வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (10)
மனிதக் குழந்தைகளைப் போலவே விண்மீன்களும் வெவ்வேறு அளவில் பிறக்கின்றன. சில சிறியதாகவும் சில அளவில் பெரியதாகவும் சில நடுத்தரமான அளவிலான நிறையுடனும் பிறக்கின்றன. மனிதக் குழந்தைகளில், பிறக்கும்பொழுது அதிக நிறையுடன் பிறக்கும் குழந்தை, பிற்காலத்தில் ஆரோக்கியமான அதிக ஆயுளுடன் வாழும் என்று கருதப்படுகிறது. ஆனால் இதற்கு எதிர் மறையாக அதிக நிறையுடன் பிறக்கும் விண்மீன் குறைந்த ஆயுளையே பெறும். முதற் கண்ணோட்டத்தில் மேற் கூறிய கருத்து வினோதமாகத் தோன்றினாலும் ,எளிதில் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். மனிதர்களில் , ஒரு சிசு அதன் பிறப்புக்குப் பின்னர், வளர்ச்சி பெறத் தேவைப்படும் உணவை ஆயுட் காலம் முழுவதும் வெளியிலிருந்தே பெறுகிறது. ஆனால் விண்மீன், அதன் பிறப்பின் பொழுது இருப்பில் இருந்த ஹைட்ரஜன் எரி பொருளை பயன்படுத்தி மட்டுமே உயிர் வாழ வேண்டும் அல்லவா?அப்படிப் பார்த்தால் சிறிய குறைந்த நிறையுடன் பிறக்கும் விண்மீனில் குறைந்த ஹைட்ரஜன் இருப்புதான் இருக்கும். அதனால் குறைந்த ஆயுளைப் பெற வேண்டும். அதிக நிறை கொண்ட விண்மீனில் அதிக ஹைட்ரஜன் இருக்கும் என்பதும், அதிக ஹைட்ரஜன் எரி பொருளைக் கொண்ட விண்மீன் அத...