ஹஸ்தம் என்ற α, β, γ, δ and ε -கோர்வி( corvi) விண்மீன்கள்
இரண்டாம் நூற்றாண்டில் “டாலமி” (Ptolemy) யால் வகைப்படுத்தப்
பட்ட ஹஸ்தம், நமது விண்மீன் குழு வரிசையில் 13 வதாக இடம் பெற்று உள்ளது.
ஹஸ்தம்(Hastham)
ஹஸ்தம் என்றால்
கரம். விநாயகனை “மோதக ஹஸ்த” அதாவது கொழுக்கட்டையை கரத்தில் கொண்ட என்ற பொருள் படச்
சொல்கிறோம். இந்த விண்மீன் குழு கர வடிவத்தில் ஐந்து (5) விண்மீன்களைக் கொண்டதாகும்.
தமிழில் இலக்கியங்களில் இந்த விண்மீன் குழுவை
ஐவிரல், கைம் மீன் , களிறு காமரம், அங்கிநாள், கௌத்துவம்,
நவ்வி, என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
கோர்வஸ் அளவில் சிறிய விண்மீன் கூட்டம். இதன் எல்லைக்குள்
தோற்றப் பொலிவெண் +6.5 அளவில் கொண்ட 29 விண்மீ்ன்கள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது.
தற்போது சுட்டப்பட்டுள்ள 88 விண்மீன்கள் பட்டியலில்
70 வது இடத்தில் உள்ளது. காரணம் இதன் வானில் அடைக்கும் பரப்பு 184 சதுர பாகைகள்தான்.
அதாவது வானில் 0.446% இடத்தில் பரவியுள்ளது.
கிரேக்க புராணத்தில் இது அப்பல்லோ (APOLLO) வின்
புனிதப் பறவை என்று குறிப்பிடப்படுகிறது. இது காகம் (Crow) அல்லது அண்டங்காக்கை(Raven)
என்ற பொருள் படும் கோர்வி (CORVI) என்றும் பெயரிட்டும் வழங்கப்படுகிறது.
இது குறித்து
இரு வகையான புராணக் கதைகள் உள்ளன.
முதல் கதையில் அண்டங்காக்கை (Raven) ஆரம்பத்தில்
வெள்ளையாகவே இருந்தது. அப்பல்லோவின் காதலியான குரோனிஸ் (Crononis) கருத்தரித்திருந்த
காலத்தில் அவளது நடவடிக்கைகளைக் கண்காணிக்க கோர்வஸை நியமித்திருந்தார். குரோனிஸுக்கு
அப்பல்லோவின் மீதான காதலில் ஆர்வம் குன்றியது. அவள் ஐசிஸ் (Ischys) என்ற மானிடனிடம்(Mortal)
காதல் வயப்பட்டாள். இதை கோர்வஸ் வெள்ளைக் காகம் அப்பல்லோவிடம் தெரிவித்தது. இந்தக்
காதலை தடுக்க முயலாத கோர்வசை , அப்பல்லோ கடும் சினத்துடன் பார்த்ததில் அதன் இறகுகள்
கரிந்து போய் அண்டங்காக்கையாக மாறியது. அப்பல்லோ கடவுள் குரோனிஸை தனது சகோதரி ஆர்டெமிஸ்
(Artemis) ஐ அனுப்பிக் கொன்றது. குரோனிஸின் உடலை எரிக்கு முன் அவளின் வயிற்றை கிழித்து
எடுக்கப்பட்ட குழந்தையே அஸ்கிலிபியஸ் (Asclepius). அஸ்கிலிபியஸை வளர்க்கும் பொறுப்பு
சிரான் விண்மீனிடம் (Chiron) ஒப்படைக்கப்பட்டது. அஸ்கிலிபியஸ் வளர்ந்து பெரிய மருத்துவன்
ஆகி ஒஃபியாகெஸ் (Ophiuchus) விண்மீன் கூட்டத்தில்
இடம் பெற்றுள்ளதாக கிரேக்க புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இரண்டாவது
புராணக் கதையில் தாகமாக இருந்ததால் அப்பல்லோ, குரோவஸை (Crovus) தண்ணீர் கொண்டு வர அனுப்பினார்.
தண்ணீர் எடுத்து வரும் வழியில் அத்திப்பழங்களைப் பார்த்த கோர்வஸ் கொத்தித் தின்ன ஆரம்பித்தது.
