எங்கட நினைவில் கடல் இல்லை - லோகேஷ் ரகுராமன்
நேற்று முகநூலில் எழுத்தாளர் திரு.லோகேஷ் ரகுராமன் அவர்களின் பக்கத்தை மேய்ந்து கொண்டிருந்தேன். அதில் "அந்தி மழை" மின்னிதழில் வெளியான கதையான "எங்கட நினைவில் கடல் இல்லை" கதைக்கான இணைப்பைக் கொடுத்திருந்தார். கதைக்கான இணைப்புக் கண்ணி இதோ கீழே தரப்படுகிறது. முதலில் கதையை முழுவதுமாகப் படித்த பின் என் பார்வையைப் படித்தல் நலம்.
https://www.andhimazhai.com/literature/short-stories/engada-ninaippil-kadal-illai
கதையில் பெங்களூரில் மென் பொருள் பொறியாளராக பணிபுரியும் ஒருவர் 200 கிமீ தூரம் தனது புல்லட் மோட்டார் சைக்கிளில் பயணித்து பலமனேரு குடியாத்தம் அருகே உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அருவியில் குளிக்கவும் ஓய்வெடுக்கவும் (அதாவது யாருடைய இடைஞ்சலுமின்றி மது அருந்த) வருகிறார். அப்போது அவரைப் போல மது அருந்த ஒரு லாரி ஓட்டுனர் ஒருவரும் அங்கே வருகிறார்.
இருவரும் நண்பர்களாக ஆகி ஒன்றாக மது அருந்துகின்றனர். முதலில் லாரி ஓட்டுனர் தன்னைத் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இரண்டு சுற்று மது உள்ளே சென்றதும் அவரது பேச்சு மொழி வேறுபடுகின்றது. இலங்கைத் தமிழில் பேசத் தொடங்குகிறார்.
அவரது தாத்தா 1983 - 1984 வாக்கில் சுமார் 60 பேரோடு கடல்வழியாக இலங்கையில் இருந்து நடந்தே 18 கிமீ தூரம் இரண்டு நாட்களில் பயணித்து தனுஷ்கோடிக்கு வந்ததாகச் சொல்கிறார். அது சாத்தியமானது இல்லை, லாரி ஓட்டுனர் போதையில் உளறுவதாகவே நம் மென் பொறியாளர் நினைக்கிறார். பல அகதி முகாம்களில் இருந்து தற்போது மின்னூர் அகதி முகாமில் இருப்பதாக குறிப்பிடுவார். அவர் தந்தை புழல் காவாங்கரை முகாமில் காதல் திருமணம் செய்து கொண்டாராம். லாரி ஓட்டுனர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவராம். இலங்கையைப் பார்த்ததே இல்லை என்கிறார்.
கடல் பிரித்தால் நாடு இரண்டாகி விடுமா என்ன? என்ற அவரது வினா சிந்தனையைத் தூண்டுகிறது. நான் இலங்கைக்குச் செல்லவும் விரும்பவில்லை. எங்களைப் பொறுத்தவரை எங்களுக்குக் கடல் இல்லை. இந்தியாவும் இலங்கையும் ஒன்றுதான் என்கிறார்.
அவர் தாத்தன் கடலை அறிந்தவர். கடலில் உருவாகும் மண் திட்டுகளின் மீதே நடந்து தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை தன்னுடன் வந்தவர்களைக் கூட்டி வந்தார் என்கிறார். நம்மூரில் கிணறு எடுக்கும் தொழிலாளர்கள் எங்களுக்குக் கல்லும் மண்ணும் உறங்கும் நேரம் தெரியும் என்பார்கள். அது போல அந்த லாரி ஓட்டுனரின் தாத்தனுக்கும் கடலில் எங்கே எப்போது மண் திட்டுகள் கடலுக்கு மேல் உருவாகும் என்று அறிந்திருப்பாரோ என்னவோ? தெரியவில்லை. ஆனால் இப்படி மண் திட்டுகள் வழியே கடலைக் கடக்கும் செயல் உயிராபத்தானது மட்டுமில்லை. இத்தகைய பயணங்கள் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
தனுஷ்கோடியில் இருகடல்கள் சங்கமிப்பதை அரிச்சல் முனையில் காண முடியும். கடல்கள் சங்கமம் ஆகும் இடங்களில் மணல் திட்டுகள் உருவாகும். ஆனால் அவை நிரந்தரமாக இருக்காது. இடம் மாறியவாறு இருக்கும்.
இரண்டு கடல்கள் (அல்லது கடலும் நதியும்) சந்திக்கும் இடங்களில் ஏற்படும் நீரோட்ட மாற்றம் மற்றும் அலைகளின் படிவித்தல் (wave deposition) காரணமாக உருவாகும் மணல் திட்டுகள் மணல் திடை (Sandbars) அல்லது மணல் திட்டுகள் (Spits) என்று அழைக்கப்படுகின்றன.
இதற்கு உள்ளூர் எடுத்துக்காட்டாக விளங்குவது தனுஷ்கோடி. இந்தியாவின் தென்கிழக்கு முனையான தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை இராமேஸ்வரத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு வங்காள விரிகுடாவும், இந்தியப் பெருங்கடலின் மன்னார் வளைகுடாவும் சங்கமிக்கின்றன.
