்கும் இருப்பினும் முழுவதுமாக உச்சத்தை அடைய ஏழு(7) மணி நேரம் எடுக்கும். இது ஹெர்குலிஸ் (Hercules family of constellations) குடும்பத்தில் அடங்கிய பத்தொன்பது (19) விண்மீன் குழுக்களில் ஒன்றாகும்.


இனி தனித்தனியாக இந்த ஆறு விண்மீன்களைப் பற்றிக் காண்போம்.
முதலில் வருவது டெல்ட்டா ஹைட்ரா ( δ - hydrae )
டெல்ட்டா ஹைட்ரா (δ - Hydrae) அல்லது டெல்ட்டா ஹயா ( δ Hya ) ஒரு A1 வகை விண்மீன் . தோற்றப் பொலிவு எண் +4.4  கொண்டுள்ள டெல்டா ஹைட்ரா பூமியில் இருந்து சுமார் 180 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள ஒரு இரட்டை(Binary) நட்சத்திரம். இது நம் சூரியனைப் போல் 1.5 மடங்கு ஆரம், 2.2 மடங்கு நிறை மற்றும்17 மடங்கு பொலிவானது. இலத்தீன் மொழியில் இந்த விண்மீன் பாம்பின் நாக்கு என்ற பொருள் படும் Lingua Hydri என்று மொழி மாற்றப்பட்டு அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அடுத்துவருவது எப்சிலன் ஹைட்ரா ( ε - hydrae )
எப்சிலன் ஹைட்ரா ( ε - hydrae )அல்லது எப்சிலன் ஹயா ( ε Hya ) ஒரு G5 வகை விண்மீன் . இது ஒரு இரட்டை தொகுப்பும்( ε Hya AB), மற்றொரு நிறமாலையியல் இரட்டையும் (ε Hya C)  மற்றும் (ε Hya D) ஆக குறைந்தது நான்கு விண்மீன்கள் உடையது.

(1) ε Hya AB  யில்  G5 வகையில் ஒன்று மற்றது F0 வகை.தோற்றப் பொலிவு எண் + 3.38  கொண்டுள்ள எப்சிலன் ஹயா (ε Hya) பூமியில் இருந்து சுமார் 129 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இவற்றின் சுற்றுக்காலம் 15 ஆண்டுகள். இரண்டும் 0.2 வில்வினாடி கோண பிரிகைகொண்டது.
(2) ε Hya C யின் தோற்றப் பொலிவெண் +7.5. நிறமாலையியல் இரட்டை விண்மீ்ன்களை தொலைநோக்கியால் பிரித்தறிய இயலாது. அவற்றின் நிறமாலையில் ஏற்படும் மாற்றத்தால் மட்டுமே உணர முடியும். இது ε Hya AB யிலிருந்து 3 வில்வினாடி கோண பிரிகைகொண்டது. இதன் சுற்றுக்காலம் 9.9047 நாட்கள். இது ε Hya AB யை சுற்றி வர 870 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்.
3) ε Hya D அமைப்பின் பிற உறுப்பினர்களுடன்  ஈர்ப்பியியல் பிணைப்பு கொண்டுள்ளது. ε Hya AB லிருந்து 19 வில்வினாடி பிரிகை கொண்டது. இதன் சுற்றுக்காலம் 10000 ஆண்டுகள்.
  இந்தத் தொகுப்பின் முதன்மை விண்மீன் ε Hya A ஒரு மஞ்சள் நிற G வகை அரக்க விண்மீனாகும். சூரியனைப் போல் 67 மடங்கு பொலிவானது.

அடுத்து வருவது சிக்மா ஹைட்ரா(σ - hydrae)
இது ஒரு K1 வகை விண்மீன். புவிலிருந்து 353 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இவ் விண்மீனின் தோற்றப் பொலிவு எண் +4.4. பாம்பின் நாசி என்ற பொருள் படும் அரபு மொழியிலிருந்து வழிவந்த மின்சிர் (Minchir) பெயர்  இந்த விண்மீனுக்கு உண்டு.

அடுத்த கதாபாத்திரம் ஹைட்ரா ஈட்டா ( Hydrae η)
தோற்றப் பொலிவு எண் + 4.30 என்பதைத் தவிர பெரிதாக இவ்விண்மீனைப் பற்றிய தகவல் எதுவுமில்லை.

அடுத்த கதாபாத்திரம் ஹைட்ரா ரோ ( Hydrae ρ)
தோற்றப் பொலிவு எண் + 4.34 என்பதைத் தவிர பெரிதாக இவ்விண்மீனைப் பற்றிய தகவல் எதுவுமில்லை.

இறுதியாக ஹைட்ரா ஸீட்டா ( Hydrae ζ )
Hyd ζ ஒரு தனித்த விண்மீன் தோற்றப் பொலிவெண் +3.10 கொண்ட இந்த விண்மீன் புவியிலிருந்து 167 ஒளி ஆண்டுகள் தொலைவிலும், உடன் பயணிக்கும் டெல்ட்டா ஹைட்ரா ( δ - hydrae ) விலிருந்து 12.9 ஒளி ஆண்டுகள் தொலைவிலும் ஊள்ளது. 400 மில்லியன் ஆண்டுகள் பழமையான G வகை மஞ்சள் அரக்க விண்மீனான இது சூரியனின் ஆரத்தைப் போல் 18 மடங்கு  ஆரம், 132 மடங்கு பொலிவு மற்றும் 4.2 மடங்கு நிறையும் கொண்டது.

 வட அரைக் கோளத்தில் ஜனவரி முதல் மேவரையிலான் காலம் ஆயில்யம் விண்மீன்கள் அடங்கிய ஹைட்ரா விண்மீன் குழுவைக் காணச் சிறந்த காலமாகும். இக் காலத்தில் ஆயில்யம் அதாவது ஹைட்ராவின் தலை கடகத்திற்கு (Cancer constellation)க்கு கீழாகவும் அதன் வால் துலாவிற்கு (Libra Constellation) அருகிலும் கன்னிக்கு (Virgo constellation) கீழாகவும் அமைந்துள்ளது.



Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)