தண்ணீர் கொண்டுவரத் தாமதம் ஆனதற்கான உண்மைக் காரணத்தை மறைத்து ஹைட்ரா(Hydra) பாம்பு,
அதாவது ஆயில்யம் தன்னை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்ததாக பொய் சொன்னது. அதற்கு ஆதாரமாக
தன் கால் நகங்களில் பிடித்துக் கொண்டு வந்த பாம்பைக் காட்டியது. குரோவஸ் சொன்ன பொய்யை
அறிந்த அப்பல்லோ கோபமடைந்து ஹைட்ராவின் மேல் கோப்பை - பள்ளம் (Cup - Crater) விண்மீன்
கூட்டத்திற்கு எட்டாத தொலைவில் வைத்துவிட்டாராம். மேலதிகத்தண்டனையாக விண்ணுலகிலும் மற்றும் மண்ணுலகிலும் தாகத்துடனே அலைய சாபமிட்டாராம். இதனால் கிரேக்கர்கள் இதனை சந்தேகத்திற்குரிய
நம்பத்தகாத ராசியாக கருதுவர்.
(படம்1,2) இந்த விண்மீன் குழுவில் ஆல்பா, பீட்டா,டெல்ட்டா,காமா
மற்றும் எப்சிலன் கோர்வி( α, β, γ, δ and ε - corvi) ஆகிய விண்மீன்கள் அடங்கும்.
முதலில்
இந்த விண்மீன் குழுவின் நிலையைக் காணலாம்.
வட அரைக்கோளத்தில் மிகவும் கீழாகத் தெரியும் விண்மீன்
கூட்டம் ஆகும். கோர்வஸ் (Corvus) அதிகம் பிரபலம் இல்லாத விண்மீன் குழுவாகும்.
இந்த
விண்மீன் குழுவை ஜூன் மாதம் அடையாளம் காண கன்னி ராசியில் (Virgo constellation) உள்ள
மிகப் பொலிவான சித்திரை (Spica) விண்மீன் பயன்படுகிறது. சூரியன் மறைந்த ஒரு மணி நேரத்தில்
தெற்கே நோக்க வியாழன் (Jupiter) மற்றும் செவ்வாய் (Mars) இவை இரண்டிற்கும் நடுவே சித்திரை என்ற ஸ்பைகா (Spica) விண்மீன் தெற்கிலிருந்து தென் கிழக்காக வரையப்பட்ட கற்பனைக் கோட்டின் அருகில் இருக்கும்.
இரவில் நேரம் செல்லச்செல்ல ஸ்பைகாவிற்குக்கு கீழே வலது புறம் கோர்வஸ், கிரேட்டர் மற்றும் ஹைட்ரா ஆகியன கட்புலனாகும். வளி மண்டலத்தில் தூசு இருப்பினும் கோர்வஸில்
உள்ள இந்த ஐந்து (5) பொலிவு குறைந்த விண்மீன்கள் எளிதில் கட்புலனாகும். அருகில் உள்ள
விண்மீன் கூட்டங்கள் ஹைட்ரா (ஆயில்யம்), விர்கோ (கன்னி) மற்றும் கிரேட்டர்(பள்ளம்)
டெல்டா, காமா, எப்சிலான் மற்றும் பீட்டா கோர்வி விண்மீன்கள் படகின் பாய் மரத்துணி போன்ற
அமைப்பை பெற்றுள்ளது.
சித்திரை
என்ற ஸ்பைகா (Spica) வின் கடைசி பாய்மரத்தூண்(பொதுவாக படகின் முதன்மை பாய்மரத்திற்குப்
பின்புறம் காணப்படும் மூன்றாவது சிறிய பாய் மரத்தூண்) என்றும் அழைக்கப்படும்
முதலில்
வருவது ஜீனா (Gienha) என்ற காமா கோர்வி (γ - Corvi)
கோர்வஸ் விண்மீன் கூட்டத்தில் அதிகம் பொலிவான விண்மீன்
இதுதான்.
165 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த இதன் தோற்றப் பொலிவெண்
+ 2.59.
இது ஒரு இரட்டை விண்மீனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஜீனா என்ற பெயர் அரபி மொழியில்
காக்கையின் வலது இறகு என்று பொருள்படும். இது
ஒரு B8 வகையைச் சேர்ந்த அரக்க விண்மீன்.
அடுத்து இரண்டாவதாக வருவது கிராஸ்(Kraz) என்ற பீட்டா
கோர்வி(β - Corvi)
நமது சூரியனை விட 160 மடங்கு பொலிவான இந்த விண்மீன்
சுமார் 140 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. கோர்வஸ் கூட்டத்தில் காணப்படும் இரண்டாவது
பொலிவு றும் விண்மீன். இதன் தோற்றப் பொலிவு +2.6 முதல் 2.66 வரை மாறக் கூடியது. வெளிர்
மஞ்சள் நிற G வகை விண்மீன். தற்காலத்தில் இடப்பட்ட
கிராஸ் (KraZ) என்ற பெயரின் மூலம் என்னவென்று சரியாகத் தெரியவில்லை.