இந்த சங்கமப் பகுதியில் கடல் நீரோட்ட மாற்றங்கள் காரணமாகக் கடலின் நடுவே புதிய மணல் திட்டுகள் உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் மணல் திட்டுகளில் ஆயிரக்கணக்கான கடல் புறாக்கள் ( SEA GULLS) மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் குவிந்து இளைப்பாறுகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் அரிச்சல் முனைக்கு நான் சென்றிருந்தபோது, காவலர்கள் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் கடலில் வெளியே தெரியும் மண் திட்டுகளை நோக்கி கடலுக்குள் இறங்கி நடந்து செல்லும் பராக்கிரமசாலி சுற்றுலாப் பயணிகளைக் கண்டிருக்கிறேன்.
லோகேஷ் ரகுராமன் பல அறிவியல் செய்திகளை தன் கதைகளில் கோடிட்டுக் காட்டி வாசகனை மேற்கொண்டு அது பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவலைத் தூண்டி விடுவார். அவரது கதைகளில் எனக்குப் பிடித்த அம்சம் அதுதான். ஒரு நல்ல கதாசிரியரால் மட்டுமே கதையுடன் பிணைத்து அறிவியல், வரலாறு அல்லது நிலவியல் சார்ந்த செய்திகளைத் தர முடியும். அதை லோகேஷ் ரகுராமனால் எளிதாகச் செய்ய முடிகிறது.
அறிவியல் ரீதியாக மணல் திட்டுகள் மீதாகவே நடந்து இலங்கையில் இருந்து இந்தியா வர வாய்ப்பு இல்லை என்றாலும், என்னைப் பொறுத்தவரை கடலில் மணல் திட்டுகள் மீதாகவே நடந்து இலங்கையில் இருந்து இந்தியா வர மெல்லியதோர் வாய்ப்பிருப்பதை மறுக்க இயலவில்லை.
சற்று நேரம் உறங்கிய பின் போதை தெளிந்து அருகிலுள்ள சுனையில் இருவரும் நீச்சலடித்து பொழுது போக்குகின்றனர். அப்போது பெரிய தங்க முதுகுத் தவளை நம் மென் பொறியாளர் கை மீது விழுகிறது. இந்தத் தவளை இனம் இலங்கை மற்றும் இந்தியாவில் மட்டுமே காணப்படும் அபூர்வமான உயிரினம்.
இலங்கைக்கு மட்டுமே சொந்தமானது என இதுவரை நம்பப்பட்ட தங்க முதுகு தவளை (Hylarana gracilis) இனம், இந்தியாவின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் தென்பட்டுள்ளது. வியக்கத்தக்க கண்டுபிடிப்பாக, இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இரண்டு தவளை இனங்கள் இந்தியாவின் மலைத்தொடர் ஒன்றில் செழித்து வாழ்வதை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். இதற்கு முன்னர் இந்தியாவில் அறியப்படாத இலங்கை தங்கமுதுகுத் தவளை ( Hylarana gracilis ) மற்றும் இலங்கை புதர் தவளை (Pseudophilautus regius ) ஆகியவை கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் கண்டறியப்பட்டுள்ளன. இந்திய விலங்கியல் ஆய்வகம் (ZSI) மற்றும் ஆந்திரப் பிரதேச பல்லுயிர் வாரியத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழு இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியது.
இந்த இரண்டு இருவாழ்விகளும் புதிய இனங்கள் அல்ல, ஆனால் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் அவற்றின் இருப்பு, இலங்கையுடனான அப்பகுதியின் தொன்மையான தொடர்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பெருநிலப்பரப்பிற்கும் இலங்கைக்கும் இடையில் காடுகளைக் கொண்ட ஒரு நிலப்பாலம் இருந்திருக்கலாம். அதன் வழியாக இந்தத் தவளைகள் பரவியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
தங்க முதுகுத் தவளைகள் குறித்த இந்த அறிவியல் தகவலும் கதைக்குள் நேரடியாக வந்து விடுகிறது. ஆக கதையில் வரும் லாரி ஓட்டுனர் சொல்வது போல் கடல் நிலத்தைப் பிரித்து இரண்டு நாடாக ஆக்க முடியாது என்ற கூற்று சரியே என்று எனக்குப்படுகிறது.
நல்ல விஷயங்கள் பலருக்கும் தெரிய வேண்டும் என்பதே என் விருப்பம். அதனால்தான் என் பார்வையில் கதையை உங்களுக்கு வழங்குகிறேன்.
மீண்டும் சந்திப்போம்.

லோகேஷ் அவர்களின் கதையும் நன்றாக இருந்தது உங்களுடைய கமெண்ட்ரியும் நன்றாக இருந்தது நிறைய அறிவியல் தகவல்கள் இருந்தது. நானும் அந்தி மழை பத்திரிக்கைக்கு சப்ஸ்கிரைப் பண்ணி விட்டேன் நன்றி
ReplyDeleteஎன் பொழுதுபோக்கு புத்தகம் படிப்பதுதான். படித்த நல்ல கதைகள் கட்டுரைகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்வேன்.
Deleteஅந்த அரிசி மூட்டை கதையையும் மறுபடியும் ஒரு தரம் படித்து புரிந்து கொண்டேன் 😃
ReplyDeleteதன்னெஞ்சறிவது பொய்யற்க மொய்த்த பின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்.
ReplyDeleteமனதறிந்து பொய் சொன்ன கடைக்காரர் இறுதியில் அந்த 10 கூலோ அரிசிக்கு மாற்றித் தர மறுப்பதுடன் பொய் சொல்லி ஏமாற்றுகிறார்.ஆனால் அவருக்கு நஷ்டமானது ஒருமூட்டை அரிசி.
இதுதான் இறைவன் தீர்ப்பு.