வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (12)
இந்த அத்தியாயத்தில் பொலிவு மாறு விண்மீன்கள் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம். மாற்றம் என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாதது. அது போலவே விண்மீன்களின் வாழ்விலும் மாற்றங்களைத் தவிர்க்க இயலாது. கதிரவனை ஒத்த விண்மீன் அல்லது அதை விடச் சற்று அளவில் பெரிய விண்மீன் தனது எரிபொருள் இருப்பு குறைந்ததும், தனது வடிவில் பல மடங்கு பெரியதாக சிவப்பு அரக்கனாக மாற்றமடைகிறது. இறுதியில் வெள்ளைக் குள்ளனாக புவியின் அளவுக்கு வடிவத்தில் குறைந்து, மிக அடர்த்தியான பொருளாக மாற்றமடைந்து பின் மறைகிறது. இக் கால கட்டங்களில் விண்மீனின் பொலிவு முதலில் உயர்ந்தும் பின் குறைந்தும் மாற்றமடைகிறது. ஆனால் பொலிவில் ஏற்படும் இம் மாற்றங்கள் விண்மீனின் பிறப்பின் பொழுது அது அமையும் நிறையைப் பொருத்து பல மில்லியன் அல்லது பல ஆயிரம் மில்லியன் ஆண்டு கால அளவிலேயே ஏற்படுகிறது. ஆனால் சில விண்மீன்கள் தனது பொலிவில் சிறிய கால அளவுகளிலேயே மாற்றமடையும் என்று முன்னரே சொல்லியிருந்தோம். பொலிவில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் சில மணி, சில நாள் அல்லது சில மாதங்களில் கூட நிகழ்வதையும் அறிவோம். இத்தகைய பொலிவு மாறு விண்மீன்கள் ...