வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (3)

அண்டத்தின் அளவு கோல்


விண்மீன்கள் பொலிவாகவும்,பொலிவு குன்றி மங்கலாகவும் தோன்றுகின்றனவே அதற்குக் காரணம் என்ன? இவ்வினாவிற்கு ஒரே பதில் தூரம் என்பதே.புவியிலிருந்து காணும் விண்மீன்களின் பொலிவு அவை புவியிலிருந்து அமையும் தொலைவைச் சார்ந்து அமைகிறது.இப் பொலிவு தோற்றப் பொலிவு (Apparent Brightness) என்று அழைக்கப் படுகிறது.ஆனால் அதன் மெய்யான பொலிவு (Absolute Brightness) என்பது வேறாகும். 


எடுத்துக்காட்டாக சற்று அதிகத் தொலைவிலிருந்து பெறப்படும் அதிகப் பொலிவுள்ள ஒளியை விட, மிக அருகிலிருந்து பெறப்படும் பன் மடங்கு பொலிவு குறைந்த ஒளி, பொலிவு மிக்கதாகத் தோன்றுவதைக் குறிப்பிடலாம். 
எதிர் விகித இருமடி விதிப்படி, ஒளிச் செறிவு (I),  தொலைவின் இருமடிக்கு  எதிர்த்தகவில் அமையும். இதனைக் கீழ்க்காணும் படத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.





எனவே அதிகப் பொலிவான விண்மீன்,புவியிலிருந்து மிகத் தொலைவில் இருப்பின் பொலிவு குன்றியும்,குறைந்த பொலிவு கொண்ட விண்மீன் புவிக்கு அருகிலிருப்பதால் மிகப் பொலிவாகவும் தோன்றும் என்பதே சரியாகும். 
எனவே நாம் காணும் ஏதேனும் இரு விண்மீன்களில் ஒன்று அதிகப் பொலிவுடனும் மற்றது குறைந்த பொலிவுடனும் காணப்பெறின், இவ்விரண்டில் உண்மையில் எதுஅதிகப் பொலிவுடையது? எது குறைந்த பொலிவுடையது? என்பதை, ஒரு திட்ட அளவீட்டுத் தொலைவிலிருந்து( Standard Distance) இரண்டையும் அளவிட்டே தீர்மானிக்க முடியும். அவ்வாறு இல்லை என்றால் குறைந்த செறிவான பொருள் குறைந்த தொலைவில் இருப்பதால், அதிகப் பொலிவாகவும், அதிகச் செறிவான பொருள், அதிகத் தொலைவில் இருப்பதால் குறைந்த பொலிவுடனும் தோற்றம் தரும். இதனை பின்வரும் படம் நன்கு விளக்கும்.



வானியலாளர்கள் விண்மீன்களின் பொலிவு குறித்து இரு வேறு வகையான அளவீடுகளைப் பயன்படுத்துகின்றனர்.
1. தோற்றப் பொலிவு மதிப்பு
2. மெய்யான பொலிவு மதிப்பு
1. தோற்றப் பொலிவு மதிப்பு என்பது புவியிலிருந்து காணும் போது அளவிடப்பட்ட விண்மீனின் பொலிவு ஆகும்.
2. மெய்யான பொலிவு மதிப்பு என்பது ஒரு திட்ட அளவீட்டுத் தொலைவிலிருந்து அளவிடப்பட்ட விண்மீனின் பொலிவு ஆகும்.
முதன்முதலாக விண்மீன்கள் அமையும் தொலைவை அளவிட முயற்சி மேற்கொண்டவர் ஆங்கில இயற்பியலாளர் சர்.ஐசக் நீயூட்டன் ( 1642 - 1727 ) ஆவார்.


இக் கால கட்டத்தில் நமது கதிரவனும், ஒரு அதிகப் பொலிவு இல்லாத சாதாரண விண்மீன் என்று அறியப்பட்டிருந்தது.
அதற்கு முன்பாகவே 1543ல் போலந்து நாட்டைச் சேர்ந்த வானவியலாளர் நிக்கோலஸ் கோப்பர் நிகஸ்( 1473 - 1543 )