மூன்றாவதாக வருவது அல்கோரப்(Algorub) என்ற டெல்டா
கோர்வி( δ- Corvi)
இந்த விண்மீன் சுமார் 87 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
இதன் தோற்றப் பொலிவு +3.1. வெளிர் மஞ்சள் நிற A0 வகை விண்மீன். அரபி மொழியில் இடப்பட்ட
அல்கோரப் என்ற பெயர் காகம் என்று பொருள் உடையது.
அடுத்து நான்காவதாக வருவது மின்கர்(Minkar) என்ற
எப்சிலன் கோர்வி(ε- Corvi)
இந்த விண்மீன் சுமார் 303 ஒளி ஆண்டுகள் தொலைவில்
உள்ளது. இதன் தோற்றப் பொலிவு +3.02. K2 வகை விண்மீன். அரபி மொழியில் இடப்பட்ட மின்கர் என்ற பெயர்
காகத்தின் நாசி (Nostril of the Crow) என்று பொருள் உடையது.
ஐந்தாவதாக வருவது அல்சிபா(Alchiba) என்ற ஆல்பா கோர்வி
(α- Corvi)
இது கோர்வஸ் விண்மீன் கூட்டத்தின் 5 வது பொலிவான
விண்மீன். இதன் தோற்றப் பொலிவெண் +4.02. 48.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த இது சூரியனை விட நான்கு (4) மடங்கு பொலிவானது. ஆல்பா
என்ற பெயர் இருக்கும் மூன்றாவது பொலிவு குறைந்து விண்மீன் ( ஆல்பா முன்னிடு என்பது பொதுவாக கூட்டத்தின் மிகப் பொலிவான விண்மீனுக்கே
வழங்கப்படும்). F0 வகை விண்மீனான இதன் பெயரின்
பொருள் காக்கையின் அலகு (Beak) ஆகும். இது
இருமை (Binary star) விண்மீன் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நம் வரிசையில்
ஆறாவதாக வரும் விண்மீன் ஈட்டா கோர்வி (η- Corvi)
நம் சூரியனை விடச் சற்று இளமையான, நிறை அதிகமான விண்மீனான இது F2 வகை பிரதான வரிசையைச் சார்ந்தது.
59.4 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதன் தோற்ற்ப் பொலிவு எண் + 4.31. மிக அதிகமான
அகச் சிவப்புக் கதி வீச்சை வெளியிடும் காரணத்தால்
இதனைச் சுற்றி இரு குப்பை வட்டுக்கள்(Debris
disc) இருப்பதாகக் கருதப்படுகிறது. லைரா (Lyra) விண்மீன் கூட்டத்தில் உள்ள இன்னும்
15000 ஆண்டுகளுக்குப் பின் துருவ விண்மீனாக விளங்க்கப் போகும் வேகா(Vega) ஒத்த அமைப்புடையது.
இறுதியாக W - கோர்வி என்ற இரட்டை விண்மீன்
(Double star)kகாணல்ம். இது ஒன்றை ஒன்று 1.46 நாட்கள் சுற்றி வருகின்றன. சுமார்
280 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
ஆண்ட்டெனா விண்மீன் திரள்கள் (Antennae galaxies) என்ற ஆழமான வான் பொருட்கள்(Deep sky objects) களின் இல்லமாக விளங்குகிறது இந்த விண்மீன் கூட்டம். விசித்திரமான இதய வடிவத்தில் அமைந்த, தற்போது ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருக்கும் இரண்டு விண்மீன் திரள்களை(Galaxies) NGC 4038 மற்றும் NGC 4039 க் கொண்டுள்ளது. இந்த மோதலின் விளைவாக நீண்ட வால் போன்ற விண்மீன் தொடரையும், வாயுமற்றும் தூசுத்துகள் அடங்கிய பூச்சிகளின் உணர் கொம்புகளை(Insect antennae) ஒத்த அமைப்பு ஏற்பட்டுள்ளதை காண இயலுகிறது.இந்த விண்மீன் திரள்கள் நம்மிடமிருந்து சுமார் 45 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. பின்னொரு காலத்தில் நமது பால் வழிக் கூட்டமும் ஆண்டிரமெடாவும் (Milky way and Andromeda galaxies) மோதினால் நடக்கப் போகும் நிகழ்வுகளுக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
பின் குறிப்பு: இந்தக் கிரேக்க புராணக் கதைகளைத் தனியாக எழுதவே நினைத்திருந்தேன்.
ஆனால் இந்த கட்டுரைத்தொடரைஅதிகம் பேர் வாசிக்காத காரணம் வெறும் அறிவியல் தகவல்களாக
இருப்பதோ என்று தோன்றியது.
அதனால் இனிவரும் கட்டுரைகளில் தொடர்புடைய புராணக்
கதைகளையும் சேர்ப்பதால் படிப்பவர் எண்னிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறேன். இந்தப்
பகுதி தேவை இல்லை என்று கருதினால் கருத்து அளிக்கவும். நன்றி.
Comments
Post a Comment