கண்டதும் களித்ததும் - பகுதி 13 (புனே பயணக் கட்டுரைகள்)
பர்வதிக் குன்றுகள் இருநூற்று எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் புனே நகரத்தின் கண்கவர் இடங்களில் ஒன்றாகத் திகழும் இடம் பார்வதி அல்லது பர்வ திக் குன்றுகள் (Parvati Hills). நாம் பார்வதி என்றழைத்தாலும் உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் “பர்வதி” என்றே அழைக்கிறார்கள். ஒருவேளை பர்வதராஜ குமாரி என்பதால் பர்வதி என்கிறார்களோ என்னமோ? புனே நகரத்தை கிட்டத்தட்ட முழுமையாக ஒரே கண் வீச்சில் காண விரும்புபவர்களுக்குப் பார்வதிக் குன்றுகள் நல்லதோர் தேர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை. காரணம் புனே நகரின் இரண்டாவது மிக உயர்ந்த பகுதி இதுதான். கடல் மட்டத்திலிருந்து சுமார் 650 மீட்டர் அல்லது 2400 அடி உயரத்தில் பார்வதி குன்றின் உச்சி அமைந்துள்ளது. சாலையிலிருந்து 103 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். படிகள் சரிந்த வாக்கில் மேலேறும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. பர்வதிக் குன்றுக் கோவில் வளாகத்தில் ஆட்சி செலுத்தும் முதன்மைத் தெய்வமான பார்வதி தேவி நோய்களைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டவள் என்று சொல்லப்படுகிறது. 1740 ஆண்டில், கால் தொடர்பான நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நானாசாகேப் பேஷ்வாவின்...