தனது “கதிரவக் குடும்பம்” என்ற புத்தகத்தில் எல்லா விண்மீன்களும், உண்மையில் நமது கதிரவனை விட அளவில் மிகப் பெரிய கதிரவன்களே என்றும், அவையனைத்தும் புவியிலிருந்து நம் கதிரவன் உள்ள தொலைவை விட அதிகத் தொலைவில் அமைந்திருப்பதாலேயே சிறியதாகத் தோன்றுகின்றன என்றும் குறிப்பிட்டார்.
 நமது கதிரவனை அது தற்போது புவியிலிருந்து அமையும் தொலைவைப் போல் கிட்டத்தட்ட 250,000 மடங்கு தொலைவுக்குத் தள்ளி வைத்தால், அதுவும் சாதாரணமான பொலிவுடைய விண்மீனாகவே இருக்கும் என சர்.ஐசக் நியூட்டன் கூறினார்.கொள்கை அடிப்படையில் சர்.ஐசக் நியூட்டன் கூறியது சரி என்றாலும், 250,000 மடங்கு தொலைவு என்பது சரியான மதிப்பை விடப் பன் மடங்கு குறைவாக இருப்பது நம்மால் இன்று அறியப்பட்டுள்ளது. மிக அதிகத் தொலைவை மதிப்பிடஒரு எளிய வழி உள்ளது.


Picture courtesy : http://starrynight.drupalgardens.com
இம் முறையில் இரு வெவ்வேறு இடங்களிலிருந்து, அதிகத் தொலைவில் உள்ள ஒரு நிலையான பின்புலத்தில் அதைவிடச் சற்று குறைந்த தொலைவில் உள்ள பொருள் ஒன்று நோக்கப் படுகிறது.அப்போது அப் பொருளின் நிலையில் ஏற்படும் சிறிய மாற்றம் மதிப்பிடப் படுகிறது. இதிலிருந்து அப் பொருள் அமையும் தொலைவு நிர்ணயிக்கப்படுகிறது.
இதனைக் கீழ்க்கண்ட ஒரு எளிய சோதனை மூலம் அறிந்து கொள்ள முடியும்.
உங்கள் முன், கண்களிலிருந்து சற்றுத் தொலைவில் ஒரு பென்சிலை வலது கையால் பிடித்துக் கொள்ளவும்.எதிரில் உள்ள ஏதாவது அடையாளப் பொருளுக்கு  அருகே பென்சில் அமையுமாறு நிலைப்படுத்திக் கொள்ளவும். எடுத்துக்காட்டாக தொலைவில் உள்ள தனித்த வீடொன்றை இடது கண்ணால் மட்டும் பார்த்தால் பென்சில் அடையாளப் பொருளுக்கு வலது புறம் நகர்ந்திருப்பது போலத் தோன்றும்.


Image courtesy : http://www.astronomygcse.co.uk

இப்பொழுது வலது கண்ணால்மட்டும் பார்த்தால் பென்சில் அடையாளப் பொருளுக்கு இடது புறம் நகர்ந்திருப்பது போலத் தோன்றும்.கண்ணிலிருந்து பென்சில் பிடிக்கப்பட்ட தொலைவை அதிகரிக்க அதிகரிக்க இந்த இடப் பெயர்ச்சி குறைந்து கொண்டுவருவதையும் உணரலாம்.நமது கண்களுக்கிடையே தூரம் மற்றும் பென்சிலின் தோற்ற இடப் பெயர்ச்சியையும் அளவிட முடிந்தால் பென்சில் கண்ணிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என கணக்கிட முடியும். இம் முறை இடமாறு தோற்ற முறை(PARALLAX METHOD) என்றழைக்கப்படுகிறது. இம்முறையில் பெறப்படும் தோற்ற இடப் பெயர்ச்சியை சிறு கோண அளவிலும், இடமாறு தோற்றக் கோணம் (PARALLAX ANGLE) குறிப்பிடலாம்.நோக்கப்படும் பொருளின் தொலைவு அதிகரிக்க அதிகரிக்க இடமாறு தோற்றக் கோணம் குறையும். இடமாறு தோற்றக் கோண மதிப்பு பார்வையாளரின் இரு நிலைகளுக்கு இடைப்பட்ட தூரத்தையும் சார்ந்தது. 
ஒரே பொருளுக்கு பார்வையாளரின் இரு நிலைகளுக்கு இடைப்பட்ட தூரம் அதிகரித்தால் இடமாறு தோற்றக் கோணம் அதிகரிக்கும். பண்டைய வானியலாளர்கள் விண்மீன்களின் தொலைவை அளவிட இம்முறையைப் பயன் படுத்தினர்.ஆனால் இம் முறையில் புவியின் மேல்அதிகத் தொலைவிலிருக்கும் இரு இடங்களின் தொலைவு கூட மிகச் சிறியதே ஆகும்.புவிக் கோளத்தில் ஒன்றுக்கொன்று எதிரான இரு இடங்களுக்கிடையிலான தூரம் சுமார்12,700 கிலோமீட்டர் என்றாலும், இது கூட விண்மீனின் இடமாறு தோற்றக் கோணத்தை அளவிட குறைந்த தொலைவே ஆகும்.


தொடரும்.....

Comments

Post a Comment

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)