பூரம் விண்மீன்கள் - δ மற்றும் θ லியோனிஸ் (δ and θ Leonis)

பூரம் விண்மீன்கள் - δ மற்றும் θ லியோனிஸ் (δ and θ Leonis)

சிம்ம ராசியில் உள்ள பூரம் இரண்டு விண்மீன்களைக் கொண்டது. அவற்றை  முறையே ஜோஸ்மா (Zosma) என்றும் செர்டன், சோர்ட் மற்றும் காக்சா (Chertan, Chort or Coxa) என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன.


பண்டைய கிரேக்கத்தில் ஜோஸ்மா (Zosma) என்றால் கச்சை (gridle) என்று பொருள்படும். இந்த விண்மீன் சிங்கத்தின் இடுப்பில் (hip of the lion) அமைந்துள்ளது.

தமிழில் பூரம் விண்மீனை எலி, கணை, இடை எழும் சனி, துர்க்கை, பகவதி, நாவிதன் என்றும், வட மொழியில் பூர்வ பல்குனி என்றும் அழைக்கப்படுகிறது.

அரபு மொழியில் செர்டன் (Chertan) என்றால் இரண்டு சிறிய விலா எலும்புகள் என்றும், சோர்ட் (Chort) என்றால் சிறிய விலா எலும்பு என்றும், காக்சா (Coxa) என்றால் இலத்தீன் மொழியில் இடுப்பு (Hip) என்றும் பொருள்படும்.



முதலில் டெல்ட்டா லியோனிஸ் (δ - Leonis) விண்மீனை பற்றிய விவரங்களைக் காணலாம்.

இது புவியிலிருந்து சுமார் 58.4 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள மிகச் சாதாரணமான A4 வகை முதன்மை வரிசை விண்மீன். இதன் தோற்றப் பொலிவெண் +2.56.

சூரியனுடன் ஒப்பிடும் போது நிறை 2.2 மடங்கும், ஆரம் 2.14 மடங்கும், சுமார் 15.5 மடங்கு பொலிவும் கொண்டது.

சூரியனை விட அதிக நிறை கொண்டதால், குறைந்த வாழ் நாளைப் பெற்றிருக்கும். வெள்ளைக் குள்ளனாக உருவெடுத்து சிதைவதற்கு முன் இன்னும் 600 மில்லியன் ஆண்டுகளில் ஆரஞ்சு அல்லது சிவப்பு அரக்க விண்மீனாக மாறிவிடும்.

ஜோஸ்மா (Zosma) மிக வேகமாகச் சுழலும் விண்மீன். வினாடிக்கு 180கிமீ வேகத்தில் சுழல்கிறது. இதன் சுற்றியக்கத்திசை வேகம்(Azimuthal velocity) சுமார் 280 கிமீ/நொடி. இதனால் இது தட்டைக் கோளுருவைக் (Oblate spheroidal shape) கொண்டுள்ளது. இதன் துருவஆரம் (Polar Radius), நடுக்கோட்டு ஆரத்தில் (Equatorial Radius) 84% தான் உள்ளது.


அடுத்து தீட்டா லியோனிஸ் (θ - Leonis) விண்மீனை பற்றிய விவரங்களைக் காணலாம்.

இது புவியிலிருந்து சுமார் 165 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள மிகச் சாதாரணமான A2 வகை முதன்மை வரிசை விண்மீன். இதன் தோற்றப் பொலிவெண் +3.324.

சூரியனுடன் ஒப்பிடும் போது நிறை 2.5 மடங்கும், ஆரம் 2.14 மடங்கும், சுமார் 141 மடங்கு பொலிவும் கொண்டது.


செர்ட்டன் (Chertan) சுமாரான வேகத்தில் சுழலும் விண்மீன். வினாடிக்கு 23கிமீ வேகத்தில் சுழல்கிறது. இது சூரியனை விட வயதில் குறைந்த விண்மீன். இதன் வயது சுமார் 500 மில்லியன் ஆண்டுகள்தான். 

இந்த விண்மீனிலிருந்து சற்று அதிகமான அகச்சிவப்பு கதிர் வீச்சு வெளியாவது தெரிகிறது. இதற்குக் காரணம் விண்மீனைச் சுற்றிலும் தூசுத்துகள் வட்டு இருக்கலாம் எனவும், இத்தகைய தூசு வட்டு 36 AU வானியல் அலகு (1AU என்பது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு) ஆரம் கொண்டதாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 



வட அரைக் கோளத்தில் மார்ச் கடைசி முதல் மே வரையிலான காலம் லியோ விண்மீன்களைக் காணச் சிறந்த காலமாகும். கிழக்கு லியோ விண்மீன்களான பீட்டா, டெல்ட்டா மற்றும் தீட்டா லியோனிஸ் β, δ and θ - Leonis) ஆகியன ஒரு முக்கோணத்தை உருவாக்குகின்றன.




ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ( சம இரவு நாட்கள்) முதல் மாலை நேரத்தில் இருள் கவியத்துவங்கும் பொழுதில் ஒரளவு தெளிவான  வானில் சிம்ம ராசி கிழக்கு வானில் தோன்றும். 

ஏப்ரல் மாதத்தில் கீழ் வானில் சூரியன் மறைந்த சிறிது நேரத்தில் தினமும் அதே இடத்தில் னாளொன்றுக்கு 4 நிமிடங்கள் முன்னதாகத் தோன்றும். ஏப்ரல் மாத தொடக்கத்தில் லியோ விண்மீன் கூட்டம் இரவு 10 மணியளவில் உச்சத்தை அடையும். படிப்படியாக அதிகாலை 4 மணியளவில் மேற்கு அடிவானில் மறைய துவங்கும். 

மே மாத தொடக்கத்தில் முன்னிரவு 8 மணி சுமாருக்கு உச்சத்தை அடைந்து பின்னிரவு 2 மணிக்கு மேற்கு அடிவானில் மறைய துவங்கும். 


பொதுவாகவே சிம்ம ராசி கிழக்கிலிருந்து மேற்காக நகர்ந்து செல்லும் 
என்பதால் ஜூன் மாதம் முதல் மாலையில் மேற்கில் இறங்குவதைக் காணலாம். ஜூலையின் பிற்பகுதி முதல் ஆகஸ்டு வரையில் சூரியன் மறையும் காலத்தில் சிம்ம ராசி கீழ் வானில் தோன்றுவதில்லை. இந்த நிலை செப்டம்பர் கடைசியிலிருந்து அக்டோபர் வரை நீடிக்கும். 

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)